தை பிறந்தால் வழி பிறக்கும்!
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மறுபடி இந்த பக்கம் காலடி வைக்கிறேன். வாழ்வின் மிக முக்கியமான அழகான மூன்று ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கையில் வெளி உலகத்துடன் பேச எனக்கு ஏதும் இருக்கவில்லை. நானே எனக்குள் பேசிக்கொண்ட வார்த்தைகள் கூட அத்தியாவசியமான அன்றாட வாழ்க்கைக்காக மட்டும் தான் இருந்தது. 'நலம். நலமறிய ஆவல்' போன்ற பொதுப்படை அக்கறை வாக்கியங்களை நெருங்கிய சொந்தங்களுக்கும் நட்புகளுக்கும் கொடுக்கவே வாய்ப்புகள் குறைவாக இருந்த காலம் அவை. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை தான். மாற்றங்கள் வேண்டும் என்று மனம் எப்படி தவிக்கிறதோ, மாற்றம் ஒன்று நடந்துவிட்டால், பழைய நிலையை எண்ணி ஏங்க தொடங்குகிறது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்ற வாக்கியத்தின் கால நிலை பற்றி பேசும் கோணம் இது. இது என்னுடைய இயல்பு தானா? இல்லை உங்கள் எல்லோருக்கும் இப்படி தானா? புதுமை வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு, பழமையின் இனிமையை மெருகேற்றி பேசி புதுமையின் சுவையை உணராமலே போக வேண்டியதாகிறது சில சமயங்களில். எது எப்படியோ. புதுமையோ பழமையோ. மாற்றமோ ஒரே இடத்தில் தேக்கமோ. காலச்சக்கரம் ஓடுவதை நிறுத்துவது இல்லை. நாமும் ஓடியே ஆக வேண்டும...