மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மறுபடி இந்த பக்கம் காலடி வைக்கிறேன். வாழ்வின் மிக முக்கியமான அழகான மூன்று ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கையில் வெளி உலகத்துடன் பேச எனக்கு ஏதும் இருக்கவில்லை. நானே எனக்குள் பேசிக்கொண்ட வார்த்தைகள் கூட அத்தியாவசியமான அன்றாட வாழ்க்கைக்காக மட்டும் தான் இருந்தது. 'நலம். நலமறிய ஆவல்' போன்ற பொதுப்படை அக்கறை வாக்கியங்களை நெருங்கிய சொந்தங்களுக்கும் நட்புகளுக்கும் கொடுக்கவே வாய்ப்புகள் குறைவாக இருந்த காலம் அவை.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை தான். மாற்றங்கள் வேண்டும் என்று மனம் எப்படி தவிக்கிறதோ, மாற்றம் ஒன்று நடந்துவிட்டால், பழைய நிலையை எண்ணி ஏங்க தொடங்குகிறது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்ற வாக்கியத்தின் கால நிலை பற்றி பேசும் கோணம் இது. இது என்னுடைய இயல்பு தானா? இல்லை உங்கள் எல்லோருக்கும் இப்படி தானா? புதுமை வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு, பழமையின் இனிமையை மெருகேற்றி பேசி புதுமையின் சுவையை உணராமலே போக வேண்டியதாகிறது சில சமயங்களில்.
எது எப்படியோ. புதுமையோ பழமையோ. மாற்றமோ ஒரே இடத்தில் தேக்கமோ. காலச்சக்கரம் ஓடுவதை நிறுத்துவது இல்லை. நாமும் ஓடியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம். இது தான் 'அடல்ட் ஹூட்' போலும். செய்வதற்கு நிறைய வேலைகள் ஒன்றின் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் காலத்தை தொலைத்துவிட்டு மற்றவைகளை டீலில் விட்டுவிட்டு புலம்பி தள்ளும் கலாச்சாரத்திற்குள் நானும் குடிபுகுந்துவிட்டேன். யாரிடமும் பேச நேரம் இல்லை என்று புலம்பிக்கொண்டே அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் ஸ்டெபி அக்கா தோட்டத்தில் வளர்க்கும் பச்சைமிளகாய் செடி பற்றி, கும்பகோணம் திருமண விழா ஒன்றில் மணப்பெண் செய்து கொண்ட அலங்காரம் பற்றி, சென்னையில் நடந்த பூணூல் கல்யாண விழாவில் கமலாம்பாள் கேட்டரிங் சர்வீசஸ் போட்ட விருந்தை பற்றி, வேகவைத்த வேர்க்கடலையில் பேப்பர் சுக்கா செய்வது பற்றி, அண்டார்டிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை தனியே பயணம் செய்த ஒரு அடேலின் பென்குயின் பற்றி, இப்படி என் வாழ்க்கைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத பலவற்றை பற்றி தெரிந்து கொள்ள நேரம் செலவிடுகிறேன். என்னையே மறந்து கைபேசியில் துழாவிக் கொண்டு காலத்தை வீணடித்துவிட்டு பின் நேரம்வீணாகிவிட்டதே என்று புலம்பி மேலும் நேரத்தை வீணாக்க தொடங்கிவிட்டேன் கடந்த சில மாதங்கள்/வாரங்களாக. பெண் புத்தி பின் புத்தி என்று என்னால் இப்போது இங்கே மட்டும் ஒப்புக்கொள்ள முடியும்.
இந்த நிலையை சரி செய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்து கொண்டிருக்கையில் தான் 2025 இன் டிசம்பர் மாதம் வந்தது. வழக்கம் போல ஜனவரி வரை காத்திருந்து ஜனவரி ஒன்று முதல் ரெசொலூஷன் எடுத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராம் யூடியூப் ஆகியவற்றில் மிக குறைந்த நேரம் மட்டுமே செலவு செய்து (முற்றிலும் தவிர்ப்பது பெருங்குற்றம்!), வாழ்க்கையின் இன்றைய நொடிகளில் அதிக கவனம் செலுத்தி, மைண்ட்புல்நெஸ் என்ற பிரசித்தி பெற்ற வழிமுறைகளை பின்பற்றலாம் என்று பிளானிங் செய்தே டிசம்பர் மாதம் முழுவதும் ஓட்டினேன். ஜனவரி ஒன்றும் வந்தது. ஆனால் ரெசொலூஷன் எடுக்க கூட நேரமில்லை. வேறு பல வேலைகள் வந்து சேர்ந்துவிட, மறுபடி குட்டிசுவரில் தஞ்சம் அடைந்துவிட்டேன். இருப்பினும் மனம் தாளாமல், தமிழர்களுக்கு புத்தாண்டு தை மாதம் தான் என்று கோட்பாடை நானும் பின்பற்றலாம் என்று எண்ணி தை பொங்கலுக்கு ரெசொலூஷன் எடுத்தேன். எலக்ட்ரிக் அடுப்பில் பொங்கி கொண்டிருந்த பிரஷர் குக்கர் பொங்கல் முன்பு நின்று.
எடுத்துக்கொண்ட ரெசொலூஷனில், முக்கிய ஒன்று மறுபடி எழுத வேண்டும், மக்களுடன் பேச வேண்டும் என்று தான். பொங்கல் முடிந்து பத்து நாட்களுக்கு பிறகு தான் அந்த முக்கிய பணியையே செய்கிறேன். அந்த ரெசொலூஷன் பட்டியலில் இருக்கும் மற்றவைகளின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லை. இப்போதைக்கு இதை செய்து முடிக்கிற மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன். அடிக்கடி பேசுவதற்காக கண்ணம்மா இங்கே வருவேன் என்ற நம்பிக்கையில், பிறந்த இந்த தை மாதம் பல நல்ல பழக்கங்களை பிறக்க வைக்கும் என்ற நம்பிக்கையில், அந்த நல்ல பழக்கங்கள் மூலம் நல்ல வழிகள் தானே தோன்றும் என்று ஆசையில் விடை பெறுகிறேன். நீங்களும் ஜனவரிக்கோ, ஒன்றாம் தேதிக்கோ, திங்கட்கிழமைக்கோ காத்திருக்காமல் அவ்வப்போது தோன்றும் புதிய நல்ல பழக்கங்களை, செய்ய தவறிவிட்ட (மறந்துவிட்ட) நல்ல பழக்கங்களை உடனுக்குடன் செய்ய தொடங்க என் வாழ்த்துக்கள் !!!
Comments
Post a Comment