நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!

"நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க"


இந்த வாக்கியத்தை எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? இதை ஒரு காரணமாக எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், இந்த வாக்கியம் இரண்டு தலைமுறைகளைத் தடம் புரளச் செய்திருக்கிறது. விருப்பப்பட்ட எதையும் செய்யவிடாமல் தடுக்க, கஷ்டமாக இருந்தாலும் அதையே தொடர்ந்து செய்ய, உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைத்தனம் போன்ற நிலையில் இருந்தாலும், மற்றவர்கள் தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்படும் முட்டுக்கட்டை.

இந்த நிலையை எதிர்த்து போராடி, யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நான் இதைச் செய்வேன் என்ற தைரியம் கொண்ட சிலர் வந்த முதல் தலைமுறையில் நானும் இருக்கிறேன். ஆனால் நான் எத்தனை முறை இந்தக் குட்டிச்சுவரைத் தாண்டி வந்தேன் என்று கேட்டால், விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் ஒரு கை விரல்கள் போதும். என் தாயிடம் கேட்டால், நான் தினமும் நான்கு முறை இப்படி ஏதாவது செய்கிறேன் என்று சொல்வார். இதில் மட்டும் அவரை நம்புவது தவறு. நான் பாவம், அப்பாவி. நாலு பேர் அல்ல, ஒருவரும் என்னைப் பற்றி எதுவும் தவறாகப் பேசிவிடக் கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவள். ஆனால் என் வாழ்வின் ஒரு கட்டத்தில், பலர் பல விதமாகப் பேசுவார்கள் என்று தெரிந்தும் நான் செய்ய வேண்டிய அசுர முயற்சி காத்துக்கிடந்தபோது, என்னை நான்கு பேரின் சொற்களைக் கண்டு அடங்கிப் போகச் சொல்லிக் கொடுத்த நபரே "நீ இதைச் செய்தாக வேண்டும். நீ உடைத்துச் செல்லப் போவது பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு சுயசிந்தனையை கொடுக்காமல் இருக்கப் பயன்படும் விலங்குகளை" என்று கூறியதுதான் தாமதம். அதன் பிறகு யார் எது சொன்னபோதும் கேட்காமல் என் இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கினேன். 100 கிலோமீட்டர் தூரம் கூட பேருந்தில் தனியாகப் பயணித்த அனுபவம் இல்லாத நான், ஒரு இரவு என் கனவுகளைத் துரத்திப் பிடிப்பதற்காக 8000 கிலோமீட்டர் தனியே விமானத்தில் பயணிக்கக் கிளம்பினேன். ஆனால் எனக்கு உந்துதல் அளித்த அந்த உயிர் அருகே இல்லை. உலகைவிட்டுப் பிரிந்து இருபது நாட்கள் ஆகியிருந்தது. அதன் பின், வெற்றிகரமாக மூன்று ஆண்டுகள் கழித்து, நான் முதுநிலை பட்டதாரி என்று எங்கள் துறையில் தலைசிறந்த பேராசிரியர் ஒருவரால் பெயர் சூட்டப்பட்டபோது, "எப்போதும் நல்ல பேரே எடுக்க வேண்டும்" என்று தினம் தினம் சொல்லித் தந்த அந்த நபரைத்தான் நினைத்துக் கொண்டேன். "இந்த நல்ல பெயர் போதுமா" என்று கேட்க வேண்டும் போல இருந்தது. கேட்டிருந்தால் "இதெல்லாம் பத்தாது, இன்னும் உயர வேண்டும்" என்று பதில் வந்திருக்க வாய்ப்பு உண்டு. அந்த நம்பிக்கையில் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன். தற்பெருமை தலைவிரித்து ஆடுகிறது தான். இவற்றைத் தட்டச்சு செய்யும் போது கூட நான் உணர்ச்சிகளின் வசம்தான் இருக்கிறேன். 

என்னுடைய இந்த பயணத்தில், நான்கு அல்ல, குறைந்தது பத்து பேர், பல விதமான பேச்சுக்கள். முதலில் இந்த முயற்சியைத் தடுக்க, பின் தடுக்க முடியாது என்று தெரிந்த பின் குறைகள் கூற எனச் சிலர் உண்டு. மொத்தத்தில், யார் என்ன சொன்னாலும் நான் இதைத்தான் செய்வேன் என்று பிடிவாதமாகச் செய்ய ஒரு தனி மனோதிடம் தேவை என்று தெரிந்துகொண்டேன். முதலில் நாம் செய்யப்போகும் காரியத்தில் இருக்கும் சிரமங்களைச் சந்தித்து வெற்றியடைய மனோதிடம் அவசியம். அதன் பின், நம்மைப் பேசுவதற்கு என்றே கைபேசியில் இன்டர்நெட் கனெக்ஷன் வாங்கி வைத்திருக்கும் அந்த நாலு பேரின் பேச்சுக்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் நம்மைச் சுற்றி அரண் அமைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் என்னைப்போல தோற்றுவிட்டால், பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், அந்தப் பேச்சுக்கள் யாவும் நம் முயற்சிகளை நிறுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளத் திடமான மனம் வேண்டும். 

இப்படி சுற்றத்தின் பேச்சுக்களைத் தாண்டி இதற்கு முன் தன் சுற்றத்தில் யாரும் செய்திடாத பல முயற்சிகளைச் செய்த பலரை நான் பார்த்திருக்கிறேன். பழகுகிறேன். நான் செய்த முயற்சி எல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்கத் தோன்றும் விதமாகப் பலர் இருக்கிறார்கள் என்னுடைய வட்டத்திலே. ஆக, இந்த தலைப்பில் இருக்கும் வாக்கியம், எனது தாய் தந்தை தலைமுறைக்கு பெரும் தடங்கலாக இருந்த இந்த வாக்கியம், என் தலைமுறையில் பலம் இழந்துவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு சுதந்திரப் போராட்டம் முடிந்துவிட்டது. இன்றைய தலைமுறையினர் எது வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைச் செய்துகொள்ள ஒரே தேவை, அவர்களின் முயற்சி மட்டும்தான். ஆனால், அடிப்படை பேச்சு உரிமைகள் கூடத் தவிர்க்கப்படும் குடும்பங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக நாலு விதமாகப் பேசும் இந்த நான்கு பேரும் பெண்களுக்கு ஒரு மாதிரி, ஆண்களுக்கு ஒரு மாதிரியும் பேசுவார்கள். இங்கேதான் பெண்ணியத்தின் விதை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். (இந்த தலைப்பைக் கொடுத்தால் இன்னும் ஆவேசமாகப் பேசுவேன். அதனால் இப்போது அதைத் தவிர்த்து கொள்கிறேன்.) இன்னொரு பக்கம், தன் வீட்டு மகன் மகள்களுக்குத் தாராளமாகக் கொடுக்கப்படும் சுதந்திரத்தை பிறர் வீட்டுப் பிள்ளைகள் பெறுவதைப் பார்த்து நான்கு அல்ல நாற்பது விதமாகப் பேசும் ஈனப்பிறவிகளும் இந்த நான்கு பேரில் உள்ளனர்.

இப்படி ஒரு பெரிய முட்டுக்கட்டையைத் தூக்கி தூர வீசிவிட்ட மகிழ்ச்சியை நினைத்து கொண்டிருந்த போதுதான் பூதாகரமான ஒரு உண்மை எனக்குத் தென்பட்டது. நான்கு பேர் பேசும் நான்கு விதத்தில்தான் இந்த உலகமே இன்று சுழன்று கொண்டிருக்கிறது. எப்படி தெரியுமா???? சமூக வலைத்தளம் !!!

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வந்தால் விகடன், தந்தி, ஹிந்து என நான்கு அல்லது ஐந்து பத்திரிக்கை காரர்கள் மற்றும் திரைவிமர்சனம் ஆண்ட்டி, டாப் 10 மூவீஸ் அங்கிள் இவர்கள் தான் கருத்து கூறுவார்கள். ஆனால் இன்று??? இன்ஸ்டாகிராம், யூடியூப், முக நூல் என எல்லாப் பக்கமும் பக்க பக்கமாக கருத்துக்கள். நடுநிலை வகித்து வழங்கினால் மட்டுமே தீர்ப்பு நியாயமானது. பெண் சிசு கொலை பற்றிய படம் எடுத்து அரசாங்கத்தையே திரும்பி பார்க்க வைத்த பாரதிராஜாவே ஆனாலும் படம் நன்றாக இருந்தால் மட்டுமே பாராட்டு.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நின்ற நக்கீரர் போல இருந்தவர்கள் மட்டும்தான் கருத்து கூறினார்கள் அன்று. இன்று, யார் வேண்டுமானாலும் கூறலாம். என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்ற சூழல் இருப்பது பேச்சு சுதந்திரத்தின் மணிமகுடம். ஆனால் பேசுபவர்கள் யாவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேசுகிறார்களா? தங்கள் பேச்சால் எந்த உண்மையான உழைப்பும் கொச்சை படுத்தப் படக் கூடாது என்று உணர்கிறார்களா என்றால்... பதில்…. நீங்களே அறிந்தது ..

வெளிநாட்டு சாதாரண மக்கள் இந்திய திரைப்படங்களைப் பார்த்து, திரைப்படப் பாடல்களைப் பார்த்து என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அத்தனை ஆயிரம் இந்திய மக்களுக்கு ஆர்வம். அவர்கள் படம் பார்க்கும் காட்சியைக் காணொளியாகப் பதிவு செய்து மூன்று மணி நேரத் திரைப்படத்திற்கு மூன்று மணி நேர ரியாக்ஷன் வீடியோ போடுகிறார்கள். அதை காசு கொடுத்துப் பார்க்கிறார்கள் நம் மக்கள். ஆக, அவன் என்ன நினைக்கிறான், அவன் என்ன சொல்கிறான் அந்த படத்தைப் பற்றி என்று தெரிந்து கொள்வது இத்தனை மக்களுக்கு முக்கியமாகிவிட்டது.

இந்த யூடியூப் செயலியில் ஆபாசமாக இல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் வெளியிடலாம். சில பிரபலங்கள் தங்கள் வீட்டுத் தோட்டம், வீட்டுக்குச் செய்திருக்கும் இன்டீரியர் டெக்ரேஷன்ஸ் பற்றிப் பேசி நேர்காணலில் காணொளியாகக் கொடுப்பார்கள். அதுவே அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்க்கும் ஒரு தவறான விஷயம் என்று கூறலாம். ஆனால், பிரபலம் என்ற பெயரைத் தானே தனக்குக் கொடுத்துக்கொண்ட சிலர், தங்கள் வீட்டில் வாங்கிய புது சோஃபா பற்றி, அமேசானில் கிடைத்த விலை குறைந்த பிளாஸ்டிக் டப்பாவைப் பற்றி, சமையல் செய்யும் போது பயன்படும் கையளவு உள்ள உரல் பற்றி, பிஸ்தா பருப்பு ஓட்டை வைத்து செய்த பூச்செடி பற்றி, சுற்றுலா சென்ற இடத்தில் தங்கிய விடுதியின் அறைகள் பற்றி என அனைத்திற்கும் காணொளிகள். இவை அனைத்தும் யாரோ ஒருவருக்கு உதவியாக இருக்கும் தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த காணொளிகளை வெளியிடுபவர்கள் அதில் வரும் கமெண்ட் ஒவ்வொன்றையும் அதிக சிரத்தை கொண்டு பார்க்கிறார்கள். பார்வையாளர்களும் பிற பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

காண்பிக்க வேண்டியதை காண்பித்து, சொல்ல வேண்டியதை உலகிற்கு சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போகும் நபர்கள் மிகக் குறைவானவர்கள் தான். நம்முடைய பதிவிற்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள், யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதில் தான் அத்தனை ஈடுபாடு.

இந்த ஒரே கோட்பாட்டை மையமாக கொண்டு தான் சமூக வலைதளங்கள் உயிருடன் இருக்கின்றன. நீங்கள் நினைத்தவற்றை பகிரலாம், அதற்கு யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம், அந்தக் கருத்துக்களைக்கு யார் வேண்டுமானாலும் மேல் கருத்து கூறலாம், வாதாடலாம், இந்த கலாட்டாக்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இது தான் இன்றைய உலகம்.

அன்று நாலு பேர் பேசுவதை பார்த்து பயந்து நடுங்கி நின்ற நாம் இன்று நம்மை பற்றி யார் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்று கூறுகிறோம். வெளிப்படையாக பார்த்தால் இது மாபெரும் வெற்றி. ஆனால், பலரும் பேச நமது உலகத்தை திறந்து காட்டும் நாம், சரியானதை பேசுகிறோமா, நாகரிகம் அறிந்து பேசுகிறோமா, பிறரை காயப்படுத்தாமல் பேசுகிறோமா என்றெல்லாம் பார்க்க தவறிவிட்டோம். இளைஞர் சமுதாயத்திற்கு இந்த விதிமுறைகள் எல்லாம் முக்கியம் என்று சொல்லி கொடுக்கவே மறந்துவிட்டோம்.

அதனால் தான் கூட்டம் நிறைந்த ரயிலில் பெண்கள் மத்தியில் நின்றாலும் கண்ணியமாக நின்ற ஒருவரை பற்றி தவறாக தலைப்பு கொடுத்து காணொளி வெளியிட்டு, நடந்தது என்னவென்றே தெரியாமல் தலைப்பை பார்த்துவிட்டு வெட்டி பெருமை பேசும் பெண்ணியவாதிகள் கருத்துக்கள் தெரிவித்து ஒருவரின் உயிரே பறிபோய்விட்டது. தவறான கருத்தை அந்த காணொளியில் பதிவு செய்த ஒவ்வொருத்தரும் குற்றவாளிகள் தானே. யார் என்ன பேசினாலும் நான் தவறு செய்யலை கலங்க போவதில்லை என்று இருக்க தெரியாத அந்த நபரின் மீது குற்றமா?

பழங்காலத்தில் நாலு விதமாக பேசியவர்கள் நால்வருமே ஒருவரை பற்றி ஒருவர் அறிந்தவர்கள் தான். சம்பந்தம் இல்லாத யாரையும் பற்றி பேசவில்லை. ஆனால் இன்றோ, முகம் காட்டாமல், உண்மை பெயரை கூட காட்ட தைரியம் இல்லாத பலர் வாய்க்கு வந்தபடி, கைக்கு வந்த படி பேச உலகமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தெரிந்த நால்வரின் பேச்சுக்களிடமிருந்து சுதந்திரம் பெற்று கொடியதொரு முதலை போன்ற உலகத்தின் வாயில் சிறை செல்ல தயாராக இருக்கிறோம்.

எல்லா மனதும் பாராட்டுதலுக்காக தான் ஏங்கி கிடக்கிறது. நல்லதையே பகிர்ந்து, நல்ல கருத்துக்கள் மட்டுமே பதிவிட்டு, எல்லோருக்கும் ஊக்கம் அளிக்கும் உலகமாக இது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பிறர் பேசுவதை பற்றி இவ்வளவு பேசுகிறேனே… நான் மட்டும் என்ன விதிவிலக்கு? காணொளிகள் பார்கிறேனோ இல்லையோ, கமெண்ட்ஸ் நிச்சயம் பார்ப்பேன். மற்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்க்கும் இன்னொரு வகை ஈன பிறவி என்ற பிரிவில் வருகிறேன். ஆனால் இது நாள் வரை யாரையும் தவறாகவோ, எந்த முயற்சியையும் இழிவு படுத்தியோ நான் கமெண்ட் செய்தது இல்லை. மிகவும் வக்கிரமாக கருத்து தெரிவித்தவர்களிடம் கூட நீங்கள் பேசாமல் இருப்பது நல்லது என்று தான் கூறியிருக்கிறேன். அது வரை என்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.

இந்த நீண்ட பதிவை இறுதி வரை படித்து முடிக்கும் அந்த நான்கு நல்ல உள்ளங்கள் என்னென்ன விதமாக பேசுவார்கள் என்ற ஆர்வத்தில் தான் கீழே கமெண்ட் பகுதியை திறந்து வைத்திருக்கிறேன்… எதையும் தாங்கும் இதயத்துடன். உங்கள் உள்ளதில் உள்ளதை உள்ளபடியே பகிரலாம். மொத்தத்தில், நான்கு பேர் பேசும் நான்கு விதத்தில் தான் பூமியே சுழன்று கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்