உணர்ச்சிகளின் வசம்
பதினோராம் வகுப்பு சேர்க்கையின் போது என் பள்ளியில் பல மாணவர்கள் இரண்டாம் மொழியை தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மாற்றிக்கொண்டார்கள். வேறு பள்ளியில் படித்த நண்பர்களை கேட்டு பார்த்தால், அவர்கள் பிரெஞ்சு மொழிக்கு மாறிவிட்டதாக கூறினார்கள். அனைவரும் கொடுத்த காரணம் - பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்க சுளுவான மொழி தான் உதவும் என்றார்கள். எனக்கும் சரி, என் தந்தைக்கும் சரி, அந்நேரத்தில் ஒரு அகந்தை. மதிப்பெண்களுக்காக தாய் மொழியை விட்டு கொடுப்பதா என்று. அதனால் நான் ஆங்கில வழி கல்வியின் பொது தேர்வுக்கு தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக படித்து கணிதம் அறிவியலை போல தமிழிலும் எண்பது சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்றேன். ஒரு அகந்தையோடு படித்த தமிழை அதன் பிறகு நான் தொடவே இல்லை என்ற கசப்பான உண்மையை ஐந்தரை ஆண்டுகள் கழித்து நான் உணர்ந்தேன். நாள் ஒன்றிற்கு எட்டு மணி நேரம் வகுப்பு மற்றும் நான்கு மணி நேரம் பேருந்து பயணம் என்ற பொறியியல் கல்லூரி வாழ்க்கையில் குமுதம் குங்குமம் அளவிற்கு கூட தமிழுடன் தொடர்பு இல்லாமல் போனது. அடுத்து படிப்பிற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு மென்ப...