கடவுளை எங்கே காணலாம் ???

 ஏறக்குறைய நான்கு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு, வழக்கம் போல, அடுத்த இரண்டு நாட்கள் பணியிடத்திற்கு செல்ல வேண்டாம் என்ற மிதப்பில், வகையான உணவு ஒன்றை வாங்கிவந்து எனது வரவேற்பறையில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு கணினியில் சினிமா படம் ஒன்றை ஓட செய்தேன். கூடுதல் ஒலிபெருக்கி ஒன்றை கணினியுடன் தொடர்பு செய்து நல்ல வாட்டமாக சோபாவில் அமர்ந்து சுட சுட சுவையான உணவை ரசித்துக்கொண்டே அந்த படத்தை பார்க்க தொடங்கினேன். முதல் ஐந்து நிமிடத்திலேயே “என்ன டா மானிட பிறவி ” என்று மனம் நொந்து போனேன். காரணம் - நான் பார்க்க தேர்ந்தெடுத்த படம் ‘ஜெய் பீம்’. 


உடனே யாரும் “அட இவளும் இதே பிரச்சனை ய தான் பேசுறாளா?” என்று படிப்பதை நிறுத்திவிட்டோ, “இவ சொல்றது லேந்து ஏதாவது தப்பு கண்டு புடிச்சே ஆகணுமே” என்று ஆர்வ கோளாறோடு கண்ணை உருட்டி கொண்டோ மேலே போக வேண்டாம். நான் அந்த படம் கூறிய, கூற விரும்பிய, சிலர் கண்ணுக்கு பட்ட, பலரின் அறிவு கண்களை திறந்த எந்த விஷயத்தைப் பற்றியும் இங்கே பேச போவதில்லை. குறிப்பாக இந்த பதிவில் பேசப்  போவது இல்லை. 


மாநகர வாழ்க்கை தான் மக்களின் சராசரி வாழ்க்கை என்று பதினேழு வயது வரை நினைத்துக்கொண்டிருந்த நான், கல்லூரி படிப்பின் காரணமாக சென்ற ஊரில் தான் முதன் முதலில் சேற்றில் இறங்கி நாள் கூலிக்கு வேலை பார்க்கும் மக்களை பார்த்தேன். ஒரு நாள் இரவு பேருந்தில் வயலிலிருந்து வேலை பார்த்துவிட்டு வந்த பாட்டி என் இருக்கையின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து, நடத்துனர் வரும் முன்பே அவளது கைப்பையில் இருந்த சில்லறைகளை எடுத்து எண்ணி வைத்தாள். நான், என் அப்பா கொடுத்த நூறு ரூபாய் தாளை எடுத்து வைத்துக் கொண்டு தயாராக இருந்தேன். நடத்துனர் வந்ததும் அந்த பாட்டி சில்லறைகளை கொடுத்து அவளது ஊர் பேரை சொன்னதும் அந்த நடத்துனர் அன்றிலிருந்து பேருந்து கட்டணம் ஐந்து ரூபாய் ஏற்றப்பட்டு இருப்பதை கூறினார். அவ்வளவு தான். அந்த பாட்டி போட்ட கூப்பாடு ஓட்டுனரையே பின் காட்டும் கண்ணாடி வழியாக இங்கே பார்த்து கத்த செய்தது. அந்த பாட்டி அத்தனை கோவ பட்டதற்கு காரணம், அவளிடம் மேலே கொடுக்க ஒரு ரூபாய் கூட இல்லை என்பதால். அன்றைய நாள் கூலி, அடுத்த நாள் உணவிற்கு தேவையான பொருட்கள் வாங்கியது போக சரியாக பேருந்து கட்டணம் மட்டும் தான் வைத்திருக்கிறாள். கட்டண உயர்வை கண்டித்து குரல் கொடுத்த முதல் பெண்மணி என் வரையில் அந்த பாட்டி  தான். கொடுத்த குரல் மூன்றே நிமிடத்தில் அழுகையாக மாறி விட்டது. அடுத்த நாளிலிருந்து ஒரு வேளை உணவை குறைத்தால் தான் வேலைக்கு செல்ல முடியும் என்று புலம்பினாள். அந்த நடத்துனரிடம் என் கையில் இருந்த பணத்தை கொடுத்து அந்த பாட்டிக்கு தேவையான ஐந்து ரூபாயையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினேன். உடனே அந்த பாட்டி என்னிடம் அவளது கதையை பேச தொடங்கிவிட்டாள். அவள் வசித்து வந்த ஊரில் அவள் சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்த குடும்பமாம். சில ஆண்டுகள் முன், அரசாங்கம் கூறும் விளைச்சல் பொருட்களை மட்டும் தான் விளைவிக்க முடியும், அரசாங்கம் கொடுக்கும் விதைகளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும், அவர்கள் வளர்த்து எடுத்து வரும் பொருட்களுக்கு விலை அவர்கள் நிர்ணயிக்க முடியாது என்று வரிசையாக போடப்பட்ட திட்டங்களால் அவர்களது நிலம் விளைச்சல் இல்லாமல் வெறும் பூமியாக மாறிய கதையை கூறினாள். இந்த திட்டங்களை பற்றி எங்கள் வீட்டு பெரியவர்கள் பேசி நான் கேட்டது உண்டு. இந்தியா வல்லரசு ஆக போவது நிச்சயம் என்று கூறி இதே தலைப்புகளை பேசியிருக்கிறார்கள். இங்கே கண்முன்னே இந்த பாட்டி கூறும் நிஜத்தில் தான் இந்தியாவின் வல்லரசு கனவு இருக்கிறது என்று நான் புரிந்து கொண்ட இரவு அது. கவலை வேண்டாம். விவசாய பிரச்சனை பற்றியோ, இந்தியாவின் வல்லரசு நாடாகும் திட்டங்களை பற்றியோ நான் இந்த பதிவில் பேச போவதில்லை.


அன்று நான் என்னிடம் மீதம்  இருந்த எழுபது ரூபாயை கொடுத்த போது அந்த பாட்டி வாங்க மறுத்துவிட்டாள். அதனால் அவள் இறங்கிய அந்த மின்விளக்கு கூட இல்லாத கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினேன். அந்த இருட்டில் ஒரு தாத்தா பழம் விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த எழுபது ரூபாயை கொடுத்து அதுக்கு வரும் பழங்களை தர சொன்னேன். அந்த தாத்தா முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். பாவம் வியாபாரம் அத்தனை மோசமாக இருந்தது போல. அந்த பழத்தை வாங்கி அந்த பாட்டியிடம் கொடுத்தேன். அவள் என்னை கருவாட்டு குழம்பு சாப்பிட வீட்டிற்கு அழைத்தாள். ஊர் பேர் தெரியாத இடத்தில் நிற்கிறேன். அடுத்த பேருந்து வரும் வரை எப்படி நிற்க போகிறோமோ என்று நான் பயந்தது அவளுக்கு தெரிந்தது போல.  ஆனால் நாங்கள் இறங்கிய பேருந்து கிளம்பாமல் நின்று கொண்டே இருந்தது. அந்த நடத்துனர் “வந்து ஏறு மா…” என்று குரல் கொடுத்தார். நான் அந்த பாட்டியிடம் நன்றி சொல்லிவிட்டு ஓடி வந்து பேருந்தில் ஏறிக்கொண்டேன். அன்று இரவு சத்தம் வராமல் எவ்வளவு அழ முடியுமோ அவ்வளவு அழுதேன். வறுமையை பார்க்காதவள் இல்லை நான். நாங்களும் பணத்திற்காக பாடு பட்டிருக்கிறோம்.  ஆனால் இது என்ன. அடிப்படை வாழ்வாதாராமே அழிந்து கொண்டே இருக்கும் வறுமை. இன்று நான் கொடுத்துவிட்டேன். நாளை, அதற்கு அடுத்த நாள், அதற்கும் அடுத்த அடுத்த நாட்கள் அந்த பாட்டி  என்ன செய்வாள். அவளை போல எத்தனை பாட்டிகள். எல்லோருக்கும் யார் உதவுவார்கள். இந்த கடவுள் என்ன அரசாங்கம் போல இப்படி கண்டுகொள்ளாமல் நிற்கிறாரே என்று நினைத்து அழுதேன். 


‘ஜெய் பீம்’ படத்தின் தொடக்கத்தில் எலி அடித்து உண்பதை பற்றி அவர்கள் பேசியதை பார்த்ததும் அழுகை தயாராகிவிட்டது எனக்கு. எட்டு வருடங்கள் முன்னாள் நான் உதவி செய்த பாட்டி இதே போல் எங்கேயோ எலி பிடித்துக் கொண்டு இருப்பாளோ என்று நினைக்க நினைக்க எனக்கு மனம் பாரமாகிவிட்டது. கையில் சூடாக இருந்த சுவையான உணவு உள்ளே இறங்க வழியில்லாமல் நின்றது. அதை தள்ளி வைத்துவிட்டு மனதை திட படுத்திகொண்டு படத்தில் கவனம் செலுத்தினேன். அதில் நடித்த ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள். கதை நகர நகர அவர்களின் வறுமை எங்கோ பின்னே சென்றுவிட்டது. முன்னே வந்து நின்றது - ரத்தம் உறைய வைக்கும் அநீதியும், கண்களை மூட வைக்கும் வன்முறையும். இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நியாயம் ஜெயித்தது. படம் முடிந்தது. ஆனால்  என் மனம் நிலை கொள்ளவில்லை. அதன் பிறகு இதுபோன்ற குற்றங்கள் நடக்கவில்லையா? இல்லை இதே போல் உண்மை ஜெயிக்காமல் இருக்க இன்னும் கூடுதல் கவனத்துடன் அநீதிகளை இழைத்து கொண்டே இருக்கீறார்களா ?  இந்த கேள்விகள் சிறிதளவு தான் என் மனதில் நிறைந்தது. 


என் மனதின் பெரும் பகுதியை ஆட்கொண்ட கேள்வி - உயிர் போகிற வரை அவன் பெற்ற ஒவ்வொரு அடியையும் அவன் எப்படி உணர்ந்திருப்பான். எத்தனை கொடுமை அது. வார்த்தைகள் நிச்சயம் கிடையாது அந்த வலிகளை சொல்ல. அந்த கடவுள் எப்படி இதை பார்த்துக்கொண்டே இருந்திருப்பார்.  கடவுளின் மனதில் என்ன தோன்றியிருக்கும் இந்த சம்பவங்கள் நடக்கும் போது ? போன ஜென்மத்தில் இவன் செய்த பாவங்களுக்கு இப்போது அனுபவிக்கிறான் என்றா? இல்லை இந்த கொடுமைகளோடு இவனது பிறவி முடிந்துவிடும், இவன் மோட்சம் அடைந்து என்னிடம் வந்து விடுவான் என்றா?  எதுவாக இருந்தாலும் அது எப்படி சரியாகும். அடைபட்டு அடிபட்ட நாட்கள் ஒவ்வொரு நொடியும் உயிர்வதை தரும் வேதனையை அனுபவிக்க செய்து முக்தி கொடுப்பது என்ன கடவுள்? எப்படி இது சரியாகும்? எத்தனை தவறு செய்தாலும் மன்னித்து அரவணைக்கும் ஒவ்வொரு தாயின் கால் தூசிக்கு சமமாகுமா இந்த சோத்தித்து பலன் தரும் கடவுள்? ஒரே நேரத்தில் ஒரே நிகழ்வில்  ஒரு உயிர் துன்பப்படுவதையும், மற்றும் ஒரு உயிர் வெறி தீர அக்கிரமம் செய்வதையும், மற்றும் ஒரு உயிர் செய்வதறியாது தவிப்பதையும் எப்படி அந்த கடவுளால் பார்த்து சகித்து கொள்ள முடிகிறது. அந்த மாதிரி தீய எண்ணங்கள் அவன் மனதில் வராமல் தடுத்திருக்கலாமே… திருவிளையாடல்கள் நிகழ்த்த எத்தனை மனித உயிர்கள் அடிப்பட வேண்டியிருக்கிறது? 


இப்படியெல்லாம் என் மனதில் கடவுளை எதிர்த்து அத்தனை பெரிய போராட்டம் அன்று இரவு. கடல் கடந்து வந்து வாழ்ந்தாலும் கடவுள் ஒருவன் தான் உயரிய துணை என்று நம்பி அந்த வரவேற்பறையில் ஒரு பகுதியில் ஹிந்து மதத்தின் பெரும்பாலான கடவுள்களின் படங்களை ஒட்டிவைத்து, இந்த -3 டிகிரி குளிரிலும் காலை பணிக்கு செல்லும் முன்பு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஊதுபத்தி கொளுத்தி வணங்கிவிட்டு செல்லும் பேர்வழி நான். ஒரு படத்தில் ஒரு மனிதர் உயிர் போகிற சித்திரவதை படுவதை போல நடிப்பதை பார்த்த்தும் கடவுளை கண்ணா பின்னா என்று பேச தொடங்கிவிட்டேன். என் முன்னே இருந்த சாமி படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே சிந்தித்தேன். 


ஒரு வேளை ஹிந்து வழக்கம் சொல்கிறபடி கலியுகம் என்பதால் இத்தனை அக்கிரமங்கள் நடக்கிறதோ. முன் காலங்களில் இதை போன்ற கொடுமைகள் நடக்கவில்லையோ என்று எண்ணிய நொடி மேலும் வலித்தது என் இதயம். தமிழர்கள் பொற்காலமாக பார்க்கும் சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட சங்க காலங்கள் மட்டும் என்ன விதி விலக்கா? மண்ணுக்காகவும், பெண்ணுக்காகவும், வீண் கோபத்திற்காகவும், அனைவரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற பேராசைக்காகவும், தனது மொழி தனது மதம் தனது தர்மமே தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவும் தானே இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளாக அத்தனை போர்கள். உயிர் துறந்த ஒவ்வொரு வீரனும் அந்த படத்தில் வந்த கதாபாத்திரம் போல தானே துடிதுடித்து மாண்டிருப்பார்கள். அந்த திரைப்படத்தில் நீதிக்காக அந்த பெண் அலைந்ததை போல எத்தனை பெண்கள், கணவனை போர்க்களத்திலும் உளவறிதலிலும் ஒற்றறிதலிலும் கடல் பயணத்திலும் தொலைத்துவிட்டு தங்கள் உயிர் போகிறவரை தேடி அலைந்திருப்பார்கள். எத்தனை பேருக்கு நீதி கிடைத்திருக்கும். நீதி கிடைத்து மட்டும் என்ன பயன்? போன உயிர் திரும்பவா திரும்பும்? இல்லை உயிர் போகிறவரை அனுபவித்த வலிகளுக்கு என்ன பதில்? கிடைத்த நீதி இனி அப்படி தவறு நடக்காமல் பார்த்து கொண்டதா என்ன? இல்லவே இல்லை. பல கோடி ‘ஜெய் பீம்’ கதைகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. பற்பல கோடி யுத்தங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான். 


ஒரு தாய் தான் பெற்றது பத்து பிள்ளைகளாக இருந்தாலும் அத்தனைக்கும் பாகுபாடின்றி அன்பு செலுத்துவாள். பூமியின் மேல் இருக்கும் எல்லா உயிருக்கும் தாயுமானவன் எப்படி இத்தனை உயிர்களை பலி கொடுத்து இத்தனை உயிர்களுக்கு அநீதி இழைத்துவிட்டு ஒரு சில உயிர்களுக்கு மட்டும் நல்லது செய்ய முடியும்?  


சங்க காலம் கூட கலியுகம் என்று வைத்துக்கொள்வோம். கொடிய மக்கள் கேடு எண்ணங்கள் நிறைய பெற்றதனால் கடவுள் கந்துவட்டி காரனைப்போல் கணக்கு பார்த்து பழி வாங்க தொடங்கிவிட்டார் என வைத்துக்கொள்வோம். முன் சென்ற யுகங்களை தேடி பார்ப்போம். ஹிந்து மதம் கடவுளாக வணங்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் கதைகள் உண்டு. அசுரனை வதம் செய்து நன்மையை நிலைநாட்டிய கதை உண்டு. அதில் முக்கியமாக கூறப்படும் சில கடவுள்களே போர் செய்து தான் கடவுள் ஆகியிருக்கிறார்கள். என்ன செய்து? போர் செய்து… சாதாரண போர் இல்லை. வருடக்கணக்காக நீண்ட போர் கதைகள் கூட உண்டு. அங்கேயும் மண்ணுக்காக போர், பெண்ணுக்காக போர், தவறான நட்புக்காக போர்.  ஆக…. கடவுளே கண்முன் நின்றாலும் லட்சக்கணக்கில் உயிர்கள் வதைக்க படுவதை ஒன்றும் செய்ய முடியவில்லை. அசுரனை அழிக்க வந்த கடவுள், அந்த அசுரனுக்கு முன்னே நின்ற அத்தனை பெரிய படையையே கொன்ற பிறகு தான் அவனை அழித்தது. காக்கும் கடவுளுக்கு எப்படி தவறே இழைக்காத அந்த வீரர்களை வதம் செய்ய மனம் வந்தது? பின் எப்படி அது கடவுள் ஆனது?


அப்போது அந்த இரவு என் மனம் அடைந்த நிலை - கடைசியில் நான் உருக உருக வணங்கும் கடவுளே ‘ஜெய் பீம்’ படத்தில் வரும் காவல் காரர்கள் கதாபாத்திரம் போல தோன்றிவிட்டது. ஹிந்து மதம் தான் இப்படியோ என்று சிந்தித்தேன். மேல் நாட்டு மதங்களை பற்றி பெரிதாக தெரியாவிட்டாலும் மதம் என்று உருவான போதிலிருந்து இன்று வரை இந்த மக்கள் அடிக்கும் லூட்டியை பார்க்கும் போது “யப்பா சாமி… நான் எங்க ஊரு பஞ்சாயத்தே பாத்துக்கிறேன்” என்று தோன்றியது. இந்திய மண்ணில் தோன்றிய புத்த மதம் சிறிது ஒளியுடன் தென்பட்டது. போர் வரலாறுகள் இல்லை. வன்முறை இல்லை. அன்பே அந்த மதமாய் தெரிந்தது. ஆனால் அங்கேயும் ஒரு சிறிய பின் கதை உண்டு.


நான் எட்டு வயதாக இருந்தபோது. பள்ளி ஆண்டு விழாவில் இளவரசர் சித்தார்தர் எப்படி கெளதம புத்தர் ஆனார் என்ற கதையை நாடகமாக நடத்தினார்கள். அதில் நானும் பங்கு கொண்டேன். இளவரசர் சித்தார்தர் பின்னால் வெண் சாமரம் வீசும் பெண்ணாக. வசனங்கள் எதுவும் இல்லை என்றாலும் பல முக்கிய காட்சிகளில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன். சித்தார்தனாக நடித்த அண்ணா அத்தனை அம்சமாக இருப்பார். நடிப்பும் அப்படியே. நாடக ஒத்திகையின் போது  என் முகத்தில் ஈயாடாது. அப்படி பார்த்துக்கொண்டே நிற்பேன்.  கதையின் முடிவில் இளவரசர் தனது காதல் மனைவி பிள்ளை தாய் தந்தை நாட்டு மக்கள் என அனைவரையும் விட்டுவிட்டு துறவறம் பூண்ட காட்சி. அதை முதல் நாள் பார்த்த போது நானே அழுதுவிட்டேன். மூன்று நாட்கள் ஒத்திகையில் பார்த்த பின்பு இன்னும் இரண்டே நாட்களில் ஆண்டு விழா என்றிருக்க, நான் வீட்டிற்கு வந்து ஒரே அழுகை. அது எப்படி சித்தார்தர் அவர் மனைவியை இப்படி அழ வைத்துவிட்டு போகலாம். பாவம் அவர் பிள்ளை. என் அப்பா அப்படி எங்களை விட்டுவிட்டு போனால் நான் என்ன ஆவேன் என்ற எண்ணம் எனக்கு அப்படி ஒரு அழுகையை தந்தது. கடைசியில் ஜுரம் வந்து ஆண்டு விழாவில் பங்கு கொள்ளாமல் போனதற்கு சந்தோசம் தான் பட்டேன். எட்டு வயதில் எனக்கு ஒரு பெருமை. ஒரு குடும்பத்தை அழ வைத்து சென்ற கடவுளுக்கு நான் சாமரம் வீசவில்லை என்ற பெருமை. 


ஹிந்து மத கடவுள்களின் மேல் இருந்த கோபத்தில் புத்த பெருமானின் ஒளியை பார்க்க முயன்ற போது எட்டு வயதில் என் மனதில் ஏற்பட்ட ரணம் நினைவில் வர, நான் மறுபடி தடுமாறினேன். அதன் பின் இருவது வருடங்கள் ஆகிவிட்டது. உலகம் புரிய தொடங்கிவிட்டது. ஒரு பெரிய சமுதாயத்தின் நன்மைக்காக வருங்கால உலகத்தின் அமைதிக்காக அவர் செய்த தியாகம் சரியானது என்று என் மூளை தீர்மானித்தாலும், அன்று என் கண்முன்னே சித்தார்தரின் மனைவியை போல நடித்த அக்கா அழுததை காட்டிலும் எத்தனை மடங்கு அவருடைய மனைவி அழுத்திருப்பாள் என்று எண்ணும் போது, காதலித்து மணமுடித்த மனைவியின் கண்ணீர் மேல் மிதந்து சென்று உலகத்தை காத்து என்ன பயன் என்று எனக்குள் இருக்கும் பெண்மை விடாமல் போர் கொடி தூக்கியது. கூடவே அவர் போய் தியானத்தில் அமர்ந்து மட்டும் என்ன பயன்? இத்தனை ஆயிரம் ஆண்டு காலத்தில் அவர் கூறிய நன்னெறிகளை பின் பற்றிக் கொண்டே அநீதி இழைத்தவர்களை  இழைப்பவர்களை கண்டு கொள்வது கடினம் அல்ல.  தவம் செய்து கடவுளாக மாறிய புத்த பெருமான், அவர்களை பார்த்துக்கொண்டே தான் இருந்தாரா? சில நிமிடங்கள் முன் நான் கேட்ட  கேள்விக்கு பதில் இல்லாமல் நான் வணங்கும் கடவுள் நிற்பதை போல தானே அவரும் இப்பொது நிற்கிறார். இந்த எண்ணம் வந்ததும் என் மீதே எனக்கு வெறுப்பு வந்துவிட்டது. நான் யார்? பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்படும் கடவுள்களிடம் கேள்வி கேட்டு குறை கண்டு பிடித்து குற்றம் சாட்டி நிற்க வைக்க நான் யார்? அதுக்கு தகுதியே இல்லாதவள் நான்.


இந்த குழப்பத்தின் உச்சத்தில் தவித்தபோது என் மனதில் ஒரு ஞாபகம் உதயமானது. என்றோ ஒரு நாள் பார்த்த ஆங்கில நகைச்சுவை தொடரில் வரும் ஒரு காட்சி. இந்த பிரபஞ்சம் என்பது எத்தனை பெரிய பொருள். அதற்குள் பல கோடி விண்மீன் பேரடைகளை (galaxy) கொண்டது. அதில் மிக சிறிய பால்வெளி (milkyway) தான் நாம் இருக்கும் பகுதி. அந்த பால்வெளியிலும் எத்தனை கோடி சூரியன்கள். அதில் ஒரு சிறிய சூரிய குடும்பத்தில் ஒரு கோளான பூமியில் ஒரு உயிர் தான் நாம். பிரபஞ்சம் என்னும் ஒரு பெரிய வரைபடத்தில் ஒரு சிறிய மை துளி கூட கிடையாது மானிட பிறவிகள் மொத்தத்தின் மதிப்பும். அப்படியிருக்க… எதற்காக நாம் இப்படி ஈன பிறவிகளாக வாழ முற்படுகிறோம்.  பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளை பற்றியோ பிற உயிரினங்கள் பற்றியோ அமெரிக்கர்கள் எடுத்த ஹாலிவுட் கற்பனை திரைப்படங்களை தவிர வேறு எதுவுமே தெரியாது நமக்கு. நம்முடைய சூரியனின் வெளி மண்டலத்திற்கே இந்த வாரம் தான் ஒரு சாதனத்தை அனுப்பியிருக்கிறோம். இந்த நிலையில் மனித வாழ்க்கை எத்தனை அற்பமானது என்று தோன்றியது எனக்கு.


பிரபஞ்சத்தின் உள்ளே இருக்கும் அனைத்து உயிர்களையும் படைத்தது ஒரே கடவுள் தான். அதை யாருமே மறுக்க மாட்டார்கள். அந்த கடவுள் எந்த கடவுள் என்பதில் தான் பிரச்சனை நமக்கு. அனைத்து உயிர்களையும் படைத்த கடவுள் மனித உருவமாக தான் இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானித்த போதே மானிட பிறவிகள் ஈன பிறவிகள் ஆகிவிட்டோம். ஒரு எறும்பு அதை படைத்தது மனித உருவம் கொண்ட ஒரு சக்தி தான் என்று ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும். அது ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால் நாமே தீர்மானித்துக் கொண்டோம். சிங்கமோ புலியோ டைனோசரோ நம்மை போல பகுத்தறிவு பெற்று நம்முடன் வாழும் நிலையில் இருந்தால் அப்போது சொல்லி இருப்போமா? உன்னை படைத்த பரமனும் மனிதன் தான் என்று? நிச்சயம் முடிந்திருக்காது. எதிர்த்து கேள்வி கேட்க ஆள் இல்லாததால் தான் கடவுள் என்ற சக்திக்கு மனித உருவம் கொடுக்க பட்டது. இப்படி முடிவெடுத்த பின்னர் எப்படி சமத்துவத்தை இதே மனித பிறவிகளிடம் எதிர்பார்ப்பது. முன்னர் மனித பிறவி தான் உயர்ந்தது என்று முடிவு கட்டிக்கொண்டோம். பின்னர் இந்த மனித பிறவிகளுக்குள்ளே எது உயரிய பிறவி என்று தோன்றிய கேள்விக்கு  கிடைத்த பதில்கள் தான் இத்தனை போர்களும் அநீதிகளும்.


இதோடு நிற்கவில்லை எனது சிந்தனை தொடர்கள் அன்றிரவு. எல்லையில்லா பிரபஞ்சத்தின் ஒரு புள்ளி அளவு கூட இல்லாத இந்த மனித வாழ்க்கையை பெற்றிருக்கும் நாம் என்ன தான் செய்வது? மனித உருவம் பெற்ற கடவுள் என பெயர் கொடுக்கப்பட்டிருப்பது மகா மனிதர்களுக்கு தான். நீதியை நிலை நாட்டி பல மக்களை காத்தவர்கள் தான். நன்னெறிகளையும் நற்பண்புகளையும் அன்பு காட்டி வாழ சொன்னவர்கள் தான். ஆனால் என்னை போல் ஒரு அபலை எந்த தருணத்திலும் துணை நிற்க வேண்டிக்கொள்ளும் தனிப்பெரும் துணையாக இருக்க எல்லா உயிரையும் காக்கும் கடவுளாக அவர்களை கொள்வது சரியல்ல என்று தான் தோன்றுகிறது.


நிச்சயம் கடவுள் என்றொரு சக்தி இருக்கிறது. உதாரணம் -  புவி ஈர்ப்பு விசை. அது கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தால் நாம் அனைவரும் பூமியின் எல்லா பொருட்களும் ஒரு சிறு புள்ளியாக ஆகியிருப்போம். அதுவே சற்று குறைவாக இருந்திருந்தால் நம்மால் மண்ணில் நிற்கவே முடிந்திருக்காது வெளி மண்டலத்தில் மிதந்திருப்போம். நிச்சயம் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி தான் புவி ஈர்ப்பு முதற்கொண்டு அதே போல் பல விசைகளால்  பிரபஞ்சத்தை நிலையில் வைத்திருக்கிறது. இந்த பூமியில் என்னையும் உங்களையும் இங்கே உள்ள மற்ற உயிரினங்களையும் நிலம் நீர் மண் வளங்கள் முதல் செடி கொடிகள் வரை ஒவ்வொன்றும் தோன்றவும் உயிர் வாழவும் மறைந்தபின் புது உயிர் தோன்றவும் ஆதாரமாக இருக்கும் இயற்கை, கடவுளின் ஒரு முகம். இவை அனைத்தையும் பாடல்கள் பாடி விளக்கேற்றி வணங்க வேண்டாம். அவற்றை தாக்காமல் இருந்தால் போதும். ஏரிகளை அகற்றி வீடு கட்டினால் வீடு தண்ணீரில் தான் மிதக்கும். முன் செய்த தவறுக்கு பின் வரும் தண்டனை. இயற்கை எனும் கடவுளின் செயல். ஏதேதோ வளங்களை மண்ணிலிருந்து எடுத்து எரிவாயுகளை காற்றில் பரப்பிவிட்டு கொண்டே இருக்கிறோம். தட்பவெப்பம் அதிகமாகிறது மாதம் மும்மாரி பெய்த காலம் சென்று  மழையும் வெயிலும் மாறி மாறி வாட்டி வதைக்கிறது. இயற்கை எனும் இறைவனின் பழிக்கு பழி செயல்.


இதைப்போலவே கண் முன் இருக்கும் கடவுளின் இன்னொரு முகம் தான் அன்பு. ‘ஜெய் பீம்’ படத்தில் வந்த தருணத்திலும் சரி , வரலாற்றில் நான் தேடிய சங்க கால பக்கங்களிலும் சரி மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை ஆகிவற்றை பெற்றதோடு அந்த ஆசைகளுக்காக மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்ற ஒரு அடிப்படை அன்பு தோன்றியிருந்தால் அத்தனை அத்தனை உயிர்கள் சித்திரவதை பெற்று உயிரிழந்திருக்க வேண்டியது இல்லை. ஒருவர் மீதோ ஒரு பொருளின் மீதோ உள்ள அன்பின் காரணமாக மற்றொரு உயிருக்கு கேடு விளைவிப்பதால் அதற்கு தூண்டுதலாக இருந்த அன்பு அர்த்தமற்றது என்பதை உணர்ந்திருந்தால் வரலாற்றின் பக்கங்கள் சமத்துவத்தால் எழுதப்பட்டிருக்கும்.


திரைப்படம் முடிந்து ஒரு நாழிகை என் எண்ண போராட்டங்களில் ஈடுபட்ட பிறகு ஒரு வழியாக என் மனம் முடிவுரை பகுதிக்கு என்னை அழைத்து சென்றது. அன்பு காட்ட தெரிந்த அனைவரும் இறைவன் தான். அன்பை மட்டுமே நான் காட்டுவேன் என்று சுற்றிக் கொண்டு இருக்கையில் என்னை துன்புறுத்த ஒருவன் வந்தால், அவனிடம் என் அன்பு பலிக்காமல் போனால் நானும் கடவுள் என பெயர் பெற்ற மாமனிதர்களை போல அஹிம்சையை கையில் எடுப்பேனோ என்னவோ. எனக்கு தெரியாது. அப்படி எடுத்து தீங்கு விளைவிப்பவனை அசுரவதம் செய்து நான்கு பேரை காப்பாற்றினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த கண்ணம்மா குமரனும் கடவுளாக பெரிய பெரிய கோவில்களை பெறலாமோ என்னமோ. அதுவும் எனக்கு தெரியாது. உற்று நோக்கினால் பூமியில் உள்ள மதங்கள் அனைத்தும் அப்படி தான் தொடங்கி இருக்கின்றன. அருவும் உருவும் இல்லா விழுப்பொருளை வணங்க தொடங்கி, இயற்கைக்கு பணிந்து சக உயிரினங்கள் அனைத்துடனும் ஒன்றி வாழும் வாழ்க்கையை தான் அனைத்து மதங்களும் தொடக்கத்தில் கூற வந்தன. நடுநடுவே மாமனிதர்களுக்கு உயரிய பதவி கொடுத்ததோடு அல்லாமல் பக்தியையும் காட்டியது ஒரு கூட்டம். அதை கேள்வி கேட்காமல் பின்பற்றியது இன்னொரு கூட்டம். கண்மூடித்தனமான பணிவு, அதனால் வந்த லாபம் தந்த பேராசை என வரிசை கட்டி அந்த மாமனிதர்களின் பேரை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்த, செய்கிறவர்களினால் தான்  இன்றைக்கு இப்படி நிற்கிறது மதம் எனும் பிரிவினை.  உயிரும் உடலும் கொடுத்த சக்தியை மட்டுமே நம்பி அன்பு என்னும் தனிப்பெரும் துணியை கொண்டு நானே ஒரு கடவுளாக வாழ முயற்சி செய்ய தான் போகிறேன். வேறென்ன செய்ய முடியும் என்னால். புத்தபிரானை போல் துறவறம் பூண்டு அன்பு நெறி விளக்கங்களை நான் கொடுத்தால் கேட்க கூட ஆள் இல்லாத இன்றைய உலகத்தில் இதை யார் பின் பற்றுவது. தவறு செய்கிறான் என்பதை பார்த்து வேல் வில் சூலாயுதம் கொண்டு அவர்களை வதைத்து நீதியை நிலைநாட்டவும் முடியாது என்னால். காலெண்டர் ஒன்றை காட்டி வழக்கு கோரிடும் உலகம் அல்லவா இது. என்னால் முடிந்தது ஒரு ஏழு பக்க கட்டுரை தான். படித்தவர்கள் முடிந்தால் பின்பற்றலாம். அன்பெனும் இறைவனை மட்டும் கொண்ட மதத்தை.


Comments

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!