உணர்ச்சிகளின் வசம்

 பதினோராம் வகுப்பு சேர்க்கையின் போது என் பள்ளியில் பல மாணவர்கள் இரண்டாம் மொழியை தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மாற்றிக்கொண்டார்கள். வேறு பள்ளியில் படித்த நண்பர்களை கேட்டு பார்த்தால், அவர்கள் பிரெஞ்சு மொழிக்கு மாறிவிட்டதாக கூறினார்கள். அனைவரும் கொடுத்த காரணம் - பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்க சுளுவான மொழி தான் உதவும் என்றார்கள். எனக்கும் சரி, என் தந்தைக்கும் சரி, அந்நேரத்தில் ஒரு அகந்தை. மதிப்பெண்களுக்காக தாய் மொழியை விட்டு கொடுப்பதா என்று. அதனால் நான் ஆங்கில வழி கல்வியின் பொது தேர்வுக்கு தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக படித்து கணிதம் அறிவியலை போல தமிழிலும் எண்பது சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்றேன். ஒரு அகந்தையோடு படித்த தமிழை அதன் பிறகு நான் தொடவே இல்லை என்ற கசப்பான உண்மையை  ஐந்தரை ஆண்டுகள் கழித்து நான் உணர்ந்தேன். நாள் ஒன்றிற்கு எட்டு மணி நேரம் வகுப்பு மற்றும் நான்கு மணி நேரம் பேருந்து பயணம் என்ற பொறியியல் கல்லூரி வாழ்க்கையில் குமுதம் குங்குமம் அளவிற்கு கூட தமிழுடன் தொடர்பு இல்லாமல் போனது. அடுத்து படிப்பிற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து கண்ணை மூடிக்கொண்டே தட்டச்சு செய்யும் நிலைக்கு வந்த பின், இனியும் தமிழை தவிர்த்தால் என் மனசாட்சி என்னை மன்னிக்காது என்று தீர்மானித்தேன். கதை புத்தகங்களாவது படிக்கலாமே என்று எண்ணி நான் வலைத்தளத்திலிருந்து அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்”  என்ற வரலாற்று புதினத்தை தொடங்கினேன். உண்மையை மறைக்க விரும்பவில்லை. முதல் அத்தியாயத்தில் தனாதிகாரி தான்யாதிகாரி என்ற வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படித்து அர்த்தம் பெறுவதற்குள்ளேயே வெறுப்பு வந்துவிட்டது. எனது பாட்டி எம்.ஏ. தமிழ் லிட்டரேச்சர் படித்து தமிழ் ஆசிரியராக இருந்தார். இருபத்தி மூன்று வயதில் நான் தமிழ் எழுத்துக்கூட்டி படிக்க தள்ளாடி கொண்டிருந்தேன் என்ற வெறி விடாமல் என்னை துரத்த, நான் அந்த புத்தகத்தை துரத்த, நான்கு நாட்களில் வேகம் பிடிக்க தொடங்கிவிட்டேன். மூன்றாவது அத்தியாயம் வரை தான் தமிழ் பற்றெல்லாம். அதன் பிறகு கல்கியின் உலகத்தில் குதித்துவிட்டேன். 


அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்களில் இந்தியாவில் அவர்களுக்காக கணினியில் மண்டை காயும் எங்களுக்கும் விடுமுறை போல தான். அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு விடுமுறை கொண்டாடும் நேரமாக அது கிடைத்தவுடன் கல்கியின் ஐந்து பாகங்களையும் விடாமல் உட்கார்ந்து படித்து முடித்தேன். அப்புதினத்தில் மனதை தொலைத்த பல கோடி தமிழர்களில் நானும் ஒருத்தியானேன். தினம் தினம் பல அத்தியாயங்கள் படித்துவிட்டு அதை அன்றே என் நண்பனிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொள்வேன். மணிக்கணக்கில் நாங்கள் இருவரும் கதை களத்தை பற்றியும், கதாபாத்திரங்கள், அவர்களின் கண் வழியே நிகழ்வுகளை பற்றியும் பேசுவோம். பல சமயங்களில் நானே சுந்தர சோழர் ஆட்சி செய்த தஞ்சை நகரத்தில் வசிப்பதை போலவே பேசுவேன். இத்தனை ஆழமாக என்னை அந்த புத்தகம் கவர்ந்ததற்கு முதல் காரணம் அமரர் கல்கி அவர்களின் வரிகளும், அவரது கற்பனையை வாசகர்களின் கற்பனைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு அசாத்திய திறனும் தான். இரண்டாவது காரணம் ஏதோ ஒரு கதை தானே என்று நினைக்காமல் இது முழுவதும் என்னை சுற்றியே நடப்பதை போல என் உணர்வுகளுக்கு இடம் கொடுத்து படித்தது. அடுத்த காரணம் என்னுடன் பயணித்த நண்பன். இது கதையல்ல நிஜம் என்ற உணர்வை தொட்டு தொட்டு சென்ற உணர்ச்சிகள் அவன் தந்த ஆதரவில் தான். 


அடுத்த மூன்று வருடங்களில் கல்கியின் அனைத்து புத்தகங்களையும் படித்தேன். பின் கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் அடைத்ததும், முழு மூச்சில் புத்தகம் படிக்க தொடங்கிவிட்டேன். பிரசித்தி பெற்ற பல வரலாற்று புதினங்களை தேடி எடுத்தேன். அனைத்தையும் படித்து முடிக்க ஒரு சராசரி பொறியியலாளர் பணியில் இருக்கும் என்னால் முடியாது என்று தெரிந்தும் பொன்னியின் செல்வன் தந்த ஈர்ப்பில் முடிந்தவரை படிக்கலாம் என்று தீர்மானித்து படித்தேன். பல்லவர்கள், பாண்டியர்கள் பற்றி கதைகள் படித்தாலும் நான் சுந்தர சோழர் ஆட்சி செய்த தஞ்சை நகரத்தில் வசிப்பவள் என்ற எண்ணத்திலேயே படித்திருக்கிறேன். சில புத்தகங்கள் தான் என்னை அந்த மாய வலையிலிருந்து மீட்டு தன்னுடைய கதை களத்திற்கு அழைத்து சென்றன. 


இன்று தான் திரு தீபம் நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய “பாண்டிமாதேவி” வரலாற்று புதினத்தை படித்து முடித்தேன். பொன்னியின் செல்வன் படித்த வாசகர்களுக்கு, அந்த கதையில் சில இடங்களில் “அருள்மொழிவர்மருக்கு மதுரையில் ஒரு முறை பட்டாபிஷேகம் நடத்தவேண்டும்.” “ஈழநாட்டில் பாண்டியர்களின் வாளும் முடியும் இருக்கிறது. அதை கொண்டுவர வேண்டும்” என்பது போன்ற கருத்துக்கள் வருவது நினைவில் இருக்கும்.  மதுரையும் தென்பாண்டி நாடும் சோழர்களின் கைக்கு அன்று எப்படி வந்தது, பாண்டியர்களின் மணிமகுடமும் வாளும் எப்படி ஈழத்திற்கு சென்றது என்று தெரிய விரும்பினால் பாண்டிமாதேவி கதையை படிக்கலாம். பராந்தக சோழர் தலைமையில் வந்த சோழர்கள் படையிடம் குமரபாண்டியன் இராசசிம்மன் தோல்வியுற்று தென்திசை தீவுகளுக்கு ஓடி மறைந்த கதை.


புத்தகத்தின் தொடக்கத்தில், வடக்கே சோழர்களின் படை என்று எதிரிகளை அறிமுகப்படுத்துகையில் நான் சற்று ஆவேசம் ஆனேன். “எப்படி டா நீங்க பராந்தக சோழரை போய் தப்பா பேசலாம்” என்று. சில நாட்களுக்கு பிறகு  வேறு சில காரணங்களால் சங்க கால போர்கள் அனைத்துமே அநியாயம் என்று என்னுடைய மனம் ஒரு புது நிலைக்கு வந்தது. ஆனாலும் அந்த 800 பக்க புத்தகத்தின் முதல் 300 பக்கம் வரை சோழர்கள் பக்கம் நின்று தான் பார்த்தேன். வழக்கம் போல நா. பார்த்தசாரதி அவர்கள், புத்தகத்தின் இரண்டாம் பாதி செல்ல செல்ல என்னை கட்டி போட துவங்கிவிட்டார். 


தன்னுடைய அறிவு தான் தென்பாண்டி நாட்டை காக்கும் ஒரே கருவி என்ற அகங்காரம் கொண்ட மகாமண்டலேஸ்வரர். என்னுடைய வீரத்தை தாண்டி அறிவு என்ன செய்துவிட முடியும் என்ற தலைகனத்தோடு படை தளபதி. தந்தையின் தலைநகரமான மதுரையை இழந்துவிட்டோமே, மீதம் உள்ள தென்பாண்டி நாட்டையாவது காப்பாற்றுவோம் என்ற பொறுப்பில்லாத ஒரு இளவரசன். இவற்றினால் அதிக சிரமமும் இழப்பும் இல்லாமல் சோழர்கள் தென்பாண்டி நாடு வரை வென்ற கதை. இறுதியில் பரிதாபமாக இருந்தது. அனைவரும் தங்களுடைய தனி உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் தாய்நாட்டை காக்க வேண்டுமே என்ற பொதுநல உணர்ச்சியுடன் இருந்திருந்தால் அன்று பாண்டிய நாடு அப்படி வீழ்ந்திருக்காது.


800 பக்க புத்தகத்தை நிறைவு செய்தபோது மனமே பாரமாக இருந்தது. இத்தனை வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது கிடைத்த கொஞ்ச நேரங்களை செலவழித்து படித்த புத்தகம் மனதை இனம்புரியாத வலியில் விட்டுவிட்டு முடிந்தால் அதை தாங்கும் சக்தி எனக்குள் இன்னமும் வரவில்லை. “அத்தனை இக்கட்டான சூழலில் ஒருவருக்கு கூடவா நாட்டை காப்பாற்ற தோன்றவில்லை. அத்தனை பேருக்கும் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இவ்வளவு முக்கியமாக வேண்டுமா” என்று குமுறினேன். கி.பி.900 யில் நடந்ததாக புனையப்பட்ட கதைக்கே இத்தனை உணர்ச்சிகள் என்னுள். 


அந்த மனநிலையில் இருந்து வெளிவர என்னுடைய ‘கிண்டில்’ மின் புத்தகத்தை எடுத்து மிக சிறிய புத்தகம் ஒன்றை தேடினேன். திரு. டான் அசோக் எழுதிய பன்னிரெண்டு பக்கம் கொண்ட சிறுகதை ஒன்று கிடைத்தது. 800 பக்கம் எனக்கு கொடுத்த உணர்வை இந்த 12 பக்கம் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணி தான் படித்தேன். பத்து நிமிடத்தில் புத்தகம் முடிந்தது. அத்தனை பெரிய சிரிப்பு என்னுடைய முகத்தில். “சபாபதி சாகிறார்” என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் முடிய கூடிய கதையை ஆசிரியர் சொல்ல முற்பட்டு என்னளவில் வெற்றியும் பெற்றார். 


பொன்னியின் செல்வனின் தொடங்கி இந்த புத்தகம் வரை ஒவ்வொரு கதையும் கதாபாத்திரமும் கதைக்களமும் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்த காரணம் அந்த புத்தகத்துடன் நான் கொள்ளும் உணர்ச்சிகள் தான். “அடுத்து முடிசூடி கொள்ள வேண்டிய யுவராஜனாக இருந்தாலும் உன் மீது நான் கொண்ட காதலுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு உன்னிடம் வந்துவிடுகிறேன்” என்று ஆதித்த கரிகாலர் பேசியதாக கல்கியின் வரிகளை படித்த பிறகு அந்த புதினத்தின் கதாநாயகன் பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மரை விட, வாசகர்கள் பலரின் மனதை கொள்ளை கொண்ட வந்தியத்தேவனை விட, ஆதித்த கரிகாலனை தான் எப்போதும் என்னுடைய பிடித்தமான கதாபாத்திரமாக கூறுவேன் நான். ஆனால் தென்பாண்டி நாட்டை காக்கும் கடமையை விட்டுவிட்டு ஓடிய குமாரபாண்டியனை பற்றி படிக்கும் போது கோபமும் வருத்தமும் தான் வருகிறது. காதலுக்காக நாட்டை துறப்பது தான் இரண்டு கதாபாத்திரங்களின் நிலை என்றாலும் ஒருவனை என் மனம் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. மற்றொருவனை நினைக்கவும் பிடிக்கவில்லை. காரணம் அவர்களின் வரலாற்றின் மேல் புனையப்பட்ட கதைகளுக்கு நான் உணரும் அடிப்படை உணர்வுகள் தான். ஒரே மாதிரியான நிகழ்வுகள் என்றாலும் நம்முடைய உணர்வுகள் மாறுபட்டால் அந்த நிகழ்வுகளுக்கான எதிர்வினை முற்றிலும் மாறுபடும்.


“நீ தானே என் பொன்வசந்தம்” திரைப்படத்தில் ஜீவா சமந்தாவை கூட்டமான ஒரு உணவகத்திற்கு அழைத்து செல்வார். “இவ்ளோ கூட்டமா இருக்கும் னு தெரியாது. சாரி.” என்பார் ஜீவா. அதற்கு சமந்தா “இன்னும் கூட்டமா இருந்தா கூட பரவால்ல” என்று கூறி ஜீவாவிற்கு அருகில் நெருக்கமாக அமர்ந்து கொள்வார். அதே உணவகத்திற்கு பல மாதங்கள் கழித்து ஜீவா சமந்தாவை அழைத்து வந்திருக்கையில் “இவ்ளோ கூட்டமா இருக்கு. இங்க ஏன் கூட்டிட்டு வந்த” என சமந்தா கோபித்து கொள்வது போன்ற காட்சி. இடமும் கூட்ட நெரிசலும் இரண்டு காட்சியிலும் ஒன்று தான். ஆனால் முன்னதாக சென்ற போது எங்கே இருந்தாலும் உன்னுடன் இருந்தால் போதும் என்று உணர்வு. மறுமுறை சென்ற போது எப்படியாவது தனியே சந்தித்து சில நேரம் இருக்க வேண்டும் என்று காத்திருக்கும் போது அதே கூட்ட நெரிசல் தரும் கோபம் என்ற உணர்வு.


மொத்தத்தில் உணர்வுகளை பொறுத்து தான் நமது அன்றாட வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளும் ஏற்றுக்கொள்ள படுகின்றன. தாய்மொழியான தமிழ் மீது ஒரு தனி மதிப்பு என்ற உணர்ச்சியை பெற்றிருக்காவிட்டால், பொறியியல், மென்பொருள் வேலை, அமெரிக்கா பயணம் என தமிழை விட்டு தள்ளியே நிற்கும் ஒருத்தியாய் தான் நானும் இருந்திருப்பேன். பொன்னியின் செல்வன் என்ற புதினம் எனக்குள் தந்த உணர்ச்சிகளால் தான் எந்த புத்தகத்தையும் அந்த புத்தகத்தின் கண் வழியே பார்க்க முற்படுகிறேன் நான். இன்று 800 பக்கம் தந்த மன வேதனையில் நான் இருந்திருக்காவிட்டால் அந்த 12 பக்க நகைச்சுவை எனக்கு சிரிப்பை தந்திருக்காது. மழை தரும் குளிர் என்ற உணர்வு இருப்பதால் தான் அந்த மிளகாய் பஜ்ஜி மேலும் சுவை தருகிறது. இரவும் ஜன்னல் வழி காற்றடிக்கும் பயணமும் தரும் சுகம் என்ற உணர்வால் தான் இளையராஜாவின் இன்னிசை பன்மடங்கு  அதிக இனிமையை தருகிறது. சுற்றி இருப்பவர்கள் தரும் வெறுப்பு என்ற உணர்வோ, இவரை சுற்றியே நாம் இருக்க வேண்டும் என்று கண்ட கனவு பலிக்காமல் வந்த வலி என்ற உணர்வோ தான் திடீர் தனிமையை விரும்பி ஏற்க செய்கிறது. வாழ்க்கையின் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நம்மை இழுத்து செல்வதும் உணர்ச்சிகள் தான். ஒரே இடத்தில் தன்னையே தொலைத்துவிட்டு தேடுகிற நிலையில் வைப்பதும் உணர்ச்சிகள் தான். விடாமல் நற்செயல்கள் பலவற்றை செய்ய தூண்டுவது ஒருவரின் மீதோ ஒரு கருத்தின் மீதோ கொண்டுள்ள அன்பு அல்லது பற்று என்ற உணர்வு தான். பழி தான் பதில் என்று காயப்படுத்த தூண்டுவதும் பழி என்ற உணர்வு தான். 


தனி மனித வாழ்க்கையே உணர்ச்சிகளின் வசம் தான் என்று அடிக்கோடிட்டு சொல்லலாம். அதை நிதானமாக கையாளாவிட்டால் உணர்ச்சிவசப்பட்டு நாட்டையும் உயிரையும் பறிகொடுத்த கதைகள் போல தான் நம் வாழ்விலும் நிகழும். முதற்படியாக காதலன் திரைப்படத்தில் ஷங்கர் “கோவமோ சந்தோஷமோ ஆத்திரமோ அழுகையோ. அதை ஒரு ஐந்து நிமிடம் தள்ளி போடு.” என்று சொல்லியிருப்பதை கையாளலாம். உணர்ச்சிகளின் வீரியம் குறையும் வரை எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது.


Comments

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!