நானும் கடவுள் எனும் நம்பிக்கையும்!

2020 இன் தீபாவளிக்கு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் காட்சி. ஆர்.ஜே. பாலாஜி ஒரு தொலைக்காட்சி செய்திகளுக்காக “கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்த அநியாயங்கள் நடப்பதை பார்த்துக்கொண்டே சும்மா இருக்கிறதே” என்று மிக ஆவேசமாக பேசியிருப்பார். அந்த செய்தி துணுக்கை ஒளிப்பதிவு செய்து முடித்ததும் வேக வேகமாக ஓடிச்சென்று  அருகே இருந்த ஆலமரத்தடி பிள்ளையார் சிலையிடம் போய் “அய்யோயோ என்ன மன்னிச்சுடு கடவுளே. நான் தெரியாம பேசிட்டேன். என்ன தண்டிச்சிடாத” என்று கதறுவார். சென்ற பதிவில் ஹிந்து மத கடவுள் எல்லாமே போர் செய்து அநியாயம் செய்து தான் கடவுள் ஆனது என்று கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டேன் என்று எனக்கு அடுத்த நாள் தோன்றியது. அந்த படத்திலாவது ஒரு காட்டுக்கு பிரச்சனை என்று ஆர்.ஜே. பாலாஜி அழைத்ததும் நயன்தாரா வந்து கூடவே நின்று உதவினார். நான் பேசிய பிரச்சனை பல யுகங்களாக நடக்கிறது என்றல்லவா குற்றம் சாட்டினேன். இதை சரி செய்ய சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி. ராமராவ், சாவித்ரி, ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா என அனைவரும் ஒன்றாக வந்தாலும் தீராத பிரச்சனை ஆயிற்றே.


ஜெர்மன் நாட்டின் வரைபடத்தில்  ஜெர்மன் மக்களே கண்டுகொள்ள கஷ்டப்படும் ஒரு சிறிய நகரம் என பெயர் கொண்ட நவீன கிராமத்தில் தான் வாழ்கிறேன் நான். என் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு குத்துமதிப்பாக ஐந்தரை கிலோமீட்டர் தூரம். பேருந்து தொடர்பு இல்லாததாலும் இந்நாட்டின் ஓட்டுநர் உரிமம் இல்லாததாலும் மிதிவண்டி தான் என்னுடைய போக்குவரத்து சாதனம். ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மிதிவண்டியை நாள் ஒன்றிற்கு பதினோரு கிலோமீட்டர், வாரத்தில் ஐந்து நாட்கள் ஓட்டுவது ரசகுல்லா சாப்பிடுவது போன்ற சுகமான அனுபவம். காரணம் அது வசந்த காலம் மற்றும் கோடை காலம். இந்த ஆண்டு இவ்வூரில் அதிகபட்ச வெப்ப நிலையாக ஒரே நாள் 32 டிகிரி செல்சியஸ் சென்றது. அந்த தேதி அன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு நரக வேதனை. பாவம் ஏழு எட்டு பாட்டி தாத்தாக்களுக்கு  வெப்ப பக்கவாதம் (heat stroke). வருடத்தின் நான்கு காலநிலை பருவங்களும் நிகழ்ந்தாலும் ஐரோப்பாவின் வட கடல் (North sea) 40 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் வருடத்தில் 330 நாட்கள் மழை தலை காட்டாமல் இருக்காது. அதனால் உச்சகட்ட கோடை தினங்கள் எமது மெட்ராஸ் மாநகரத்தின் மார்கழி குளிர் தினங்களின் வெப்பநிலையை தான் அடையும். அக்டோபர் மாதம் முதல் மழையின் தாக்கம் அதிகம் ஆகிக்கொண்டே போகும். கூடவே காற்று, ஆலங்கட்டி மழை, டிசம்பர்  இறுதியில் பனிமழை. இப்படி இருக்கையில், நான் சென்ற பதிவை எழுதிவிட்டு அடுத்த நாள் மாலை ஐந்தரை மணிக்கு மிதிவண்டியில் வீடு திரும்ப தயாரானேன். ஆர்டிக் வட்டத்தின் அருகே இருப்பதால் நவம்பர் மாதம் முதல் இரவின் நீளம் அதிகரித்து கொண்டே போகும். அந்த நாள் சூரிய உதயம் காலை 8:24 மணிக்கும் சூரிய அஸ்தமனம் மாலை 4:14 கும் இருந்தது. முன் சக்கரத்தில் காற்று கால்வாசி மட்டுமே இருந்த நிலையில் நான் மிதிவண்டியை மிதிக்க தொடங்கிய போது ‘கும்’ இருட்டு. என் அலுவலகம் ஊரின் எல்லையை தாண்டி இருப்பதால், ஐந்து கிலோமீட்டரில் முதல் இரண்டு கிலோமீட்டர் தெரு விளக்கு கூட இல்லாத மாநில நெடுஞ்சாலை. இந்நாட்டில் எல்லா சாலைகளிலும் மிதிவண்டிகளுக்கு தனி வழி இருப்பதால் லாரி காரன் அடித்து போட்டுவிட்டு போய்விடுவான் என்ற பயம் இல்லை. அந்த மை இருட்டில் -1 டிகிரி குளிரில் ஆலங்கட்டி மழை. கூடவே மணிக்கு 39 கிலோமீட்டர் வேகத்தில் காற்று நான் மிதிக்கும் திசைக்கு எதிர் திசையில் அடித்தது. புல் தடுக்கி பயில்வான் எனும் பெயருக்கு பெரும்பாலான நேரத்தில் நான் சிறந்த உதாரணமாக இருப்பேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் இங்கே கூறிக்கொள்கிறேன். அதற்காக நான் புல் தடுக்கும் அளவிற்கு குச்சி உடலாக இருப்பேன் என்று எண்ணி கொள்ளவேண்டாம். நான் தடுக்கி விழ போகும் போது ஒரு வாழை மரமே புல்லில் தடுக்கி விழுவதை போல இருக்கும் என்பதையும் கூறிக்கொள்கிறேன். அப்பேர்ப்பட்ட  பலசாலியாகிய எனக்கு குளிர், ஆலங்கட்டி மழை, எதிர் திசையில் கனமான காற்று, காற்றில்லாத முன் சக்கரம். இதில் ஏதாவது ஒன்று இருந்தாலே வீடு வந்து சேர்வதற்குள் இந்தியாவிற்கு விமானசீட்டு இன்றே வாங்கிவிட வேண்டும். நான் அப்பாவிடம் இப்போதே செல்லவேண்டும் என்று அழுதுவிட தோன்றும். அந்த இரவு இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை வந்த போது அழுகை வரவில்லை. மாறாக என மனக்கண்ணின் முன்னே சங்கு சக்கரம் வில் வேல் சூலாயுதம் போன்ற பலவித ஆயுதங்களுடன் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி முதல் மகமாயி மாரியம்மன் காளி வரை அனைத்து தெய்வங்களும் நம்பியாரை போல சிரித்தார்கள். “நேத்து கொஞ்ச நஞ்ச பேச்சா பேசின.. இப்போ அனுபவி” என்று சொல்லாமல் சொல்வதை போல இருந்தது அந்த சிரிப்பு. எல்லாமே என் கற்பனை தான் என்றாலும் அந்த நேரத்தில் அந்த ஐந்தரை கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்குள் மானசீகமாக நான் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கி ஸ்ரீரங்கம் தஞ்சை மதுரை கன்னியாகுமரி அம்மன் வரை அனைத்து கோவில்களுக்கும் சென்று அழுது புரண்டு மன்னிப்பு கேட்டு மன்றாடினேன். “ஏதோ மனசுல இருந்த வருத்தத்துல ஆர்வ கோளாறு ல தர்க்கரீதியான நியாயத்தை தேடி ஏழு பக்கம் எழுதிட்டேன். என்ன உயிரோட வீட்டுக்கு போய் சேத்துடு கடவுளே” என்று கற்பூரம் எல்லாம் ஏற்றி வணங்கினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 


ஏதோ பெருமாள் புண்ணியம் பத்திரமாக வீடு வந்து சேர்ந்துவிட்டேன். இளைப்பாறி பசி ஆறியபின் மறுபடி மூளையின் முனையில் ஒரு குரல். நான் வீடு வந்து சேர்ந்ததற்கு என்னுடைய உடல் வலிமையும் மன வலிமையும் தானே காரணம். கடவுள் எங்கே இங்கே வந்தார் என்று தோன்றியது. உடனே மனம் “யப்பா சாமி. வாய கொஞ்சம் மூடு. நல்லா நியாயம் பேசின நீ” என்று என் அம்மாவை போல ஒரு குரல் கொடுத்தது. அப்போது வந்த தெளிவுக்காக தான் இந்த பதிவு. வறுமையில் இருப்பவனுக்கு தான் ஒரு ரூபாயின் உயரம் தெரியும். பசியில் இருப்பவனுக்கு தான் வெண்பொங்கலில் நாம் தள்ளி வைக்கும் மிளகின் சிறப்பு புரியும். சுகமான சோபா ஒன்றில் அமர்ந்து சுவையான உணவு ஒன்றை உண்டுவிட்டு அடுத்தவன் பட்ட கஷ்டத்தை பற்றி யோசித்த போது பிரபஞ்சத்தின் தர்க்கங்களும் மனித நாகரிகத்தில் கடவுள் என்ற கருப்பொருளின் தோன்றலும் விளைவும் மனதில் தோன்றியது. அதே கண்ணம்மாவிற்கு அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் நடந்த ஒரு உடல் வலிமையை சோதிக்கும் இக்கட்டான சூழல் வந்த போது உடனடியாக அவள் மனம் தேடியது கடவுளின் துணையை. மறுபடி உடல் சுகம் கண்டதும் உலக நியாயங்கள் ஒளிர தொடங்கியது.


இயற்கை எனும் இறைவனுக்கு மட்டும் பணிவோம், அன்பு எனும் கடவுளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம் என்ற கருத்தெல்லாம் நூறு சதவிகிதம் உண்மை தான். ஆனால் துன்பம் நேர்கையில் மனித இதயம் தேடும் ஒரு மானசீக துணைக்கு இறைவன் எனும் உருவத்தை கொடுத்துள்ளது என் வாழ்வில் புகட்டப்பட்டுள்ள ஹிந்து மதம். இது இன்றைக்கு நேற்று அல்ல. நினைவு தெரிந்த நாள் முதலே இப்படி தான். 


மூன்றாம் வகுப்பு படிக்கையில் நானும் என் உயிர் தோழியும்  ஒரு நாள் வீட்டு பாடம் எழுதவில்லை. ஆசிரியர் முன்னிருந்து ஒவ்வொரு இருக்கையாக புத்தகத்தை சரி பார்த்து கொண்டே வந்தார். நாங்கள் இருவரும் பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த போது  தான் சென்ற வாரம் ஒன்பது வயதே ஆன எனக்கு என் பாட்டி கந்த ஷஷ்டி கவசம் சொல்லி கொடுத்தது நினைவில் வந்தது. “பயமா இருந்த காக்க காக்க கனகவேல் காக்க.. முருகா முருகா னு சொல்லு” என்று கூறியிருந்தார். நான் உடனே என் தோழியிடம் “நீயும் முருகா முருகா னு சொல்லு” என்று கூறினேன். அன்று வகுப்பறையில் நாங்கள் இருவரும் காவடி சுமக்காதது ஒன்று தான் குறை. அத்தனை முருக மந்திரம். என்ன காரணம் என நினைவில் வரவில்லை. ஆனால் ஏதோ காரணத்திற்காக எங்களை பரிசோதிக்கவில்லை அந்த ஆசிரியர். அன்றைய தினத்தில் என் மனதிற்கு என் வாழ்க்கையையே புரட்டி போட கூடிய கொடிய சம்பவத்திலிருந்து தப்பித்துவிட்டோம் என்று ஒரு மன நிம்மதி. வீட்டிற்கு சென்று பாட்டியிடம் இதை கூறினேன். அதற்கு அவள் கூறிய விளக்கம் “நீ செஞ்ச தப்புக்கு முருகனை கூப்பிட்டது பெரிய தப்பு. படிக்கிற பொண்ணு வீட்டு பாடம் எழுதாம போனது ரொம்ப தவறு. அடுத்த வாட்டி இப்படி பண்ணினா… முருகன் அந்த வேல் எடுத்துட்டு வந்து தூங்கும் போது கண்ண குத்திருவாரு. காக்க காக்க கனகவேல் காக்க எப்போ வரும் ன்னா… வேற ஒருத்தர் செய்யுற தப்புக்காக நீ ஒரு கஷ்டத்துல இருக்கும் போதோ இக்கட்டான சூழ்நிலை ல உன்ன காப்பாத்திக்க தைரியம் தேவை படும்போதோ. அப்போ தான் முருகன் வேல் காப்பாத்தும். நீ பண்ற தப்புக்கு எந்த சாமியும் துணை வராது” என்று. அதன் பின் வீட்டு பாடம் எல்லாம் எப்போதும் சரியாக எழுதி வகுப்பில் முதல் மாணவியாக வந்தேன் என்று நிச்சயமாக கூற மாட்டேன். வீட்டு பாடங்கள் எழுதாமல் சென்ற நாட்களுக்கு முருகனை அழைக்கவில்லை. அவ்வளவு தான். நான் செய்யும் தவறுக்கு கனகவேல் என்றும் காக்க வராது என்று மட்டும் தெரிந்து கொண்டேன்.


அப்போது முதல் எங்களின் அடுத்த இருபது வருட வாழ்க்கையில் இன்று இந்த நொடி வரை நானும் சரி, அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றிலிருந்து முனைவர் பட்டம் பெற போகும் என் உயிர் தோழியும் சரி, எங்களை மீறி நடக்கும் சோதனைகளுக்கு எங்கள் மனம் விடும் அபய குரல் “முருகா முருகா” தான். முருகன் எங்களை கனக வேல் கொண்டு காத்தாரா இல்லையா என்று தெரியாது. எந்த தடங்கலையும் தாண்டி வர உதவியது “நாம் தவறு செய்யவில்லை. முருகன் கைவிட மாட்டார். தைரியமாக இருப்போம். பொறுமையாக நமது கடமையை மட்டும் செய்து பலனுக்காக காத்திருப்போம்” என்ற நம்பிக்கை தான். இந்த நோக்கிலிருந்து பார்த்தால் முருகப்பெருமான் தான் கடவுளா? இல்லை தவறு இழைக்காமல் சுய முயற்சியில் போராட துணை நிற்கும் தைரியம் தான் கடவுளா?


இந்த இடத்தில் ஹிந்து மதம் எந்த தவறும் இழைக்கவில்லையே. ஒரு வேளை அன்று என் பாட்டி “இனி எப்போது வீட்டு பாடமோ தேர்வுக்கு பயிற்சியோ இல்லாமல் இருந்தால் முருகனை வேண்டிக் கொள். அவர் காத்துவிடுவார்” என்று சொல்லியிருந்தால், முருகப்பெருமான் மீது பாரத்தை போட்டுவிட்டு நானும் என் தோழியும் பத்தாம் வகுப்பு வரை கூட தாண்டியிருக்க மாட்டோம். பிறருக்கு தீங்கு செய்வதற்கும், தவறு இழப்பதற்கும் துணை நிற்குமானால் அப்போது எந்த கடவுளும் குற்றவாளி தான். எந்த மதமும் குற்றம் தான். 


எது சரி? எது தவறு? எது தர்மம்? எது நியாயம்? என்ற கேள்விகளுக்கு பதில் தேட இந்த பதிவில் இடம் இல்லை. இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் நம் சக்திக்கு மீறிய சோதனை தருணங்களில் மன வலிமையையும், வாழ்க்கையே வெறுத்து போகும் தருணங்களில் நம்பிக்கையையும் தருவது ஏதோ ஒரு கடவுள் என்றால் இயற்கை, அன்பு ஆகியவற்றுடன் அந்த கடவுளும் சேர்ந்து கொள்ளலாம்.  முன் பதிவில் சொன்னதை போல அன்பும்  இயற்கையும் மனித பிறவிகள் ஒன்றோடு ஒன்றும் ஒரு கூட்டமாகவும் அமைதியில் வாழ இன்றியமையாதது. மனித வாழ்க்கை எனும் நதியில் மனமெனும் தோணியை அடுத்து அடுத்த கட்டங்களுக்கு இழுத்து செல்லும் துடுப்பாக கடவுள் நம்பிக்கை மன அமைதியையும் வலிமையையும் கொடுப்பதாக இருந்தால் அதுவும் நல்லது தானே.  


Comments

  1. நல்ல பதிவு... கடவுள் நம்பிக்கையை பற்றி..
    நீரில் மூழ்க இருப்பவன் கூட "கடவுளே காப்பாற்று " என நினைத்து கடவுள் இழுத்து கறையேற்றுவார் என நம்பிக்கையில் எதிர்நீச்சல் போட்டு கறை ஏறிவிடுவார்.
    காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான் கடவுள்...
    ஏன் நாத்திகன் வெற்றி பெறவில்லையா என கேட்கலாம்.. ஆனால் ஆழ்ந்து சிந்தித்து நோக்கினால் அந்த வெற்றியின் பின்னனியிலும் கடவுளை காணலாம்..
    நம்பிக்கையுள்ளவன் எரியும் விளக்கின் ஜோதியில் வழியை காண்பான்....
    நம்பிக்கையற்றவன் அதன் பின்னாலிருக்கும் இருளைமட்டுமே கண்டு பிதற்றுவான்....

    கடவுள் பற்றி போதுமே பேசியது... வேறேனும் தலைப்பில் பேசுவோமே...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!