மனம் விரும்புதே உன்னை!
என்னுடைய இந்த மூன்றாம் பதிவின் துவக்கத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கண்ணம்மா சமய சொற்பொழிவாளர் கிடையாது. வாய் கிழிய நியாயம் பேசி திரிகிறோமே அதை பொதுவாக சொல்லி பலரின் கருத்துக்களை கேட்டு மேலும் நம் பொது அறிவை மேம்படுத்திக் கொள்ளலாமே என்ற ஒரே நோக்கம் தானே தவிர. நான் முற்றும் உணர்ந்த ஞானியும் இல்லை, என் பேச்சில் இருக்கும் கருத்துக்கள் தான் கச்சிதமான உண்மைகள் என்ற தலைகனமும் இல்லை. மாற்று கருத்துக்களையும் ஆரோக்கியமான விவாதங்களையும் எதிர்பார்த்து தான் இப்பதிவுகளை வெளியிடுகிறேன்.
கடவுள் கடவுள் கடவுள். முதல் இரண்டு பதிவும் இதே புராணங்கள் தான் என்று சலித்துக் கொள்ள வேண்டாம். தலைப்பே கொடுக்காவிட்டாலும் கேட்பவருக்கு தலை சுற்றும் வரை பேசுவது என் வழக்கம். அதனால் இறைவன் என்ற தலைப்பை கையில் எடுத்தவுடன் பலதரப்பட்ட கருத்தலைகள் வந்து ஒன்றோடு ஒன்று மோதி விளையாடுகின்றன என் மனதில். அதில் அர்த்தமுள்ள சிலவற்றை எழுத நினைத்தேன். பக்கங்கள் நீண்டுவிட்டது. இத்துடன் கடவுளை சற்று இளைப்பாற அனுப்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
சற்றுமுன் கூறினேனே … தலைப்பே இல்லாமல் பக்கம் பக்கமாக பேசுவேன் என்று. இப்படி நான் உருவானதற்கு காரணம் எனக்கு உயிர் கொடுத்தவள் தான். இரண்டு மணி நேரம் முன்னால் என் தாயுடன் காணொளியுடன் கூடிய கைபேசி அழைப்பில் இருந்தேன். அவள் ஏதோ ஒரு கேள்வி கேட்டாள். நான் ஒரு பதில் சொன்னேன். அந்த பதில் அவள் காதுகளை சென்று அடையவே இல்லை. நான் முடிப்பதற்குள் சற்றும் தொடர்பில்லாத வேறொரு கேள்வியை கேட்டாள். நான் முன்பு பேசிய கேள்விக்கே வேறு ஒரு பதிலை கூறினேன். அதற்கும் அசராமல் முற்றிலும் மாறுபட்ட வேறொரு கேள்வியை தொடுத்தாள். உடனே நான் பேசுவதை நிறுத்திவிட்டு அவளது பேச்சை மட்டும் கவனித்தேன். கை நகங்களை நறுக்கும் போது ஞாயிறு அன்று என் விரலிலிருந்து ரத்தம் சில பல சொட்டுகள் சிந்திவிட்டது. அதை பற்றி கேள்வியை அடுத்து கேட்டாள். பின் என் தந்தையை பற்றி சில செய்திகள். பின் அவளது தாயின் உடல் நலம். சென்ற வாரம் காஞ்சிபுரத்தில் எடுத்த பட்டு புடவைகள். இப்படி பல சுவாரசியமான தலைப்புகள். நான் கவனிக்கிறேனா என்று பார்த்துக் கொண்டே என் முகபாவங்களை படித்துக் கொண்டே அவள் மட்டும் பேசினாள். ஏழு நிமிடங்கள் பேசினாள். மொத்தமாக இருபத்தி இரண்டு தலைப்புகளை தொட்டுவிட்டது அவளது வாசகங்கள் அந்த குறுகிய கால இடைவெளியில். உடனே அவளை நிறுத்தி கூறினேன். “அம்மா. ஏழு நிமிஷத்துல நீ இருபத்தி ரெண்டு டாபிக் பேசியிருக்க” என்று. நான் நினைத்தேன் அவள் அதையும் கண்டு கொள்ளாமல் வேறு பேசுவாள் என்று. ஆனால் அவளோ சட்டென நிறுத்தி என்னை நேராக பார்த்து “அப்போ பாரு எனக்கு எவ்ளோ அறிவு இருக்கு னு” என்று கூறியவுடன் என்னால் எனது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. நான் சிரிப்பதை பார்த்து அவளுக்கும் அத்தனை பெரிய புன்னகை. சத்தமாக வந்த எங்களது சிரிப்பொலி அருகே சோபாவில் கண்ணயர்ந்து கிடந்த தந்தையை சற்றும் உறுத்தவில்லை. வேண்டும் என்றே சத்தமாக சிரித்து சோதித்தோம். ம்ம்ம்ஹ்ம்ம்… அவர் தூக்கம் கலையவில்லை.
அப்போது தான் சில எண்ணங்கள் என் மனதில் தோன்றின. காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் அமலா பால் ஒரு உணவகத்தில் அமர்ந்துகொண்டு சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனக்குள் சில கருத்துக்களை பேசிக் கொள்வார். எதிரே அமர்ந்து கொண்டிருக்கும் சித்தார்த் எல்லா பக்கமும் பார்த்தாலும் மனதிற்குள் “ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…” என்று அந்நியன் பட பாடல் மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கும். “என்ன யோசிக்கிற” என்று அமலா பால் கேட்டதும் “ஒன்னும் இல்ல” என்று பதில் சொல்லுவார் சித்தார்த். அதற்கு அவர் “அது எப்படி ஒன்னுமே யோசிக்காம இருக்க முடியும். நானும் தான் எல்லாரையும் பாக்குறேன். ஆனா நான் என்ன யோசிச்சேன் னு சொல்லவா” என்று சண்டை தொடங்கிவிடுவார். அந்த காட்சியின் மூலமாக அந்த இயக்குனர் பெண்கள் பொதுவாகவே மனதிற்குள் அதிகமாக சிந்தித்து பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றும் ஆண்கள் பெரும்பாலான சமயம் எதுவும் சிந்திக்காமல் வெள்ளை காகிதம் போல மன அமைதியில் இருப்பார்கள் என்றும் கூற வருவார். எனக்கும் என் அம்மா அந்த நொடியில் அமலா பாலை போல தான் தோன்றினாள். ஏழே நிமிடத்தில் எத்தனை கருத்துக்கள். அப்பப்பா… எதிரே அமர்ந்திருந்த நான் சித்தார்த்தை போல பாட்டு பாடவில்லை. மாறாக அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் வந்த சிலம்பரசனை போல ரசித்து கொண்டிருந்தேன். அவர் அவர் காதலியை ரசித்தார். நான் என் அம்மாவை ரசித்தேன். அந்த திரைப்படத்தில் இரவெல்லாம் அந்த பெண்ணிடம் பேசி விட்டு காலையில் நண்பர்களிடம் வர்ணிப்பார். நான் ஒரு பத்து நிமிடம் கைபேசியில் உரையாடிவிட்டு உங்களிடம் வந்திருக்கிறேன். அம்மாவை பற்றி வர்ணிக்க. “அந்த பக்கம் டி.வி. அது சும்மா ஓடிட்டு இருக்கும். இவ இங்க பேசுவா பேசுவா. பேசிட்டே இருப்பா. என்னென்னமோ பேசுவோம். கேக்க கேக்க இறங்கும் ல. அந்த மாதிரி. பாக்க பாக்க பேச பேச லவ். கிளீன் பியூர் லவ்.” என்று அவர் அற்புதமாக கூறியிருப்பார் அந்த காட்சியில். அதே போல் நானும் கூற விரும்புகிறேன். “ஒரு ஏழு நிமிடம். அந்த பக்கம் எங்க அப்பா தூங்கிட்டு இருந்தாரு. அவர கண்டுக்கல. அம்மா பேசினா. பேசினா. பேசிக்கிட்டே இருந்தா… கேக்க கேக்க… பாக்க பாக்க.. பேச பேச பேச… லவ். கிளீன் பியூர் லவ்.” உண்மையாகவே சுத்தமான பரிசுத்தமான காதல் தான். தாயன்பை தாண்டிய பரிசுத்தம் உலகத்தில் எதுவும் இல்லை.
இந்த கண்ணோட்டத்தில் அம்மாவை பார்க்கும் போது எனக்கு எல்லா கவுதம் மேனன் திரைப்பட காதல் வசனங்களும் அம்மாவுக்கு பொருந்துவதை போல தான் தெரிகிறது. இரண்டு மாதம் முன்னதாக முக்கிய நிகழ்ச்சி ஒன்றிற்கு இளஞ்சிவப்பு நிற புத்தம் புது பட்டுபுடவையில் அவளை பார்த்தபோது நானே கூறினேன். “நீ இப்படி அழகாகிட்டே இருக்க. கொஞ்ச நாள் ல.. நீ என் அக்கா னு சொல்ல போறாங்க பாரு ” என்றேன். சிரித்து கொண்டாள் அதற்கு. இப்போது தான் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் த்ரிஷாவிடம் இதே போல் கூறும் காட்சி நினைவுக்கு வருகிறது. மொத்தத்தில் கவுதம் மேனன் ஜோதிகா த்ரிஷா அனுஷ்கா மஞ்சிமா என எத்தனை அழகிகளை வர்ணித்து 90ஸ் கூட்டத்தின் காதல் கண்களை திறந்துவிட்டாலும் இந்த கண்ணம்மாவின் கண்களுக்கு அனைத்து அழகிகளும் பல காதல் வசனங்களும் அம்மாவுக்காக தான் நினைவில் வருகிறது. மொத்தத்தில் “என் அஞ்சல மச்சான் அவ…”
தலைப்பே இல்லாமல் பேசும் வித்தையை நான் பெற்றது எப்படி என்ற தலைப்பில் ஐநூறு வார்த்தைகள் பேசிவிட்டதால் இப்போது தலைப்புக்கு வருவோம். சென்ற பதிவில் ஒரு வாசகர் வேறு ஏதாவது பேசலாமே என்று கேட்டுக்கொண்டதால் நான் அடுத்து எழுத வேண்டும் என்று வைத்திருந்த தலைப்புகளை ஓரம் கட்டிவிட்டு புது தலைப்பை தேடி இங்கே வந்துவிட்டேன். கேட்டுக்கொண்டது ஏதோ ஒரு வாசகன் இல்லை. ஒரு ரசிகன். இந்த கண்ணம்மா சென்னை காளியப்பா மருத்துவமனையில் கண் விழித்த நாளிருந்து இவள் கண் விழித்த அழகுக்கே ரசிகன் ஆனவர். இவளின் புன்னகைக்கே புத்தகம் எழுதுவேன் என்று கூறும் ரசிகன் அவர். பாரதியின் பல கனவுகளால் வந்த பெயர் கண்ணம்மா. குமரனின் காதலுக்கும் பற்பல கனவுகளுக்கும் சந்தோஷமே உருவாய் உதயமானவள் தான் இந்த கண்ணம்மா.
வேறு ஏதாவது நல்லதாக எழுதலாமே என்று யோசித்த போது, என் வாழ்வின் நல்லவை எல்லாம் ஆதியும் அந்தமும் ஒரே இடத்தில் தான் இருக்கிறதே. அதையே எழுதி விடுவோம் என்று நினைத்தேன். அதற்கு ஏற்றாற் போல என் அம்மா கவுதம் மேனன் கதாநாயகியாக என் கண்ணுக்கு தெரிந்தாள். எழுதிவிட்டேன். உயிரும் கொடுத்து, பெயரும் கொடுத்து, சுயமாக சிந்திக்க அறிவும் கொடுத்து நான் நானாக நிற்க காரணமானவரை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பேச போவதில்லை. அவரை நீங்கள் என் வார்த்தைகள் வழியாக என் சிந்தனைகள் வழியாக ஒவ்வொரு பதிவாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். என் பதிவுகளை படிக்க என் வாசகர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு நொடிக்கும் தகுதியானவர் தான் அவர்.
நெஞ்சைப் பிழிந்து உருக செய்யும் வசனங்கள் போதும். அது நம்முடைய “ஏரியா ஆப் எக்ஸ்பெர்ட்டிஸ்” இல்லை. நல்லதாக பேச நான் தேர்ந்தெடுத்த அடுத்த தலைப்பு - சாப்பாடு….. கடும் பசியின் காரணமாக வந்தது என்று யாரும் உண்மையை உரக்க சொல்ல வேண்டாம். எனக்கு பிடித்தமான சில உணவு வகைகளை சுருக்கமாக பேசிவிட்டு செல்லலாமே என்று எண்ணுகிறேன்.
நினைவு தெரிந்த நாள் முதல்….. ஒரு நிமிடம். இந்த நினைவு தெரிந்த நாள் என்றால் என்ன? பல இடத்தில் நானும் பல விதங்களாக கற்பனை செய்து கொள்வது வழக்கம். என் வாசகர்களுக்கு நான் அந்த கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை. நினைவு தெரிந்த நாள் என்று நான் எழுதினால் அது உண்மையாகவே கண்ணம்மாவுக்கு நினைவில் இருக்கும் முதல் நாள். குத்துமதிப்பாக ஏழு எட்டு வயது. இங்கே இன்னொரு குழப்பம் உள்ளது. எனக்கு நினைவில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிகழ்வுக்கு ஞாபகம் இருக்கிறது. சில்மிஷம் பிடித்த மூளை என்னுடையது. பொறுத்துக் கொள்ளவும். உதாரணத்திற்கு. ஒன்றாம் வகுப்பு இரண்டு மூன்று என்று நாங்கள் அமர்ந்திருந்த வகுப்பறைகள் நினைவில் இருக்கிறது. சில முக்கிய தினங்கள் நினைவில் உள்ளது. ஆனால் ஆசிரியர்கள் இல்லை. அந்த நாட்களில் வீட்டில் நடந்த நிகழ்வுகள் கூட பள்ளி வகுப்பறை அளவுக்கு நினைவில் இல்லை. ஏன் என்று தெரியவில்லை. இப்போது இந்த இடத்தில் நான் நினைவுக்கு தெரிந்த நாள் என்று கூறுகையில் ஆறு வயது என்று வைத்துக்கொள்ளலாம்.
அந்த நினைவு தெரிந்த நாளில் எனக்கு பிடித்த உணவு வகை பெரும்பாலும் என் அம்மா செய்யும் உருளைக்கிழங்கு வறுவல் தான் என்று நினைக்கிறேன். ஏன் என்றால், என்னை சாப்பிட வைப்பதற்குள் அம்மா பல அவதாரங்கள் எடுப்பது வழக்கம். நீங்கள் நினைப்பதை போல சாப்பிட அழுது அடம் பிடிக்கும் பிள்ளை கிடையாது இந்த கண்ணம்மா குமரன். அழுகாமல் அடம் பிடிப்பேன் என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறேன். முக்கியமாக ரசம் சாதங்கள் உள்ளே செல்வதற்குள் என் அம்மா அவர் மாமியாரிடம் பல பாட்டு வாங்கிவிட நேரிடும். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் உள்ளே இறங்கிய உணவு வகைகள் உருளை வறுவல், மொறு மொறு தோசை, முறுக்கு, மில்கா ஒண்டர் கேக் மற்றும் வத்தல் குழம்பில் உள்ள பூண்டு.
உணவகத்திற்கு சென்றால் பெரும்பாலும் மசால் தோசை பொடி தோசை என்றே இருந்த நிலையில் பன்னிரெண்டு வயது ஆன நான் முதன் முதலில் பரோட்டா குருமா சுவைத்தேன். அன்று முதல் என்னுடைய பிடித்த உணவு பரோட்டா குருமா தான். ஆனால் அதுவும் பதினைந்து வயதில் நான் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிடும் வரை தான். அதன் பின் அடுத்த ஐந்து ஆண்டுகள் பன்னீர் தான் பிடித்தமான உணவுகளின் வரிசையில் முதலிடம். நடுவே இந்த பாணி பூரி பேல் பூரிகள் வந்தாலும் முதல் இடத்திற்கு செல்லவில்லை அவை. படிப்பு முடிந்து சொந்த காசில் ஊர் சுற்றி தோழியுடன் ஸ்கூட்டியில் தேடி தேடி சென்று உண்ட போது பிஸ்சா முதல் இடத்தை பெற்றுவிட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் பாஸ்தா பகெட் என மேல்நாட்டு உணவுகள் மீது மோகம் வந்ததால் வெளிநாட்டு வாழ்க்கையில் உணவு என்ற துறையை பற்றி கவலையே இல்லாமல் தான் விமானம் ஏறினேன். ஜெர்மனியில் வந்து இந்த ஐந்து ஆண்டுகளில் பிஸ்சா பாஸ்தா பர்கர் பகெட் டார்டிலா என்சிலாடா சூஷி என பல உணவு வகைகளை அவற்றின் சொந்த நாட்டு கைவண்ணத்தில் சுவைத்த பிறகு அதுவும் அலுத்துவிட்டது. பற்றாக்குறைக்கு இவை அனைத்தையும் நானே செய்ய தயாராகிவிட்டேன். பரோட்டா முதல் பன்னீர் மற்றும் பிஸ்சா வரை அனைத்தின் மேல் இருந்த மோகமும் காணாமல் போய்விட்டன.
ஆனால் இன்றும் அம்மா, முப்பது வயதிற்கு மேலான இண்டாலியம் இருப்புச்சட்டி ஒன்றில் எண்ணெய் ஊற்றி குறைந்த அளவு நெருப்பில் பொறுமையாக கிளறி செய்து முடிக்கும் உருளை வறுவல் மீதோ, பல கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி கையளவு பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்துடன் காரமும் புளிப்பும் தாண்டவம் ஆடினாலும் நாவின் நுனியில் வந்து அமரும் இனிப்புடன் இருக்கும் வத்தல் குழம்பு மீதோ, இரண்டு நாட்கள் அதிகமாக புளித்தாலும் “சுர்…” என்ற சத்தத்துடன் கல்லை அடைந்த மாவு, பின் என் தட்டை மொறு மொறுவென அடையும் அந்த தோசையின் மீதோ, ப்ரீத்தி மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைக்கப்பட்ட அரிசி நொய்யில் சீரகம் மிளகு மணக்க மணக்க வெந்து வரும் அரிசி உப்புமாவின் மீதோ என்னுடைய நாட்டம் குறையவே இல்லை. இதோ. உங்களுக்கு இதை பற்றி அடித்துக்கொண்டு இருக்கையிலே நாவில் எச்சி ஊறுகிறது. மனதை திட படுத்திகொண்டு நானும் அதே அரிசி உப்புமாவை செய்வேன் இன்று இரவு உணவிற்கு. ஆனால் எச்சில் ஊரும் அளவு ருசியை அதில் அடைய முடியவே முடியாது என்னால் . உடனே நான் மோசமாக சமைப்பேன் என்று வாசகர்கள் யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். சுமாராக சமைப்பேன். சில ரசிகர்களும் உண்டு என்னுடைய கேரட் சாம்பாருக்கு.
உணவும் வாழ்க்கையை போல தான் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு படியாக ஏற ஏற அடுத்த படியின் மீது நாட்டம் வந்துவிடுகிறது. கடந்து வந்த படிகள் சலித்துவிடுகிறது. ஆனால் ஆணிவேராக நிற்கும் அந்த முதல் படி கொடுத்த சுகத்தை எதுவும் தராது என்று தான் நினைக்கிறேன். எத்தனை அறுசுவை உணவுகளை அந்தந்த நாட்டு பக்குவத்தில் சுவைத்தலும் சுவை பழகியவுடன் அலுத்து தான் போகிறது. அம்மா சமையல் மட்டும் அமிர்தமாகவே நிற்கிறதே. உணவின் சுவை, உப்பு மிளகாய் மல்லி பட்டை கிராம்பு போன்ற பொருட்களுடன் அளவற்ற அன்புடன் தயாரிக்கும் கைப்பக்குவத்தில் தான் இருக்கிறது போல.
அம்மாவை பற்றி அருமையான வித்யாசமான, விமர்சனம். அம்மாவின் அன்பைபோல் அவளது கை பக்குவமும்.உள் நாக்கை தாண்டி அடி மன ஆழம் வரைபோன அவளது சமயலின் மணமும் ருசியும் ஆயள் உள்ளவரை நாவிலும் நினைவிலும் உழலும் என்பது மட்டும் உண்மை.60 வயதை நெருங்கும் எனக்கு என் பாட்டியின் சூடான இட்லி, அதன் மேல் ஊற்றிய நெய்,இடலி பொடி இன்னமும் நாவிலே நர்தனமாடுகிறது..ஒரு நல்ல கட்டுரையை படித்த நிறைவு...
ReplyDeleteதொடர்ந்து பேச ஆவல்....