ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? பாரதிதாசனின் அற்புத வரிகளுக்கு தண்டபாணி தேசிகர், தேஷ் என்ற ராகத்தில் இசையமைத்த இந்த பாடல், உண்மையில் எனக்கு கடந்த சில வாரங்களாக இன்பம் சேர்த்து வெற்றி கண்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு வந்த ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் வந்த பாடலும் சரி, சமீபத்தில் சஞ்சய் சுப்பிரமணியன் மேடையில் பல ஸ்வரஜதி சங்கதிகளுடன் அசத்திய பாடலும் சரி “இன்பம் சேர்க்க மாட்டாயா, மாட்டாயா?” என்று நம்மிடம் கேட்டுக்கொண்டே உலகத்தை மறக்க செய்கின்றன. இன்பம் சேர்க்க யாழுமில்லை, கொரோனாவின் புண்ணியத்தில், கைபேசியின் ஊடே வரும் குரல்களையும் காணொளிகளையும் தவிர, அருகே அன்புமில்லை. இருந்தும், நேரும் துன்பங்கள் மறையவில்லை என்றாலும், அவை மனதில் ஏற்படுத்தும் ரணங்களும் தவிப்புகளும் சாந்தம் பெற்று, மன அமைதிக்கு இட்டு செல்கிறது இந்த தேஷ் ராகம். மென்மையான ஸ்வரஸ்தானங்கள் கொண்ட இந்த பாடலை வாசகர்கள் ஒருமுறை கேட்குமாறு பரிந்துரைக்கிறேன். கவிஞர் வாலி ஒரு பேட்டியில் “எல்லா மனுஷனுக்க...