மணி சாரின் பார்வையில் கல்கி…

 2000 ஆண்டு மே மாதம், மூன்றாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் எனது பாட்டி வீட்டில் இருந்தபோது, அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த  என்னுடைய சித்தி, என்னையும் இன்னொரு சித்தி பெண்ணையும் கோயம்பேடு ராகினி ரோகினி திரையரங்கிற்கு அழைத்து சென்றாள். திரையிலிருந்து கடைசி வரிசையான A  வரிசையில் அமர்ந்து பார்த்தோம். எட்டு வயது சிறுமியான நான் கையிலிருக்கும் பாப் கார்ன் மறந்து போகும் அளவிற்கு ஈடுபாட்டுடன் பார்த்த படம் “அலைபாயுதே”. வெள்ளை சட்டையும் நீல வண்ண மேல் சட்டையும் அணிந்து கொண்டு, கருப்பு நிற கூலர்ஸும் ஹெட்போனும் மாட்டிக்கொண்டு, சிங்கப்பல் சிரிப்புடன் மாதவன் வண்டியில் வரும் காட்சியில் அப்படி என்ன தான் என்னை கவர்ந்ததோ. திரைப்படத்தின் முடிவில் ஷாலினியின் தலையோடு தலை சாய்த்து கண்ணீர் மல்க காதல் வசனங்கள் பேசி, காட்சி முடிந்து  “A Film by  Maniratnam” என்ற எழுத்துக்கள் வரும் வரை என் மனது வேறு எதையும் சிந்திக்கவில்லை. “ஓ. காதல் ன்னா இப்படி தான் இருக்குமா? இப்படி எல்லாம் ஆச வெப்பாங்களா? இவ்ளோ பிரச்சனை வருமா?” என்று இந்த பிஞ்சு மனதில் காதல் மீது நாட்டம் என்ற நஞ்சை கலந்த புண்ணியவான் திரு. மணிரத்னம் அவர்கள். இருபத்தி ஒரு வருடங்களில் இன்று வரை அந்த திரைப்படத்தை குத்துமதிப்பாக நூறு முறை கண்டிருப்பேன். இந்த பதிவை எழுத தொடங்கும் முன் சில காட்சிகளை பார்த்துவிட்டு தான் வந்தேன். காதல் மீது வந்த நாட்டமும் குறையவில்லை. மணிரத்னம் என்ற மனிதரின்,  திரைப்படங்களை எழுதி இயக்கும் வித்தையினால், அவர் மேல் கொண்ட மரியாதையும் குறையவில்லை. (அலைபாயுதே படத்திற்கு பிறகு மின்னலே, டும் டும் டும்  என வரிசையாக மாதவன் படங்களை மனப்பாடம் செய்து மேடியின் விசிறி, குளிர்சாதன பெட்டி, காற்றாலை போன்ற பல அவதாரங்களை இந்த கண்ணம்மா எடுத்த கதை வேறு ஒரு பதிவில் பகிரப்படும்.)


1990 களில் பிறந்த பலரும் முப்பது வயது ஆகும் நிலையிலும் திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கு மணிரத்னம் அவர்களை காரணமாக சொல்லலாம். என்னை போல ‘அலைபாயுதே’யில் தொடங்கி, அவர் எழுதி இயக்கிய பல படங்களை பார்த்து, காதல் என்றால் ஒரு அரிய பரவசமான உணர்வு என்று புரிந்து கொண்டு, நிஜ வாழ்க்கையில் நடைமுறை காதல் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் தலைமுறை நாங்கள். மின்சார ரயிலில் பார்த்து ஈர்ப்பு வந்தாலும், அது காதலாகிவிடும் போலிருக்கே என்று உணர்ந்து, அதை அந்த பெண்ணிடம் நேராக அவள் கண்களை பார்த்து கூறி அவளை கவர்வதும், எவனோ ஒருவன் பொறுக்கியை போல பின்னால் சுற்றுகிறான் என்ற எண்ணத்திலிருந்து முன்னேறி “என்ன யாருக்காவது கட்டி வெச்சுட்டா என்ன பண்றது. நம்ம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம். யாருக்கும் சொல்ல வேணாம்.” என்று அந்த பெண் அவன் கையை பிடித்து அழுவதும், திருமணம் ஆன பின்னும் தனி தனியே அவரவர் வீட்டில் வாழ்வதும், பின் குடும்பத்தை எதிர்த்து வெளியே வருவதும், முதல் நாட்களில் காதலும் காமமும் போட்டி போட்டுகொண்டு தாக்குவதும், பின் ஒருவரை ஒருவர் வாக்குவாதங்களால் தாக்குவதும், திருமணமே தவறோ என்று வெறுக்க நேரிடும் போது பிரிவின் வலி புரிந்து ஒன்று கூடுவதும், காட்சிக்கு காட்சி கலைநயத்துடன் காதலை காட்டியிருந்தார் அந்த திரைப்படத்தில். 


கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படம் மற்றுமொரு முறை இந்தியாவையே தமிழ் திரையுலகை பார்க்க செய்தது. நான் முதன் முதலில் அதை பார்த்த போது, அந்த கடைசி பதினைந்து நிமிட காட்சியில் தேம்பி தேம்பி அழுத ஞாபகம் உண்டு. பத்து வயது சிறுமி, பெற்ற தாயின் மேல் உள்ள பாசத்தால் இலங்கையில் போர் எப்போது முடியும் என்று கேட்டு அழுவது போன்ற காட்சி. படம் பார்த்த போது, அருகே இருந்த தாத்தாவிடம் “அங்க சண்டை எப்போ முடியும் தாத்தா” என்று கேட்டேன். என்னை பொறுத்தவரை அதுவும் மணிரத்னம் பெற்ற வெற்றி தான். இரண்டு மாதங்கள் முன்பு அந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. மறுமுறை பார்த்தேன். கடைசி பதினைந்து நிமிடம் இம்முறை அழுக கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். பத்து நிமிடத்திலேயே கண்ணீர் வந்துவிட்டது. இலங்கையில் புதிதாக மணம் முடித்த பெண், கணவருடன் காதல் சல்லாபத்தில் ஆற்றங்கரையில் விளையாடி கொண்டிருக்கும் போது கணவன் “என்ன விட அதிகமா உனக்கு என்ன புடிக்கும்” என்று கேட்கும் கேள்விக்கு “இது புடிக்கும்” என்று ஈர மண்ணை எடுத்து முகத்தில் பூசிக் கொள்வாள். படிப்பு வேலைவாய்ப்பு காரணங்களுக்காக தாய் மண்ணை விட்டுவிட்டு வந்த எனக்கு, உயிர் பயத்தினால், அங்கே தங்கள் இனத்திற்கு நடக்கும் அநியாயத்தினால் தாய் மண்ணை விட்டு வருபவர்களை நினைத்து ஒரு நொடி மனம் கலங்கி விட்டது. இந்த காட்சியின் ஆழம் இத்தனை நாட்களாக என்னை வந்து சேராமல் எப்படி இருந்தது என்று எண்ணிக்கொண்டேன். அதே போல், ஆயுத எழுத்து என்ற திரைப்படம் மூலம் முதல் முறையாக அரசியலின் வேறொரு முகத்தை தெரிந்துகொண்டேன். இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் வரும் ‘நான்லீனியர் நரேஷன்’ பற்றி பலர் பேசும் போது என் மனதில் “இது என்ன பிரமாதம். எங்க ஆள் 2004 லேயே ஆயுத எழுத்து படத்துல ஹைப்பர்லிங்க் நரேஷன் பண்ணிருக்காரு” என்று நினைத்துக்கொள்வேன். முதல் காட்சியில் வரும் மூன்று கதாபாத்திரங்கள் எப்படி அந்த இடத்துக்கு வந்தனர் என்று அடுத்த ஒரு மணி நேரம் கதை சொல்லும் விந்தையை பன்னிரண்டு வயதில் கண்டு வியந்திருக்கிறேன்.


ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் திருமணம் செய்து கொண்ட சமயத்தில் வந்ததால் அவர்களுக்காக ‘குரு’ என்ற திரைப்படத்தை ஹிந்தியில் பார்த்தாலும், பின் பலமுறை அபிஷேக் பச்சனிற்கு சூர்யாவின் குரலுடன் தமிழ் மொழி பார்த்த போது, மணிரத்னம் அவர்களின் கையெழுத்து பல இடங்களில் என்னை கவர்ந்தது. அதே போல் “என்னது ராவணனுக்கும் சீதைக்கும் லவ் ஸ்டோரி யா….???” என்ற ஒரு கோபத்துடன் ராவணன் திரைப்படத்திற்கு திரையரங்கில் சென்று அமர்ந்தவள், “ச்சை. ராவணன் செத்திருக்க கூடாது. அவளோட சேர்ந்திருக்கணும்” என்று மனவேதனையுடன் வெளியே வந்தேன். பல முறை அந்த திரைப்படத்தை எண்ணி வியந்திருக்கிறேன். காலம் காலமாக கூறப்படும் ஒரு புராண கதையை அடிப்படையாக கொண்டு அதை வேறு நோக்குடன் சொல்ல முற்பட்டு, பலரிடம் வெற்றியும் பெற்றிருக்கிறாரே இவர் என்று. அப்போது தான் “நம்ம ஆள் மகாபாரதத்தையும் விட்டு வெக்கல” என்று தெரிந்து,  தளபதி திரைப்படத்தை பார்த்தேன். அதை பற்றி பேசவே சில மணி நேரங்கள் தேவைப்பட்டது எனக்கு. முக்கியமாக ரஜினி அரவிந்சாமியின் வீட்டு படி ஏறும் போது அவரது முன்னாள் காதலி இறங்கி வந்து அவரிடம் பேசும் காட்சி. காதல் வேதனையை காட்ட தலைவருக்கு சொல்லியா தர வேண்டும். அவர் முன்னால் நின்று வெளுத்து வாங்க, பின்னணியில், இசை ராஜா, சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலின் பேதாஸ் வர்ஷன் வாசிக்க, காமராவில் பதிந்த  ஒவ்வொரு நொடியும் முத்துக்கள். 


‘அலைபாயுதே’விற்கு முன்னால் வந்த மணிரத்னம் படைப்புகளை தேடித் தேடி பார்த்தேன். ஒவ்வொரு படத்தை பற்றியும் பேசத்தான் ஆசை. ஆனால் இப்போது வேண்டாம். ஏற்கனவே யூடியூப் விமர்சகர் போல பேசிக்கொண்டிருக்கிறேன்.  வாலிப காதல் முதல் ‘ஓகே கண்மணி’யில் வந்த  வயோதிக காதல் வரை, ‘தளபதி’ நட்பு, ‘அக்னி நட்சத்திரம்’ அண்ணன் தம்பி உறவு, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ அம்மா செண்டிமெண்ட், ‘ஆயுத எழுத்து’ டேட்டிங், ‘ஓகே கண்மணி’ லிவ் இன், ‘திருடா திருடா’ கடத்தல், ‘இருவர்’ அரசியல், ‘பம்பாய்’ மத கலவரம், ‘ரோஜா’ காஷ்மீர் பிரச்சனை, ‘உயிரே’ தீவிரவாதம். அனைத்துமே பெரும் தாக்கத்தை உண்டாக்கிய படைப்புகள். இதை இப்படி சொன்னால் பார்ப்பவர்களை சரியாக சென்றடையும் என்ற வித்தையை மிக நேர்த்தியாக கையாளும் இயக்குனர்களில் நிச்சயம் மணிரத்னம் முதல் சில இடங்களில் இருப்பார். சமீப காலத்தில் அவரின் படைப்புகள் நல்ல வரவேற்பை பெறவில்லை. நானும் அவைகளை சிறந்த படங்கள் என்று கொண்டாடவில்லை. இருப்பினும் அவற்றில் சில பல விஷயங்கள் என்னை கவரத்தான் செய்தன. 


காட்சியில் என்ன என்ன இருக்க வேண்டும், யார் யார் எப்படி இருக்க வேண்டும், இருப்பவர்கள் எப்படி நடிக்க வேண்டும், அந்த காட்சியில் வசனமே இல்லை என்றாலும் கடைக்கோடியில் நிற்பவன் கூட முக பாவனையை காட்சியுடன் ஒன்றி வைத்திருக்க வேண்டும், வெளிச்சம் எந்த பக்கத்திலிருந்து வர வேண்டும், அதை எந்த கோணத்திலிருந்து காமரா பிடிக்க வேண்டும். இதை போன்ற இயக்குனரின் அடிப்படை பணிகள் அவரின் படைப்புகளில் அளவுக்கு அதிகமாக கச்சிதத்தை பெற்றிருக்கும். அதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. 


இருப்பினும் அவருடைய அடுத்த படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ பற்றி நினைத்தால் சற்று பதட்டமாக தான் இருக்கிறது. அத்தனை கடின உழைப்பை கொட்டி, பல கோடிகளை வாரி இறைத்து அவர் எழுதி, இயக்கி, தயாரித்து வரும் படைப்பு நிச்சயம் சோடை போகாது. ஆனால் அந்த புத்தகத்திற்கு சரியான தீர்ப்பாக இருக்குமா என்று தான் பயப்படுகிறேன். தமிழ் திரையுலகில் வண்ண படங்கள் வரத் தொடங்கும் முன்பே பலர் படமாக்க நினைத்து தோல்வியுற்ற படைப்பு அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினம். அதை மணிரத்னம் எடுத்து செய்கிறார் என்று தெரிந்தவுடன் பெருமிதமும் கொண்டேன், பயமும் கொண்டேன்.


என்னுடைய இந்த பதிவுக்கு முன்னால் எழுதிய “உணர்ச்சிகளின் வசம்” என்ற பதிவை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் நானும் ‘பொன்னியின் செல்வன்’ பித்து பிடித்த வாசகி தான் என்று. அந்த புத்தகத்தில் என்னை கவர்ந்த சிலவற்றை அங்கே சொல்லியிருந்தேன். அந்த புத்தகத்தின் வெற்றியே கல்கி அவர்கள், அவரது வார்த்தைகளால் ஒரு உலகத்தை நமது கற்பனையில் கொண்டுவந்த திறன் தான். அந்த முக்கிய புள்ளி தான் இப்போது மணிரத்னத்தின் முயற்சியின் மேல் நான் கொண்டுள்ள ஒரு வித பயம். கல்கியின் வார்த்தைகள் ஒவ்வொரு வாசகர்கள் கருத்திலும் ஒவ்வொரு வித உலகத்தை உருவாக்கும். இப்போது திரைப்படமாக அது வந்துவிட்டால், அனைவரும் பார்க்க நேருவது மணிரத்னம் என்னும் ஒரு சிறந்த படைப்பாளியின் கற்பனை கண்களுக்கு தெரிந்த உலகம் தான். அது எத்தனை தான் சிறப்பாக இருந்தாலும் அது அவருடைய கற்பனை. 1950 முதல் கோடிக் கணக்கான தமிழ் மக்களின் கருத்தில் வந்த பற்பல கற்பனை காட்சிகள் அங்கே வீழ்த்த படுகிறதோ என்ற கலக்கம் எனக்குள் இருக்கிறது.


புத்தகத்தை தழுவி வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் இதே நிலை தான். உலகத்தில் பைபிள் புத்தகத்திற்கு அடுத்த படியாக அதிகமாக  அச்சடிக்க பட்ட புத்தகம் - ஹாரி பாட்டர். நானும் அதற்கு பரம (பைத்தியக்கார) விசிறி. முதல் நான்கு படங்களை பார்த்துவிட்டு தான் புத்தகம் படிக்க தொடங்கினேன். படங்களில் வருவதை விட நான்கு மடங்கு அதிக கதை அந்த ஏழு புத்தகங்களிலும் உண்டு. இருப்பினும் நான் அந்த திரைப்படத்தில் நடித்த நபர்களையும் அதே இடங்களையும் கற்பனையில் கொண்டு தான் படித்தேன். பெரிதும் மாறுபடவில்லை. ஏனெனில் அந்த புத்தகத்தின் எழுத்தாளர், கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு செய்வது முதல் காட்சிகளில் இருக்கும் வண்ண விளக்குகள் வரை அனைத்தையும் மேற் பார்வை பார்த்தார். அவரது கற்பனை உலகம் அவர் கண்களின் வழியாகவே உலகத்திற்கு கொண்டுவர பட்டது. கேம் ஆப் த்ரோன்ஸ், 13 ரீசன்ஸ் ஒய் போன்ற தொடர்களும்,  காட்பாதர், பிரைட் & ப்ரஜுடிஸ் போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் புத்தகத்தை தழுவி தான் எடுக்க பட்டிருக்கிறது. அந்த புத்தகத்தின் பெரும்பாலான வாசகர்கள் திரைப்படங்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். விரல் விட்டு எண்ண கூடிய படங்கள் தான் புத்தக பிரியர்களை கவர்ந்துள்ளது. அந்த நிலை ‘பொன்னியின் செல்வன்’ என்ற படைப்பிற்கு, அதுவும் மணிரத்னம் பெயரின் மேல் வந்துவிட கூடாதே என்று தவிக்கிறேன் நான்.


அந்த புத்தகத்தை படிக்காதவர்களுக்கும், அந்த கதை பெரிதும் ஈர்க்காத்தவர்களுக்கும், அந்த படம் தமிழ் திரையுலகில் ஒரு பிரமாண்டமாக இருக்கும். ஆனால்  புத்தகத்தை படித்த 95% வாசகர்கள் அந்த கற்பனை உலகத்தின்  மேல் நாட்டம் கொண்டவர்கள் தான். அவர்களுக்கு இந்த திரைப்படம் மூலம் மணிரத்னம் என்ன பதில் தர போகிறார் என்பது தான் என்னுடைய இந்த பதிவின் முதல் விசாரம்.


அடுத்த குறை (அ) வேண்டுகோள். என்னதான் படமாக வந்தாலும். அந்த கதையை படிப்பவர்கள் குறைந்துவிட கூடாது. சிறுவயது முதலே புத்தங்கள் படிக்கும் பழக்கம் கொள்ளும் பிள்ளைகள் தமிழ் கதைகள் மேல் ஆர்வம் இருந்தால் கல்கியின் இந்த படைப்பை நிச்சயம் விடமாட்டார்கள். ஆனால்  என்னைப்போல் பள்ளி கல்லூரி பருவத்தில் பாட புத்தகத்தை தவிர வேறு எதுவும் படித்து பழகாத ஞான சூனியங்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ என்ற இந்த புத்தகம் ஏற்படுத்திய உணர்வுகள் எத்தனை மணிரத்னம் வந்தாலும் ஈடு செய்ய முடியாதது. இனி வரும் இளைஞர்கள் “அதான் படம் வந்துருச்சே. இனி புத்தகம் எதற்கு படிக்க வேண்டும்” என்று நினைக்காமல், தாங்கள் முதலில் படித்துவிட்டு, கல்கியின் வரிகள் தந்த சொந்த கற்பனை உலகத்தின் காற்றை சுவாசித்துவிட்டு பிறகு மணிரத்னத்தின் பிரமாண்டத்தை பார்க்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்.


வருகிற கோடை விடுமுறைக்கு அந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. அதற்குள் உங்களை சுற்றி இருக்கும் தமிழ் தெரிந்த மண்டைகளை சலவை செய்து, புத்தகத்தை படிக்க வையுங்கள். பின் திரையரங்கில் சென்று எங்கள் மணி சாரின் கைவண்ணத்தை பார்த்து மகிழுங்கள். நானும் ஒரு முறை திரைப்படம் வெளிவரும் முன்பு படிக்க போகிறேன். இம்முறை மின் புத்தகம் அல்லாமல், அதற்காக 1950 - 1954 அமரர் மணியம் அவர்கள் கல்கிக்காக வரைந்த ஓவியங்களுடன் கூடிய புத்தகத்தை வாங்கியுள்ளேன். ஒரு முறை திரைப்படத்தை பார்த்தால் த்ரிஷாவும், ஐஸ்வர்யா ராய்யும், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி தான் என் மனதில் வருவார்கள் என்று தோன்றுகிறது. அதனால் என் கற்பனை உலகத்து மக்களுக்கு நான் செய்யும் மரியாதை இவை.



Comments

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!