காலமென்றே ஒரு நினைவும். காட்சியென்றே பல நினைவும்

  


காலமென்றே ஒரு நினைவும்

காட்சியென்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ

அங்குக் குணங்களும் பொய்களோ

காண்பதெல்லாம் மறையுமென்றால்

மறைந்ததெல்லாம் காண்பமன்றோ

நானும் ஓர் கனவோ

இந்த ஞாலமும் பொய்தானோ


இதை படிக்கும் போது பாரதியாரின் பொய்யோ மெய்யோ பகுதி நினைவுக்கு வந்தால் அது பாரதியின் வெற்றி. ஹரிஷ் ராகவேந்திரா குரலில் இளையராஜா இசையும்  சாயாஜி ஷிண்டேவும் நினைவில் வந்தால் பாரதியாரை நினைவுபடுத்த தமிழ் திரையுலகம் எடுத்த முயற்சிக்கு வெற்றி.


2019 டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பதினோரு மணி, நான் என்னுடைய மூன்று நண்பர்களுடன் ஹாம்பர்க் மாநகரத்தின் பிரசித்தி பெற்ற துறைமுகத்துக்கு அருகே புத்தாண்டை வரவேற்கும் சிறப்பு வான வேடிக்கையை காணச் சென்றிருந்தேன். ஜெர்மனி நாட்டில் அத்தனை பெரிய கூட்டத்தை பார்த்ததே இல்லை நான். சென்னையின் ரங்கநாதன் தெரு, தீபாவளிக்கு முதல் நாள் இருக்கும் கோலம் தோற்றுவிடும். அப்படி ஒரு கூட்ட நெரிசல். நள்ளிரவு ஒரு மணியளவில் வான வேடிக்கை முடிந்தபின் 800 மீட்டர் தொலைவில் இருந்த விரைவு ரயில் நிலையத்திற்கு செல்ல 45 நிமிடங்கள் தேவை பட்டது. ஒரு மணி நேரத்தில் நாங்கள் சென்று அடைந்திருக்க வேண்டிய தங்கும் இடத்திற்கு அதிகாலை மூன்று மணியளவில் தான் வந்து சேர்ந்தோம். மக்கள் கூட்டம் அலை அடிப்பதை போல இல்லை. எரிமலையின் நெருப்பு குழம்பு கட்டுப்படுத்த முடியாமல் ஓடுவதை போல இருந்தது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கமே இப்படி கலவரமாக இருக்கிறதே. இந்த வருடம் பற்பல புது அனுபவங்களும் சிறப்பான சம்பவங்களும் இருக்கும் என்று எதிர்பார்த்து வீடு திரும்பினேன்.


நம்பினால் நம்புங்கள்….. ஜனவரி முதல் நாள் பார்த்த நண்பர்களை, 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நண்பர்கள் இருவரை நான் அடுத்து செப்டம்பர் தான் சந்தித்தேன். புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு ஹாம்பர்க் நகரத்திலிருந்து இரண்டு ரயில் ஒரு பேருந்து ஏறி வீடு வந்து சேர்ந்தவள் ஆகஸ்ட் மாதம் தான் அடுத்த பேருந்து ஏறினேன். உலகமே அடைபட்டுக் கிடக்க, நான் மட்டும் என்ன விதிவிலக்கா? 2020 ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது யாராவது நினைத்திருப்போமா? இதே போல் ஒரு பெரும் கூட்டம் சேர அடுத்த ஐந்து ஆண்டுகளில் இடம் இல்லை என்று? யாருக்கு எப்படியோ. 2020 என் அளவில் காலண்டரிலிருந்து நீக்கப்பட வேண்டிய வருடம். நோய் தொற்று பெறாமல் உயிருடன் இருந்த ஒரே சாதனையை தவிர வேறு எதுவும் அனுகூலமாக நடக்கவில்லை. சில பல கிலோ எடைகளை என் உடல் தவம் பெறாமலே பெற்று கொண்டது. கூடவே சில உடல் நல குறைவுகள். வீட்டிலேயே இருந்ததனால் புத்தகம் படிக்க அதிக ஆர்வம் கொண்டேன். அது ஒரு நிம்மதி தந்த விஷயம்.


2021 ஆண்டின் புத்தாண்டை வரவேற்க நான் கட்டில் மேல் படுத்துக் கொண்டு என் போர்வையை கூட தளர்த்த வில்லை. ஜன்னல் வழியே தெருமுனையில் வெடித்த வானவேடிக்கை ஒரு நான்கு தெரிந்தது. அத்தனையே போதுமானதாக இருந்தது. சென்ற வருடத்தை போல இந்த வருடத்தை வீணாக்க கூடாது என்று மட்டும் எண்ணிக் கொண்டேன். 12:10 மணி அளவில் உறங்கிவிட்டேன் போல. ஆனாலும் 2021 எனக்கு பல மன நிறைவுகளை தந்தது. 


மூன்றரை ஆண்டுகள் கழித்து தாய் நாட்டிற்கு விஜயம் செய்தேன். “அகலிகா பாப்ப விமோச்சனா” என்பதை போல அம்மா சமையல், அப்பா மடியில் உறக்கம், அத்தை வீட்டு கவனிப்பு, தாத்தா பாட்டியுடன் நேரே அமர்ந்து அரட்டை, நண்பர்களுடன் மணிக்கணக்கில் கதை, தஞ்சை மதுரை மயிலை மாயவரம் என தெய்வீக சுற்றுலா, ஒரு மாதம் சொர்கமாக சென்றது. பின் உடல் நலத்தில் கவனம் செலுத்த தொடங்கினேன். உணவு பழக்கங்கள் சிலவற்றை மாற்றியமைத்தேன். எனக்குள் அவை புத்துணர்ச்சியையும் தன் நம்பிக்கையையும் தந்தது. உடற்பயிற்சி என்னும் சொல்லை ஏதோ தகாத வார்த்தையாக கருதி கடந்த பத்து வருடங்கள் சென்றுவிட்டதே என்று எண்ணி மிக குறைந்த அளவில் அவ்வப்போது அதையும் செய்ய தொடங்கினேன். அதுவும் சில நல்ல பயன்களை தந்தது. 


சிறுவயதில் கற்றுக்கொண்ட கர்நாடக சங்கீதத்தை தூசி தட்டி எடுத்து அனுபவிக்க தொடங்கினேன். பழக்கப்பட்ட இசை கருவி ஒன்றில் திரைப்பட பாடல்களை மிகுந்த ஈடுபாட்டுடன் வாசிக்க தொடங்கிவிட்டேன். முக்கியமாக என்னுடைய பல நாள் கனவாக இருந்த மேல்நாட்டு இசைக்கருவி ஒன்றை வாங்கி அதில் ஒரே ஒரு இளையராஜா பாடல் வாசிக்க கற்றுக்கொண்டேன். அந்த ஆண்டில் இருவது புத்தகங்கள் படிக்கலாம் என்று குறிக்கோள் வைத்திருந்தேன். பதினெட்டு படித்தேன். ஒரு புது துணிகர முயற்சியும் செய்தேன். சில மாதங்கள் முன்பு நான் படித்த புத்தகம் எனக்குள் உருவாக்கிய ஒரு கற்பனை உலகத்தை வார்த்தை வடிவமாக கொண்டு வந்து, என்னால் எளிதில் தொடர்பு படுத்தி கொள்ள முடிகிற மாதிரி கதாபாத்திரங்களை புகட்டி 500 பக்க கதை ஒன்றை எழுதினேன். இதோ, மனதில் தோன்றியதை வெளிக்கொண்டு வர ஒரு புதிய பதிவு செய்யும் மேடையை அடைந்து பேச தொடங்கியிருக்கிறேன்.  மனநிறைவான பல விஷயங்கள் நடந்தது சென்ற ஆண்டில்.


இந்த வருடங்களில்  நான் கற்றுக்கொண்ட உண்மை, ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டை வரவேற்க நாம் செய்யும் காரியங்களுக்கும் அந்த ஆண்டில் நாம் வாழ போகும் வாழ்க்கைக்கும் பெரும்பாலான நேரங்களில் தொடர்பு இருக்காது என்பதுதான். 'ஒரு ஆண்டு' என்று நாம் செய்யும் கணக்கின் மேலேயே எனக்கு பல சந்தேகங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. பூமி சூரியனை ஒரு சுற்று முடித்தால் ஒரு வருடம் முடிந்ததாக கணக்கு. ஆங்கில மாதங்கள் பன்னிரெண்டு, மாதத்திற்கு முப்பது அல்லது முப்பத்தி ஓர் நாட்கள். பிப்ரவரி மட்டும் பாவம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இருபத்தி ஒன்பது நாட்கள். எனக்கு சந்தேகம் வந்த முதல் இடம் - ஜூலியஸ் ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் ஸீஸர் எனும் ரோம மன்னர்களுக்காக தான் வருடத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் எனும் மாதங்கள் இணைக்க பட்டதாம். அவர்களுடைய காலத்துக்கு முன் ஆண்டின் நாட்கணக்கு எப்படி இருந்திருக்கும்? புத்தாண்டு இரண்டு மாதங்கள் முன்பே வந்தால் பருவ நிலை மாற்றங்கள் சரி வராது. இல்லை, அந்த அறுபத்தி ஓர் நாட்களையும் மீதம் உள்ள பத்து மாதங்களுக்கு பிரித்து கொடுத்திருந்தால், மாதங்கள் பன்னிரெண்டு என்று பல இடங்களில் கொண்டுள்ள எண் கணக்கு பிழைத்து விடும். மேலும், ஜூலியஸ் ஸீஸர் அகஸ்டஸ் ஸீஸர் எல்லாம் ஆங்கில மாத கணக்குக்கு மட்டும் தான். அங்கே ரோம மன்னர்கள் இருந்த போதே நாமும் சித்திரை முதல் பங்குனி வரை (இல்லை தை முதல் மார்கழி வரை. - தமிழ் புத்தாண்டு எப்போது என்ற கேள்விக்கு பதில் சொல்லும் அளவிற்கு பொது அறிவு எனக்கு கிடையாது!!!) பன்னிரெண்டு மாத கணக்கில் பல வேலைகளை பார்த்துக் கொண்டோம். ஆக, சீசர் காலத்திற்கு முன்பே ஆங்கில மாதங்கள் பன்னிரெண்டாக இருந்திருக்கலாம், அந்த இரண்டு மாதங்கள் வேறு பெயருடன் இருந்திருக்கலாம். இந்த சந்தேகத்திற்கு பதில் தெரிந்தவர்கள் எனக்கு விளக்கவுரை தந்து உதவி புரியுமாறு கேட்டு கொள்கிறேன்.  சில நாட்கள் முன்பு ஒரு மீம் பார்த்தேன். பூமி 50 ஆண்டுகளுக்கு முன்னதை விட இப்போது சற்று வேகமாக சுற்றுகிறது என்று. அது உண்மை தானா என்று தேடினேன். ஓரளவு உண்மை தான் போல. இன்னும் சில நூறு வருடங்களில் புத்தாண்டு சீக்கிரம் வந்துவிடும். பாவம். போனால் போகுது என்று இந்த பிப்ரவரி மாதம் இன்னும் ஒரு நாளை குறைத்து கொள்ளும். இஷ்டத்திற்கு பெயரை மாற்றிக்கொண்டு, மாதங்களை கூட்டி குறைத்து, நாட்களை சேர்த்து பிரித்து. அப்பப்பா… ஆங்கில ஆண்டின் கணக்கு எனது நம்பிக்கையை இழந்து விட்டது.


தமிழ் ஆண்டு கணக்கிலும் கேள்விகள் உள்ளது. பூமி வேகமாக சுற்றி நாட்கள் குறைக்க வேண்டுமே அதை யார் எப்போது ஏற்றுக்கொள்ள போகிறோமோ தெரியவில்லை. 500 ஆண்டுகளுக்கு பின்னர் வர போகும் தமிழ் மக்கள் பாவம். எந்த மாதம் புத்தாண்டு என்ற பஞ்சாயத்துடன் சேர்த்து எந்த மாதத்தில் நாட்களை குறைக்கலாம் என்பதை கூட பார்க்க வேண்டும். ஜோதிடத்தில் கணக்கு கொள்ள படும் ஒரு நட்சத்திரம் தேய்ந்து காணாமல் போகும் நிலையில் இருக்கிறதாம். காணாமல் போய்விட்டால் அந்த நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்கள் என்ன ஆவார்கள். வேறு நட்சத்திரத்தை எப்படி தேடி பிடிப்பார்கள். சில முக்கியமான விண்மீன் கூட்டமும் மின்னுவதை குறைத்து கொண்டே போகின்றனவாம். சீக்கிரமே பெரும் மாற்றமும் கொள்ளலாம் என்று பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இந்த நிலையில், ராசி பலன் எல்லாம் எத்தனை நாட்களுக்கு? ராசிக்கு காரணமான நட்சத்திரங்களும் கோள்களுமே இடம் மாறி, தோற்றம் மாறி, உயிரற்று போனால்? அந்த காலத்தில் திண்ணையில் அமர்ந்து வானத்தை பார்த்து ஜோதிடம் சொன்ன மக்கள் நாம் என்று பெருமை பேசுவதோடு நிற்காமல், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில், ஜோதிடம் படித்து முழு நேர ஜோதிடர்களாக பணிபுரியும் அனைவரையும் சேர்த்து ஒரு குழுவாக அமைத்து எந்தெந்த ராசி எந்தெந்த நட்சத்திரம் என்னென்ன மாற்றங்கள் பெற்றுள்ளன இத்தனை ஆயிரம் ஆண்டுகளில்? அந்த மாற்றங்களுக்கு பலன்கள் என்னென்ன? இப்படி பல கோணங்களை ஆராய சொல்ல வேண்டும் என்பது என் ஆசை. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நட்சத்திரங்கள் இருந்த வடிவமைப்பை பொறுத்து தான் இன்றும் தமிழகத்தில் பல பேருடைய தலை எழுத்து நிர்ணயிக்க படுகிறது. நம்மால் முடிந்த ஒரு உதவி, குறைந்த பட்சம் அந்த வடிவமைப்பை மேம்படுத்தி, இன்றைய விஞ்ஞானத்துடன் சரிசமமாக கொண்டு வந்து செய்வது தான்.  


ஆக மொத்தத்தில், நாள் மாதம் ஆண்டு நட்சத்திரம் ராசி என மேல்நாட்டு கணக்குகளும் சரி நம் நாட்டு கணக்குகளும் சரி, அனைத்துமே ஒரு மாறுதலுக்கு உட்பட்டது தான். எதுவும் நிரந்தரமாக நிலைத்து நின்று வழி காட்டுவது அல்ல. காலம் என்று நாம் கொள்ளும் கணக்கும் காட்சி என்று நாம் காணும் கனவும் பொய் தானோ என்று பாரதியார் கேட்டது, இந்த இடத்தில் இந்த காரணங்களால், பொய் தான் என்று எனக்குள் உணர்த்தியது. எதுவுமே நிலையான உண்மையும் இல்லை, எதுவுமே நிலைத்து நிற்கப் போவதும் இல்லை. இன்று இந்த நொடி மட்டும் தான் நம்மிடம் இருக்கும் ஒரே நிதர்சனம். அதில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்னொரு உயிருக்கு தீங்கு விளைவிப்பவற்றை தவிர்த்துவிட்டு உன் ஆழ்மனதின் அமைதிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் எதையும் செய்ய தயங்க வேண்டாம்.  பிற்காலத்திற்கு எது சரியானது எது நல்லது என்று யோசிப்பது தவறில்லை. ஆனால் தெரிந்து கொண்டே இந்த நொடியில் சந்தோஷத்தை கைவிடுவது தவறு. வரும் காலத்தில் நன்மை தரும் என்பதற்காக கடினமாக உழைப்பது தவறில்லை. அந்த உழைப்பிலும் மன நிம்மதியை பெற முயற்சி செய்யாமல் இருப்பது தவறு. நாளை என்றொரு நாள் எத்தனை பேருக்கு கிடைக்கிறதோ அனைவரும் பாக்கியசாலிகள் தான். இன்று என்ற நாளை வீணடித்து விட்டு நாளையை நோக்கி காத்திருந்து பயனில்லை. 


நீண்ட நாட்களாக செய்யாமல் விட்டுப்போன பிடித்தமான விஷயங்களை செய்து முடிக்கலாம். விருப்பமான உணவை சமைத்தோ வாங்கியோ உண்ணலாம். உடல் நலத்திற்காக உடற்பயிற்சி யோகா தியானம் போன்ற பழக்கங்களை கொண்டு வரலாம். மன அமைதிக்காக பயணம் செல்லலாம். பல வருடங்களாக தொடர்பில் இல்லாத நண்பர்களை தேடி கண்டுபிடித்து மனம்விட்டு பேசலாம். தினசரி செல்லும் போது பார்க்கும் தெருவில் உறங்கும் வயதானவர்களுக்கு ஒரு வேளை உணவு வாங்கி கொடுக்கலாம். செடி நடலாம். ஏற்கனவே இருக்கும் செடிகளுக்கு நீர் ஊற்றி சீர் செய்யலாம். நெருக்கமான துணை ஒருவருடன் காற்றுவாக்கில் ஒரு நீண்ட நடைபயணம் மேற்கொள்ளலாம். பல வருடங்களுக்கு முன்பு பிடித்தமான பாடலாக இருந்த ஒரு பாடலை இரவில் சிறிய ஒளியில் அமர்ந்து மனதை சென்றடையும் ஒலியில் வைத்து கேட்கலாம். வாழ கிடைத்த ஒவ்வொரு நொடியையும் ரசித்து ருசித்து வாழ இப்படி பல வழிகள் இருக்கின்றன. 


வருடா வருடம் புத்தாண்டிற்காக காத்திருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் ஒரு புத்தாண்டு தான் என்ற நம்பிக்கையோடு, இந்த நொடியை நான் என் இஷ்ட படி வாழ போகிறேன் என்று தீர்மானம் கொள்ளவது ஒரு நல்ல வழி. என் இஷ்ட படி என்ற பகுதியில் பிறருடைய துன்பம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்வது கடமை. அங்கே கவனம் அவசியம். நம் விருப்பத்திற்கும் பிறருடைய துன்பத்திற்கும் பல இடங்களில் ஒரு மெல்லிய நூல் இழை தான் வித்யாசம். அதை நேர்த்தியாக கடந்து வெற்றி கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பல சந்தர்ப்பங்களில் ஒருவருடைய விருப்பத்திற்காக பலருடைய துன்பமோ, பலருடைய விருப்பத்திற்காக ஒருவருடைய துன்பமோ சிக்கி தவிக்க தான் செய்கிறது. அந்நிலையில் வேறு ஒரு மன அமைதியை தேடி செல்லத்தான் வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் இந்த நொடி காத்திருக்கப் போவதில்லை. நடந்தவை, நடக்கபோகிறவை என  எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு நடப்பில் இருப்பதை மட்டும் ரசித்து வாழ தொடங்குங்கள். வாழ்க்கை மிக அழகாக தெரியும். 


Comments

  1. A beautiful reflection of how mind wanders every minute from one topic to another. Although it happens to me most of the times, I dont think I will be able to revisit them with a poetic touch like you did. Thanks for bringing a smile to me and look forward to reading more of your content!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!