ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயா?

எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?


அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே

அல்லல் நீக்க மாட்டாயா?


பாரதிதாசனின் அற்புத வரிகளுக்கு தண்டபாணி தேசிகர், தேஷ் என்ற ராகத்தில் இசையமைத்த இந்த பாடல், உண்மையில் எனக்கு கடந்த சில வாரங்களாக இன்பம் சேர்த்து வெற்றி கண்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு வந்த ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் வந்த பாடலும் சரி, சமீபத்தில் சஞ்சய் சுப்பிரமணியன் மேடையில் பல ஸ்வரஜதி சங்கதிகளுடன் அசத்திய பாடலும் சரி “இன்பம் சேர்க்க மாட்டாயா, மாட்டாயா?” என்று நம்மிடம் கேட்டுக்கொண்டே உலகத்தை மறக்க செய்கின்றன.


இன்பம் சேர்க்க யாழுமில்லை, கொரோனாவின் புண்ணியத்தில், கைபேசியின் ஊடே வரும் குரல்களையும் காணொளிகளையும் தவிர, அருகே அன்புமில்லை. இருந்தும், நேரும் துன்பங்கள் மறையவில்லை என்றாலும், அவை மனதில் ஏற்படுத்தும் ரணங்களும் தவிப்புகளும் சாந்தம் பெற்று, மன அமைதிக்கு இட்டு செல்கிறது இந்த தேஷ் ராகம். மென்மையான ஸ்வரஸ்தானங்கள் கொண்ட இந்த பாடலை வாசகர்கள் ஒருமுறை கேட்குமாறு பரிந்துரைக்கிறேன்.


கவிஞர் வாலி ஒரு பேட்டியில் “எல்லா மனுஷனுக்குள்ளயும்  நாலு அஞ்சு மனுஷன் இருப்பான். ஒரு கவிஞன், ஓவியன், நடிகன், பேச்சாளன், பாடகன், இசையமைப்பாளன், பாடலாசிரியன். இப்படி நிறைய இருக்கலாம். எதாவது ஒன்றை மட்டும் வெளியே கொண்டு வந்து, அதை மேன்படுத்தி, அவனுடைய அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். அந்த காணோட்டத்திலிருந்து பார்த்தால் கண்ணம்மா என்ற எனக்குள் ஒரு பாடகி, புல்லாங்குழல் வித்துவான், கிட்டார் மேதை, கதாசிரியர், மேடை பேச்சாளர், நடன புயல், நாடக சூறாவளி இப்படி பல அவதாரங்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய அடையாளத்துக்காக நான் கையாண்ட அவதாரம் வேறு. அதை தள்ளிவிட்டு மற்ற கிளைகளை கண்டோமானால், நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக என்னுடைய ஐந்தாம் வயது முதல் இசை என்ற அவதாரம் தொற்றி கொண்டே வருகிறது. சரியாக பேச்சே வராத பருவத்தில் புல்லாங்குழல், வளவளவென நியாயம் பேசிய பருவத்தில் வாய் பாட்டு, என்னுடன் படித்த தோழிமார்கள் அவர்களின் நான்கு வயது பிள்ளைகளுக்கு எல்.கே.ஜி. ஆன்லைன் வகுப்பு பார்க்கும் பருவதில் புதிதாக கிட்டார். அநேகமாக இந்த ஆண்டு டபுள் பாங்கோஸ் வாங்கி கற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறேன். முக்கிய குறிப்பு - அலைபாயுதே திரைப்படம் பார்த்த பொழுதிலிருந்து சினிமா பாடல்களை மனப்பாடம் செய்து பாடுவதில் எங்கள் குடும்பத்தில் என்னை மிஞ்ச ஆள் இல்லை.


இப்படி பலதரப்பட்ட இசை அவதாரங்களை நான் எடுப்பது என்னை பற்றி எனக்கே மிக பிடித்தமான விஷயம். புல்லாங்குழலை கையில் எடுத்து எட்டு ஆண்டுகள் ஆன பிறகு தான் தியாகராஜ கீர்த்தனைகள் வாசிக்க தொடங்கினேன். உண்மையிலேயே, தில்லானா மல்லாரி ஆகியவற்றை வாசிக்கும் போது அத்தனை நெகிழ்ச்சியாக இருக்கும் எனக்கு. லைட் மியூசிக் பாடகி ஒருவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டாலும் மூன்று ஆண்டுகளில் கீர்த்தனைகள் வரை வந்தேன். ராகங்கள், தாள ஜாதிகள் போன்றவைகளை ஒரே நேரத்தில் வாய் பாட்டுடனும் புல்லாங்குழலிலும் கற்றுக்கொண்ட காலம் மிக அற்புதமான உணர்வுகளை கொடுத்தது. எதற்கும் அரங்கேற்றம் செய்யும் அளவு எனக்குள் கலைகள் வளரவில்லை என்றாலும், எத்தனை பிழைகளுடன் பாடினாலும் வாசித்தாலும், அத்தனையையும் நான் எனக்குள் ரசித்தேன். 


நான் பத்து வயது முதல் இருபது வயது வரை இருந்த காலத்தில் தான் ரஹ்மான் ஆஸ்கார் நாயகன் ஆனார், வித்யாசாகர் லெஜெண்ட் ஆனார், ஹாரிஸ் பாக்ஸ் ஆபீஸ் இசையமைப்பாளர் ஆனார், யுவன் 75 கிலோ போதை பொருள் ஆனார், டி.எஸ்.பி மற்றும் விஜய் ஆண்டனி அடித்து கிழித்து நொறுக்கினார்கள், அனிருத் என்ற சிறுவன் கொலைவெறியுடன் உள்ளே புகுந்தான். சாப்பிட்டு தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தமிழ் திரையிசை பாடல்கள் நான் பாட பாட எனக்குள் பக்குவமாக ஒரு தனி அவதாரத்தை ஏற்படுத்திக் கொண்டது.  எனக்குள் இருக்கும் இந்த கத்துக்குட்டி திரையிசை அவதாரமும் என்னுடைய மிக பிடித்தமான அவதாரம்.


பொறியியல் என்ற போருக்காக தமிழை தியாகம் செய்ததை போல சங்கீதத்தையும் தியாகம் செய்தேன். சினிமா பாடல்கள் கூட என்னை சீண்டவில்லை. ஐந்து ஆண்டுகள் கழிந்து பொன்னியின் செல்வனுக்காக தமிழை சிக்கெனப் பிடித்தேன். பத்து ஆண்டுகள் கழிந்து இரண்டு வருடங்கள் முன்பு தான் புல்லாங்குழல் எடுத்து தியாகராஜ கீர்த்தனையை தேடினேன். தியாக ப்ரஹ்மம் கணக்கு வாத்தியாரை போல, இத்தனை நாள் காணாமல் போனதற்கு சேர்த்து வைத்து பயிற்சி செய்ய வைத்தார். மறுபடியும் முதல் பரோட்டாவிலிருந்து தொடங்கி கடந்த சில மாதங்களாக தான் ஒரு வாரியாக வாசிக்கிறேன். நான் வாசிப்பது எனக்கு பிடிக்கும் அளவுக்கே இப்போது தான் வந்திருக்கிறது.


இத்தனை ஆண்டுகளாக எங்கோ தொலைத்து விட்ட இன்பத்தை தேடி பிடித்து கட்டிக்கொண்ட நிம்மதி. சஹானா ராகத்தில் ‘அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை’ என்ற வள்ளலார் மீதான பாடலை சென்ற வாரம் வாசித்தேன். இசை தந்த கருணையில் அத்தனை பெரிய மன அமைதி எனக்குள். நான் வாசித்ததை, பத்து ஆண்டுகள் முன்பு அதை கற்றுக்கொடுத்த ஆசிரியர் கேட்டிருந்தால், அவரது வழக்கம் போல எனது புல்லாங்குழலை பிடிங்கி வைத்துக்கொண்டு வெளியே அனுப்பியிருப்பார். அத்தனை தாள பிசகு, ஸ்ருதி சுத்தமின்மை போன்ற பிழைகள். இருப்பினும் பத்து வருடங்கள் முன்பு போல ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்திற்காக நான் வாசிக்கவில்லை. எனக்காக மட்டும் வாசித்தேன். அன்று அந்த பெரிய மக்கள் கூட்டம் கொடுத்த கைதட்டல்களை விட அதிக இன்பத்தை இன்று பெற்றேன். அப்போது தான் ஒரு உண்மையை உணர்ந்தேன். 'இசையின் பயன் இறைவன்', 'இசையின் பயன் ரசிகனின் சந்தோஷம்' என்ற கருத்துக்கள் இருந்தாலும், ஒரு உன்னதமான இசையின் காரணமும் பயனும் அதை இசைக்கும் கலைஞனின் ஆழ்மனதின் அமைதியும் மகிழ்ச்சியும் தான்.


‘துன்பம் நேர்கையில்’ பாடலை பாட கற்றுக்கொண்டேன். இப்போது அதையும் புல்லாங்குழலில் வாசிக்க கற்றுக்கொண்டே இருக்கிறேன். இரண்டு வாரங்களாக. தியாக ப்ரஹ்மமே பரவாயில்லை. தண்டபாணி தேசிகர் என்னை வச்சு செய்கிறார். கூடிய விரைவில் வாசித்து விடுவேன் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால்  திரைப்பட பாடல்கள் அல்வாவை போல எளிதில் குழலில் நுழைந்து விடுகின்றன. சில இளையராஜா பாடல்களை வாசித்து என் அப்பா மற்றும் நண்பன் ஒருவனிடம் பாராட்டுக்கள் வாங்கினேன். யூட்யூபில் தேடினால் எளிதில் கிடைக்க போகும் பாடல்களுக்கு ஏன் இத்தனை பில்ட் அப் என்று வாசகர்கள் நினைக்கலாம். ஏன் என்று தெரியவில்லை. சப் வூபர் சரௌண்ட் சிஸ்டம் கொண்டு 8D பாடல் டிராக் தரும் நிறைவைவிட ஸ்ருதி சேராத என்னுடைய புல்லாங்குழலில் தட்டு தடுமாறி கற்றுக்கொண்டு வாசிக்கும் ஓரிரு பாடலில் எனக்கு அதிக நிறைவு கிடைக்கிறது. 


அதேபோல் சென்ற வருடம் கிட்டார் வாங்கி நான்கு மாதங்கள் முண்டியடித்து ‘ராஜராஜ சோழன் நான்’ பாடலை வாசித்து, அதை பதிவு செய்து அந்த காணொளியை என் தந்தையின் பிறந்தநாளுக்கு அனுப்பினேன். நான் கிட்டார் வாங்கியதே அறியாத என் தந்தை, அதில் நான் அவரது மானசீக கடவுளான ராஜாவின் பாடலை வாசிப்பதை பார்த்து பெரிதும் மகிழ்ந்தார். அதன் பிறகு தான் ஒழுங்காக கற்றுக்கொள்ளலாம் என்று கிட்டார் கார்ட்ஸ் பற்றி தெரிந்துகொண்டு பயிற்சி செய்ய முயல்கிறேன்…. இன்னமும் ததிங்கிணத்தோம் தான். ஆனாலும் மனம் தளராமல் அடுத்த இளையராஜா பாடலை கையில் எடுத்துள்ளேன். கிட்டாரில் முதல் கோட்டிலிருந்து வரும் பொறுமை இல்லை எனக்கு. நேராக ‘ஒரு கோடியை தரும் அந்த கடைசி கேள்விக்கு’ குதிக்கிறேன். ஏகலைவன் போல ஆசிரியரே இல்லாமல் நேராக இளையராஜா பாடல்கள் கற்றுக்கொள்ளும் எனக்குள் ஒரு “அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு” பாடல் போன்ற வெறி இருந்தாலும், எனது கிட்டார் உண்டாக்கும் சப்தம் எனது பக்கத்துவீட்டுக்குக்காரனை எந்த வெறிக்கு தள்ளுகிறது என்று தெரியவில்லை. போலீஸ் கேஸ் ஆனால் ஒரு தனி பதிவில் பகிர்கிறேன்.


பற்றாக்குறைக்கு இந்த வீட்டிற்கு நான் வந்து நான்கு ஐந்து மாதங்கள் கழிந்தபின் மாடி வீட்டில் வசிக்கும் ஒரு ஜெர்மன் பெண்மணி, நீ பொறியியலாளர் என்று தானே சொன்னாய். உன் வீட்டிலிருந்து வரும் சப்தங்களை கேட்டால் நீ இசை துறையில் இருப்பது போல இருக்கிறதே என்று கேட்டாள். அதற்கு காரணம் என்னுடைய குரல் வளம். இந்த வீட்டில் குடியேறிய நாள் முதல் தினம் தினம் ராஜா ரஹ்மான் யுவன் முதல் எம்.எஸ்.வி, ஆர்.டி.பர்மன் வரை இங்கே இசைக்க, நான் அவர்களுடன் பாட… ஒரே கூத்து தான். நான் பாடினாலே என்னுடைய கல்லூரியிலும், சென்னையில் பணிபுரிந்த மென்பொருள் நிறுவனத்திலும் “ஆத்தா.. பாடறத நிறுத்து ஆத்தா…” என்று கேலி செய்யும் நபர்கள் இருந்தாலும், “நல்ல பாடின” என்று கூறும் சிலர் தரும் நம்பிக்கையில் விடாமல் பாடிக்கொண்டே தான் இருந்தேன். இப்போதும் தொடர்கிறது. கண்ணம்மாவை பொறுத்தவரை ‘வாய் விட்டு பாடினால் மனம் சரியில்லை என்ற நோய் விட்டு போகும்.’


பாடல் வரிகளை புரிந்து கொண்டு மெட்டோடு சேர்த்து பாடும் போது ஒரு விதமான பூரிப்பு. சில நல்ல வரிகளை பாடலாக இல்லாமல் தனியே படித்திருந்தால் நான் அவைகளை அத்தனை ரசித்திருக்க மாட்டேன். பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பதை போல மெட்டோடு சேர்ந்து வரிகளும் இன்பத்தை கொடுக்கிறது. நீங்களே பாருங்கள்.


“நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்.

காலமெல்லாம்… 

காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்”


“வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்

சாய்ந்து விட்டேன் தோழி . 

அவர் மறவேன் மறவேன் என்றார்

உடனே மறந்து விட்டார் தோழி…

மறந்து விட்டார் தோழி”


“சலங்கை ஓசை போதுமே

எந்தன் பசியும் தீர்ந்து போகுமே…

உதய கானம் போதுமே

எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே…”


“நான் உனை நீங்க மாட்டேன்.

நீங்கினால் தூங்க மாட்டேன்”



“பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும் 

பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்”


“நதிகளில்லாத அரபு தேசம் நான் 

நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்”


“நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்”


“மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே

உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே”


“அழகாய் நானும் மாறுகிறேன்

அறிவாய் நானும் பேசுகிறேன்

சுகமாய் நானும் மலறுகிறேன்

உனக்கேதும் தெரிகிறதா?”


“நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை

நான் வேறு நீ வேர் என்றால் நட்பு என்று பேரில்லை”


“யுகம் யுகம் காண முகம் இது போதும்

புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்”



மிக மிக அற்புதமான வரிகள் இவை. அப்படியே படிக்கும் போது கூட “அடடே.. என்ன கற்பனை. என்ன வரிகள்” என்று சிலிர்க்க வைக்கும் வரிகள். இருப்பினும் இசையாக கேட்கும் போது மேலும் ஒரு அலாதியான சுகத்தை தருகிறதல்லவா… வரிகளை புரிந்து கொண்டு அதை நாமே பாடுகையில் வரும் நிறைவு நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு. ஹீரோ இன்ட்ரோ பாடல் கொடுக்கும் துடிப்பும், ஹீரோயின் இன்ட்ரோ பாடல் கொடுக்கும் கிளிர்ப்பும், இருவரும் சேர்ந்து பாடும் டூயட் தரும் சந்தோஷமும், பிரிந்த பின் வரும் பாடல் தரும் சோகமும், இவை அனைத்தும் நம் வாழ்வில் நடக்கவில்லை என்றாலும் நமக்காகவே எழுதி இசையமைத்ததை போன்ற உணர்வை சில நேரங்களில் தருவது உண்மை. அந்நேரங்களில் அதை கேட்டும் பாடியும் நம்முடைய உணர்வுகளுக்கு தீணி போடுவது ஒன்றும் தவறில்லை. அதுவும் ஒரு விதமான புத்துணர்ச்சி தான்.


தன்னம்பிக்கையோ, தைரியமா, துணையோ, பிரிவின் வலியோ, ஏக்கமோ, சோகமோ, சேர்க்கையின் சுகமோ, மட்டற்ற மகிழ்ச்சியோ. எதுவாயினும் அதற்கு மெருகேற்றி அனுபவிக்க இசையை துணை கொண்டு செல்வது தான் நான். யார் என்ன நினைத்தால் என்ன, என்ன சொன்னால் என்ன. இத்தனை நாட்களாக எங்கோ மறைந்து கிடந்த ஒரு இன்பத்தை கண்டுகொண்டேன். வெறும் வாய்ப்பாட்டாய் இருந்த அன்பே … மறுபடி குழலாக, புதிய கிட்டார் கம்பியாக கடந்த சில மாதங்களாக என்னை ஆளும் அன்பே… ஆனந்தம் என்ற ஒன்று இந்த கண்ணம்மாவிற்கு ஏது? இசை என்ற அன்பே! நீ இல்லாது…


Comments

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!