தூக்கம் விற்று தலையணை வாங்கி…
டிசம்பர் மாதம் கடைசி வாரம் முதல் எனது நெட்பிளிக்ஸ் முன் பக்கத்தில் ஒரு புதிய ஹாலிவுட் திரைப்படம் வந்து வந்து முன்னே நின்று “என்னை பார். என்னை பார்.” என்பதை போல நச்சரித்து கொண்டே இருந்தது. Leonardo Dicaprio வின் முகத்தை பல்வேறு கோணங்களில் காட்டி விளம்பரம் செய்தது நெட்பிளிக்ஸ். அவர் படத்தை பார்க்கும் அளவிற்கு எனக்கு இப்போது பொறுமை இல்லை என்று தவிர்த்துக் கொண்டே வந்தேன். ஒரு வழியாக சென்ற வாரம் ஞாயிறு அன்று எனது தோழி வீட்டில் Don't Look Up என்ற அந்த படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. திரையரங்கு அனுபவம் போலவே தோழியின் புது ப்ரொஜெக்டரில் திரைப்படத்தை ஓட செய்து, ப்ளூ டூத் ஒலிபெருக்கி, வசதியான பீன் பேக் இருக்கை மற்றும் சேமியா உப்புமாவுடன், பல நாட்கள் கழித்து நாங்கள் எங்கள் பாணியில் ரசித்து பார்த்தோம். அதில் நடித்தவர்களில் Leonardo DiCaprio, Jennifer Lawrence, Jonah Hill, Cate Blanchett இவர்களை தவிர மற்றவர்களை பெரிதும் அறியவில்லை நான். ஒரு சிறிய காட்சியில் வந்த ஒரு முகம்… எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று சிந்தித்தேன். அந்த தருணத்தில் தோன்றவில்லை. பின் விக்கிபீடியா என் தலையில் தட்டி. “அட எரும.. அது Chris Evans” என்றது. அட ஆமா ல… என்று நானும் தெளிந்து கொண்டேன். உடம்போடு ஒட்டி தைத்ததை போன்ற ஒரு அடர் நீல நிற உடுப்பில், கையில், நடுவே பெரிய நட்சத்திரம் பதிக்கப்பட்ட பெரிய வைப்ரேனியம் தட்டுடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்து நின்றால் தான் அவரை நான் அடையாளம் கண்டுகொள்வேன் போல. இப்படி சில நடிகர்களை “அட.. இது இவர் ல.. அவர் ல.. ” என்று நினைத்துக்கொண்டே படம் பார்த்த என்னை, பெரிதும் கவர்ந்தது Meryl Streep தான். ஆஸ்கர் விருது சிலையில் இருக்கும் அந்த ஆண், “யம்மா.. நீ இனி இங்க வர வேணாம். நானே வருஷா வருஷம் உன் வீட்டுக்கு வந்துடறேன்” என்று கூறிவிடும் அவரிடம். இருபத்தி ஒரு முறை அவர் ஆஸ்கர் போட்டியில் இருந்த பிரபல நடிகை. ஒரு மாத காலமாக இந்த படத்தின் சிறிய காட்சிகளை ஆங்காங்கே கண்ட நான், ஒரு முறை கூட Meryl Streep உம் நடித்திருக்கிறார் என்று அறிந்து கொள்ளவில்லை. உண்மையிலேயே அவரது நடிப்பு தான் அந்த படத்தின் “ப்ப்பாஆஹ்ஹ்ஹ்” சொல்லும் அளவு இருந்தது.
டீனேஜ் பருவத்தில் சன் டிவி ஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் மொழி மாற்றி திரையிடும் போது பல முறை தவிர்க்காமல் பார்த்ததில் Independence Day, Day after tomorrow, Airforce One, 2012 என பல படங்களை பார்த்து, அமெரிக்க அதிபர்களுக்காக சில்லறைகளை சிதற விட்ட கோஷ்டியில் நானும் ஒருத்தி. பூமிக்கு எந்த தீங்கு வந்தாலும் எல்லா நாடுகளும் மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கும் தருணத்தில், அமெரிக்க அதிபர் தனது காதலி மனைவி பிள்ளைகள் என எதையும் கருதாமல் அந்த தீங்கிலிருந்து நியூயார்க், கலிபோர்னியா, வாஷிங்டன், டெக்சாஸ், சின்சினாட்டி போன்ற சில ஊர்களை காப்பாற்றி உலகத்தையே காத்த அடுத்த யேசுநாதர் போல போஸ் கொடுப்பார்கள் அந்த திரைப்படங்களில். 2020 ஆண்டின் கொரோனா ஒட்டுமொத்த ஹாலிவுட் படங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த பில்ட் அப்பை சுக்குநூறாக போட்டு உடைத்து விட்டது. நாமாவது விளக்கு போட்டு கை தட்டி டாஸ்க் பண்ணிக்கொண்டிருந்தோம். அவர்கள் அங்கே “டீச்சர் அவன் என்ன அடிச்சிட்டான். இவ என் ரப்பர் அ திருடிட்டா” என்று காலம் கடத்தினார்கள். Meryl Streep, Don't Look Up திரைப்படத்தில் அமெரிக்க அதிபராக நடித்திருந்தார். உலகையே அழிக்க போகும் பிரச்சனை ஒன்று தன் முன் கொண்டு வந்தால், தான் அதை எப்படி உதாசீனம் செய்வேன், தேவையே இல்லாத கீழ்த்தரமான செயல்களை எப்படி செய்வேன், அதை வைத்து அடுத்த தேர்தலுக்கு எப்படி வாக்கு சேகரிப்பேன், இறுதியாக அதிலும் எப்படி காசு பார்க்க வழி தேடுவேன் என்று காட்சிக்கு காட்சி முன்னாள் அதிபரை போன்று நடித்திருந்தார். பற்றாக்குறைக்கு மென்பொருள் விற்கிறேன், செயற்கை நுண்ணறிவு பொருத்துகிறேன், மனிதனின் வாழ்க்கையை மாற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு ஒரு வியாபாரி. அந்நாட்டில் ஏவப்படும் விண்கலத்தை கடைசி நிமிடத்தில் திசை மாற்றும் அளவிற்கு சக்தி படைத்த அந்த வியாபாரி, உலகத்தை நோக்கி வரும் ஆபத்திலிருந்து பணம் சம்பாதிக்கும் வழியை கூறி இரண்டே நிமிடத்தில் பிரதமரை தன் வழிக்கு கொண்டு வருகிறார். இதுவும் அமெரிக்காவில் தற்போது, சாகாவரம் தருகிறேன், விண்வெளிக்கு தனி விண்கலம் அனுப்புகிறேன் என்று குறிக்கோள்களுடன் செயல்படும் சில வியாபாரிகளை குறிவைத்து தான் என்று நான் நினைக்கிறேன். இத்தனை வலுவான கருத்துக்களை முன்வைத்தும் அந்த திரைப்படத்தை வெளியிடவோ, வெளியிட்டபின் புறக்கணிக்கவோ, அதில் வரும் காலண்டர்களை தேடவோ அங்கே பலர் இல்லை. படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
இந்த கதாபாத்திரங்கள் நமது நாட்டில் ஒற்று போகுமோ என்று ஞாயிறு இரவு அன்று சிந்தித்தேன். திங்கட்கிழமை காலை, என்னுடைய முகப்புத்தகத்தில் பல மீம். ஒரே செய்தியை சுற்றி. யாருமே பார்க்காத ஒரு சேனலில் யாருமே அறிந்திடாத ஒரு நிகழ்ச்சியில் பத்து பன்னிரெண்டு வயது பிள்ளைகள், அவர்களுக்கு சொல்லி கொடுத்தது போலவே, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை கேலியாக பேசிவிட்டார்களாம். அதற்காக அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர் இதை கண்டித்து மந்திரியிடம் புகார் தெரிவித்திருப்பதாக ஒரு ட்வீட். அதை சார்ந்த செய்திகளை ஒரு மணி நேரம் பார்த்தேன். அதன் பிறகு முந்தைய நாள் இரவு வந்த எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடுக்க கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை. இப்போது தான் இணையத்தில் பதிவுகளை வெளியிட தொடங்கியிருக்கிறேன். அதற்குள் இது அவர்கள் கண்ணுக்கு சென்று, பின் “எப்படி நீ இப்படி பேசலாம்” என்று என் மீது புகார்கள் வந்து, நான் ஒரு மீம் தலைப்பாகி, சில நாட்களில் செலிபிரிட்டி ஆக விரும்பவில்லை இந்த கண்ணம்மா. பேச்சுரிமையும் கருத்துரிமையும் ஓட்டு போட்ட கையோடு தூக்கி தெரு முனையில் வீசிவிட்டு அல்லவா வந்திருக்கிறோம். ம்ம்ஹ்ம்ம்ம்… வாயே திறக்க மாட்டேன்.
சரி. மறுபடி அந்த திரைப்படத்திற்கு வருவோம். Leonardo DiCaprio வை தெரியாத மக்கள் உலகத்தில் மிக சிறிய பகுதியினர் தான். டைட்டானிக் என்ற காவியத்தை பலரும் பல காரணங்களுக்காக பார்த்து பரவச பட்டது உண்டு. அவர் ஆஸ்கர் விருது வென்ற போது ஹாலிவுட் ரசிகர்கள் அனைவருமே அவரது பேச்சுக்கு “கண்ணுல தண்ணி வெச்சுண்டா…” அப்படி பட்ட ஒரு மகா மெகா ஸ்டார் நடித்த திரைப்படத்தில் Meryl Streep க்கு இத்தனை பெரிய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு அந்த இயக்குனருக்கு முதல் பாராட்டு. அவரும் பேட்டிகளில் Meryl Streep பற்றி ஆஹா ஓஹோ என்று அத்தனை பாராட்டு தருகிறார். கூட நடித்த யாரும், படத்தின் கதாநாயகன் கூட இதை எதிர்க்கவில்லை. மாறாக அத்தனை பெருமிதத்தோடு பேசுகிறார்கள். இதை போலவே மிக பெரிய நடிகர் நடித்த ஒரு தமிழ் படம், அதில் முக்கிய பாத்திரம் ஒரு பெண். நாயகனை விட அதிக பாராட்டுகள் பெரும் ஒரு பெண் கதாபாத்திரம். அதற்கு, மிக பெரும் வெற்றி திருமகனான அந்த கதாநாயகனும் மனம் உவந்து பாராட்டும் நிகழ்வு. இப்படிப்பட்ட விஷயங்கள் கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் திரையுலகில் நடந்திருக்கிறதா? இல்லை பத்து ஆண்டுகளில்? இல்லை. என் நினைவுக்கு வரவில்லை. வாசகர்கள் நினைவுக்கு வந்தால் கூறவும்.
சந்திரமுகி திரைப்படத்தை வேண்டுமானால் கூறலாம். ஆனால் இயக்குனர் பாசில் அவர்கள் மலையாளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் முன் மணிசித்ரதாழ் என்ற பெயரில் தந்த படத்தின் ரீமேக் தான் சந்திரமுகி. ரஜினி கதாபாத்திரத்தில் நடித்த மோகன்லால் இடைவெளிக்கு பின்பு தான் வருவார். ஆனால் நமது திரைப்படத்தில் தலைவருக்கு என்ட்ரி ஷாட் அடிதடி, அறிமுக நடனத்துடன் துடிப்பான பாட்டு, பல பஞ்ச் வசனங்கள். முக்கிய கதாபாத்திரம் அந்த பெண் தான் என்றாலும் அதில் நடித்ததற்காக தலைவருக்கு அத்தனை பாராட்டுகள் குவிந்தன. அன்று நானும் பாராட்டினேன். இன்று என்னை நானே கேள்வியாக பார்க்கிறேன். இதில் என்ன பெருமிதம் என்று.
தமிழ் திரையுலகில் இது ஒரு ட்ரெண்ட். நன்றாக கவனித்தால் தெரியும். ஒரு புதுமுக நடிகன் கதாநாயகனாக அறிமுகமான பிறகு அப்போது பெரிதும் பேசப்படும் கதாநாயகிகளோடு சேர்ந்து புது முக இயக்குனர்களுடன் சில படங்கள் பணியாற்றியதும் பெரிய இயக்குனர்களுடன் வாய்ப்பு கிட்டும். அந்த படங்களில் புதுமுக கதாநாயகிகள். அவைகளும் வெற்றி பெற்றதும் அவருக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்து வந்துவிடுகிறது. மனைவி, மக்கள், பிள்ளைகளின் பள்ளி பருவம், கல்லூரி, திருமணம் என்று அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ந்து கொண்டே போகும். ஆனால் திரைப்படத்தில், வருடாவருடம் வரும் புதுமுக இளம் கதாநாயகிகளோடு ஆட்டமும் பாட்டும். சீயான் விக்ரம், சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை இதுதான் நடைமுறை. இதே ஒரு கதாநாயகியின் படிகளை பாருங்கள். முதல் படம் புதுமுக கதாநாயகனுடன். அது வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அதிக கவர்ச்சியும் கொஞ்சம் முகபாவனைகளும் இருந்தால் போதும். பெரிய கதாநாயகர்கள் பலருடன் வரிசைகட்டி கொண்டு அடுத்த மூன்று வருடங்களில் ஐந்து படம். அதன் பிறகு? அந்த கதாநாயகர்களுக்கு புது நடிகைகள் கிடைத்து விடுவார்கள். இவர்களுக்கு விளம்பர படங்கள் கூட கிடைக்காது. அசின் முதல் காஜல் அகர்வால், அனுஷ்கா ஷெட்டி,தமன்னா, நித்யா மேனன் மாளவிகா மோகன், பிரியங்கா மோகன் வரை இது தான் உண்மை. ஏதோ, 2000 களில் சிம்ரன் ஜோதிகா பத்து வருடம் நின்றார்கள், இப்போது த்ரிஷாவும் நயன்தாராவும் பதினைந்து ஆண்டுகள் தாண்டி நிற்கிறார்கள். த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறேன் என்று சொல்லி வரிசையாக மூன்று படங்கள் தோல்வியுற்று, இப்போது பார்பி பொம்மை போல படங்கள் எடுத்து இன்ஸ்டாக்ராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் புண்ணியம். நயன் தப்பித்து தனித்து நிற்கிறார். மற்றபடி தமிழ் திரையுலகில் காதலுக்கும் கவர்ச்சிக்கும் மட்டும் பயன் படும் பெண்கள் என்னும் பொருள் காலாவதி ஆகும் நாள் மூன்று வருடங்கள்.
கலையில் வயசு வரம்புகள் கிடையாது தான். பாத்திரத்தை தான் பார்க்க வேண்டுமே தவிர நிஜ வாழ்க்கையை ஒப்பிட கூடாது தான். ஆனால் இது எல்லை மீறி போகிறதே என்ற ஆதங்கம் பல நாட்களாக எனக்குள் இருந்தது. Meryl Streep க்கு கிடைத்த மரியாதையையும் அங்கீகாரத்தையும் பார்த்தபிறகு உள்ளுக்குள் குமுறுகிறது. 21 வருடங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் இருக்கும் பெண் எங்கே. இரண்டே வருடத்தில் விருது விழாவிற்கே அழைப்பு கிடைக்காத பெண்கள் எங்கே. தமிழ் திரையுலகில் ஒரு Meryl Streep கூட இல்லையா? இல்லை என்று கூறினால் உங்களிடம் இதற்கு மேல் பேசி ஒரு பயனும் இல்லை. அவரை விட திறமையான பல பெண் நடிகர்கள் இருக்கிறார்கள் இங்கே. நெற்றியில் வீபூதி பட்டையுடன் வெள்ளை அல்லது காவி புடவையுடன் மட்டுமே நடித்தாலும் கதாநாயகனை விட அதிக சம்பளம் வாங்கிய கே.பி. சுந்தராம்பாள் போன்ற நடிகைகளை பார்த்த தமிழ் சினிமா, இன்று கவர்ச்சியின் அடிப்படையில் மட்டும் பெண் நடிகர்களை வாழ வைத்து வருகிறது.
1975 யில் தலைவருக்கு முதல் பட கதாநாயகியாக நடித்து, 1991 இல் அவருக்கு தாயாக நடித்த ஸ்ரீவித்யா இப்போது உயிரோடு இருந்திருந்தால் 2021 இல் அவருக்கு ஆரத்தி எடுக்கும் காட்சியில் வந்த பாட்டியாக நடித்திருப்பார். இது தான் இன்றைய தமிழ் சினிமா. தலைவர் ரஜினிகாந்த் என்னும் மனிதர் முடியை சிலுப்பிக்கொண்டு கைகளை ஆட்டிக்கொண்டு படியில் இறங்கி வரும் அழகுக்கே தொண்டை கிழிய கத்தி கூப்பாடு போடும் ரசிகை தான் நான். இருப்பினும் அவரது படங்களுக்காக மகளை விட பத்து பதினைந்து வயது சிறிய பெண்களை தங்கை என்றும் தன்னைவிட ஐந்து வயது சிறிய பெண்ணை பாட்டி என்றும் பாவித்து நடிக்கும் இந்த சினிமா உலகம் எனக்கு வெறுப்பு தான் தருகிறது.
தமிழ் திரையுலகம் உண்மையில் ஒரு உன்னதமான நிலையில் இன்று நிற்கிறது. கடந்த பத்து வருடங்களாகவே புதுமுக இயக்குனர்கள் பலர் உள்ளே வந்து நடைமுறையில் இருக்கும் மறுக்கப்படும் பல கொடுமைகளை, சமூக அநீதிகளை படமாக எடுத்து உலகத்திற்கு காட்டுகிறார்கள். இதை நினைத்து நான் பெரிதும் நெகிழ்கிறேன். கூடவே 99.5 சதவிகித கதைகளில் பெண்கள் காட்சி பொருளாக, காதல் காட்சிக்காக, கவர்ச்சிக்காக மட்டும் வரும் வழக்கமும் வளர்ந்து நிற்கிறதே. இதை இப்படியே விட்டுவிடலாமா? பெண்களை சார்ந்து வந்த திரைப்படங்களில் சென்ற வருடம் நயன்தாராவின் நெற்றிக்கண், 2020 யில் மூக்குத்தி அம்மன், தலைவி, பொன்மகள் வந்தாள், பென்குயின் போன்ற படங்கள் தான் பேச பட்டது. அதுவும் பெரும்பாலும் படம் சரியில்லை என்ற பெயர் தான். அவ்வப்போது இப்படி ‘வுமன் சென்ட்ரிக்’ படங்கள் வருகிறது தான். ஆனால் அதற்கு வரும் விமர்சனங்களை பார்த்தால் புதிதாக திரைக்கதை எழுத போகும் எவனுக்கும் பெண்களை நடு நாயகமாக கொண்டு கதை எழுத தோன்றாது.
நான் என்ன செய்ய முடியும். அகநானூறு புறநானூறு எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஐம்பெரும் காப்பியங்கள் என்று சங்க கால இலக்கண இலக்கியங்கள் அனைத்துமே ஆண்கள் எழுதியது தான். எனக்கு தெரிந்த ஒரே சங்ககால தமிழ் பெண் புலவர் ஔவையார் மட்டும் தான். துறவறம் பூண்டு கருத்துக்களை கூறியிருக்கிறார். மற்ற இலக்கியங்கள் போல தலைவன் தலைவி என காதல் பாடல்கள் எழுத அந்த காலத்தில் பெண்கள் இல்லையா? இல்லை பெண்களை பேசவிடவில்லையா? பத்தாம் வகுப்பு மனப்பாட செய்யுளில் ஒரு புறநானூற்று பாடலில் பெண்ணின் உடலை பலா மரத்துடன் ஒப்பிட்டு எழுதிய பாடல். அதை என் தமிழ் ஆசிரியை பாடம் நடத்தவே தயங்கினார். எத்தனை பாடல்கள். பெண்களின் அழகை வர்ணித்து. சிகை இப்படி இருக்க வேண்டும். சிரிப்பு இப்படி ஒலிக்க வேண்டும். வெட்கம் இப்படி பூக்க வேண்டும் என்று எண்ணற்ற கோட்பாடுகள், வர்ணனை என்ற பெயரில். அதே போல். அந்த காலத்தில் ஒரு ஆணை அங்கம் அங்கமாக ஒரு பெண் வர்ணித்து பாடியிருந்தால் இன்று அவை நூல் தொகுப்பிற்கு வந்திருக்குமா? ஏதோ இந்த ஆண்டாள் நாச்சியார் பாவம். சூடி கொடுத்த சுடர்க்கொடி. மாலை கட்டி மணாளனுக்காக காத்திருந்து இறைவனடி சேரும் வரை கனவு காதலனான கண்ணனுக்கு பாட்டு எழுதி பெயர் பெற்றுவிட்டாள். அதுவே அவள் “சூடி கொடுத்து காத்திருக்கிறேன். கண்ணன் இன்னமும் வரவில்லை. அதனால் பெண்களே… பிறரை நம்பாமல் சொந்த முயற்சியில் நன்னெறி கடைபிடித்து வாழுங்கள்” என்று ஒரு பாட்டு எழுதியிருந்தால் அவளும் காணாமல் போயிருப்பாள் வரலாற்று பக்கத்திலிருந்து.
“ஆண்கள் நிலாவில் காலடி எடுத்து வைத்த பிறகு தான், என் பக்கத்து பெண்கள் வீட்டு வாசலை தாண்டினார்கள்.” இது ஒரு திரைப்படத்தில் நான் கேட்ட வசனம். கவர்ச்சிக்கும் காதலுக்கும் மட்டும் காட்சி பொருளாக காட்டி பெண்களை திரும்ப உள்ளே அனுப்பி விடாதீர்கள் என்பது தான் இன்றைய இளம் இயக்குனர்களுக்கு என்னுடைய வேண்டுகோள். சென்ற ஆண்டு வெற்றி பெற்ற பல திரைப்படங்கள் - சர்பட்டா பரம்பரை, கர்ணன், ஜெய் பீம், மாநாடு. இவை அனைத்தும் இருபது ஆண்டுகள் முன்பு எடுக்கப்பட்டிருந்தால் திரைப்படம் வெளிவரவே விட்டிருக்க மாட்டார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த கருத்துக்கள் பேசுபவர்களை தமிழ் சினிமா அருகே கூட விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இன்று எதையும் பேசலாம், படமாக்கலாம் என்ற உரிமை வந்திருக்கிறது. தமிழ் சினிமா, மொழி என்ற தடுப்பையும் தாண்டி பல கோடி மக்களுக்கு உலகின் பல மூலைகளுக்கும் போகும் காலமும் வந்துவிட்டது. இந்நேரத்தில் முக்கியமான கருத்துக்களோடு சரியான கருத்துக்களையும் பேசவில்லை என்றால், சமூகத்தில் ஜாதி மத பிரிவினைகள் அழிய வேண்டும் என்று பேசுவதுடன் பெண்களுக்கு மரியாதையும் சம உரிமையும் தந்து பேசவில்லை என்றால், தூக்கத்தை விலைக்கு விற்று தலையணையும் மெத்தையும் வாங்கி வந்து வழியில்லாமல் நிற்கும் நிலை வந்துவிடும்.
Always a pleasure to read...
ReplyDelete