நினைவுகள் தொடர்கதை
சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன். மாலை மங்கும் வேளை. கோடை மழை சில்லென்ற காற்றுடன் வந்து சேர்ந்த நேரம். ஜூன் மாதம் கோடை விடுமுறை முடிந்து கல்லூரி மீண்டும் திறந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. மஞ்சள் வண்ண பொறியியல் கல்லூரி பேருந்து ஒன்று ஆள் இல்லாத நெடுஞ்சாலை ஒன்றில் தாலாட்டி தூங்க வைக்கும் ரயில் வண்டியை போல சென்றுகொண்டிருந்தது. அந்த கல்லூரியில் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் அதிகம் பேச அனுமதி இல்லை. பேருந்தில் முன் ஐந்து இருக்கைகள் பெண்கள். பின்னே உள்ளவை ஆண்கள். இடையே கம்பி கட்டியிருக்கும். 52 வயது ஓட்டுநர் மட்டும் தான் பெண்கள் இருக்கைகள் அருகே இருக்கும் முன் கதவை பயன் படுத்தும் ஒரே ஆண். 30 வயது நடத்துநர் கூட பின் கதவின் வழியே வந்து ஆண்பெண் பிரிவினை அருகில் அமர்ந்து கண்கொத்தி பாம்பாய் பார்த்துக்கொள்வார். முக்கியமாக கைபேசிகள் உபயோகித்தல் கொலை குற்றத்தை போன்றதாகும். பாடல்களாவது போடுங்கள் என்று ஐந்து வருடத்திற்கு மேல் விண்ணபங்கள் கொடுத்து ஒரு வழியாக முன்னே ஓட்டுநர் இருக்கை அருகே வானொலி, பேருந்தின் மத்தியிலும் பின்னேயும் ஒரு ஒலிபெருக்கி பொருத்தப்பட்டது. அந்த ஊரில் எடுக்கும் இரண்டு அலைவரிசைகளும் உலகம் 1990 களில் நின்றதை போல முழு நாளும் இளையராஜா பாடல்களை தான் ஒலித்து கொண்டிருக்கும்.
பெண்கள் பகுதியில் இடம் போதாததால் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் இவள் மட்டும் பேருந்தின் முன் கண்ணாடி அருகே இருந்த சிறிய பலகையில் முதுகை சாலை புறம் காட்டி அமர்ந்திருந்தாள். பேருந்தில் இருந்த அனைவரும் இவள் முகத்தை நேராக பார்ப்பதை போல அமர்ந்த காரணத்தால் தலையை உள்ளே பார்த்தவாறு திருப்பாமலே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவள் ராஜாவின் இந்த பாடலில் தன்னை அறியாமலே தொலைய தொடங்கிவிட்டாள். அந்தி மாலை சாரல் மழையும் ராஜாவின் இசையும் அவளை மிதக்க விட்டு கொண்டிருக்க, முதல் சரணம் பாடுகையில் தோள்களை மெட்டோடு அசைத்துகொண்டே ஓசை வராமல் வாயசைத்து பாடினாள்.
என்ற வரிகள் வந்த போது தான் தன்னை யாரோ கவனிப்பது போல தோன்ற தலையை திருப்பினாள். பெரும்பாலானோர் உறங்கி கொண்டிருக்க பேருந்தின் மத்தியில் இரண்டு கண்கள் தன்னையே பார்ப்பதை பார்த்தாள். மெல்லியதாய் அதிர்ந்தவள் நடந்துநர் பார்கிறாரா என்று தேடி அவரும் உறங்குவது தெரிந்த பின் மீண்டும் தன்னை தீண்டிய கண்களை தொடர்பு கொண்டாள்.
அந்த கண்களும் அதை கொண்டவனின் வதனமும் இசையின் இனிமைக்கு உருவம் கொடுத்ததை போல இருந்தது அவளுக்கு. அவள் கவனிப்பது தெரிந்ததும் அவன் மெல்லியதாய் புன்னகைக்க, இவள் அதை ரசிக்க தொடங்க, அவனுக்கு இவள் ரசிகை ஆனது தெரிந்தது போன்ற ஒரு முக பாவனையில் சிரித்தான். அந்த சிரிப்பு இவளுக்கு ஒரு வெட்கத்தை கொடுத்து தலை குனிய வைத்தது. வெள்ளை புறா ஒன்று பாடலின் இரண்டாவது சரணம் தொடுங்கும் முன் வந்த வயலின் புல்லாங்குழல் பியானோ மற்றும் ஜானகியின் ஆலாபனையும் இவர்களின் கண் பார்க்கும் படலதிற்காகவே அமைத்தது போலவே இருந்தது. கடைசி சரணம் தொடங்கியபோது அவன் புருவங்களை உயர்த்தி உறக்க பேசினான் கண்களாலேயே. "ஏன் பாடுவதை நிறுத்திவிட்டாய். தொடர்ந்து பாடு" என்றான். வெட்கதின் உட்ச கட்டத்தில் இருந்த அவளது முகம் அவன் கண்களை தவிர்க்கவும் முடியாமல் பார்க்கவும் முடியாமல் அங்கும் இங்கும் பார்த்தவாறு சிரித்துகொண்டே அமர்ந்திருந்தாள்.
அந்நேரம் நடத்துநர் விழித்துகொள்ள இவள் பயந்து தலையை மறுபடி ஜன்னல் வெளியே பார்த்தவாறு திருப்பி கொண்டாள். அவன் பார்கிறானா என்று அறிய லேசாக தலை திருப்பிய போது இவளது பதட்டத்தை கூட ரசித்த படியே அமர்ந்திருந்தான் அவன்.
என்ற வரி பாடியது. அவன் புருவங்களை உயர்த்தி தலையை மெல்லியதாய் ஆட்டி, "கேட்டுக்கோ .." என்பதை போல அவளிடம் வரிகளை சுட்டி காட்டினான். அந்த புரிதலில் அவன் கண்களின் சிறையில் விழுந்தவள் இவள்.
இன்று பத்து ஆண்டுகளுக்கு பிறகு அந்த நிகழ்வுகள் நடந்த இடத்திலிருந்து பல ஆயிரம் மையில் தூரத்தில் ஒரு மங்கும் மாலை சிந்தும் சாரல் மழையில் நனைவதை கூட மறந்துவிட்டு தனது Earphones இல் வந்த இந்த பாடலை கேட்டுக்கொண்டிருந்தாள்.
கடந்த நான்கு வருடங்களாக தன் மனதை வருடாத வலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து மூச்சிரைக்க வைப்பதை போல உணர்ந்தாள். அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல்
தனது கைபேசியில் ' அவன் ' என்ற பெயரில் சேமிக்க பட்ட கைபேசி எண்ணின் உரையாடல் பக்கத்தைப் பார்த்தாள். இறுதியாக 2017 இல் பேசிய குறுஞ்செய்தி " ஏன் இப்படி அழுது அழுது என்ன சாவடிக்கிற. நீ இருகிறதுக்கு இல்லாமலே இருக்கலாம். நீ இல்ல ன்ற நிம்மதி ல இருப்பேன் நான்." என்ற அவனுடைய வார்த்தைகளுக்கு இவளது இறுதி பதில் "இனி நான் இல்லை. நீ நிம்மதியா இரு" என்று. அதன் பிறகு குறுஞ்செய்திகள், அழைப்புகள் எதுவுமே இல்லை.
இப்போது என்ன பேசலாம். பேசலாமா வேண்டாமா என்று தயங்கியவாறே அவள் கைகள் மழை குளிரில் நடுங்கிக் கொண்டிருக்க. அவன் பெயரின் கீழே online என்று எழுத்துக்கள் வந்தது. அவனும் கைபேசியை துழாவி கொண்டு இருக்கிறான் என்று அறிந்ததும் பதரிவிட்டாள். இந்தியாவில் இரவு நேரம் ஆகிவிட்டதே நாளை பேசலாமா என்று யோசித்த போது ஏதோ ஒரு தைரியம். கைபேசி அழைப்பு என்ற சின்னத்தை அழுத்தினாள்.
அந்த பக்கம் அவன் கையில் இருந்த கைபேசியில் தமிழ் எழுத்துக்கள். பல வருடங்களுக்கு பின் 'வெள்ளை புறா' incoming voice call என்று. சிந்திக்காமல் அழைப்பை ஏற்றான்.
இருவரும் பேசவில்லை. திடீரென அவன் அருகே இருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டதும் அவள் பேசினாள். " பாப்பா தூங்குறாளா. Sorry. நான் அப்பறமா பேசுறென்" என்று.
அவன் உடனே "இல்லை. இரு. வீடியோ call ல வா " என்றான்.
இவளுக்கு பதட்டம் பத்து மடங்கு ஏறிவிட்டது. ஐந்தே நொடியில் அவன் காணொளி அழைப்பு விடுத்தான். அதை ஏற்றவுடன் தெரிந்தது மழலை முகம். அவனுடைய இரண்டு வயது பெண் குழந்தை. காணொளியில் இவள் முகம் பார்த்ததும் ஆவென வேடிக்கை பார்த்தது. அதனிடம் மலையாளத்தில் ஏதோ சொல்லி கொஞ்சினான். மழலையின் முகமா அவனது குரலா என்று தெரியவில்லை. ஏதோ ஒன்று சற்று முன் இவள் மனதில் இருந்த வலியை போக்க தொடங்கிவிட்டது. ஓரிரு நிமிடத்திற்கு பின் கைபேசியை கையில் நேராக பிடித்து அவள் முகத்தை பார்த்தான். ஏழு வருடங்கள் பிறகு அவன் கண்களை எதிர் கொள்கிறாள் இவள். இதயம் படபவென்று துடிப்பது மழை குளிரை தாண்டியும் தெரிந்தது.
"என் பொண்ணு. அமுதினி." என்றான். படபடப்பதை விட்டுவிட்டு இதயம் நின்றுவிட்டது போல உணர்ந்தாள் இவள். எந்த உணர்ச்சிகளையும் மறைக்க தெரியாத இவளது முகத்தில் இந்த தவிப்பை கண்டுகொள்ள அவன் அதிக சிரமம் கொள்ளவில்லை.
அவன் பின்னால் அமைதியாக வந்து நின்ற அவன் மனைவி கைபேசியில் இருந்த இவள் முகத்தை பார்த்தபடி வந்து அவன் கையில் இருந்த தங்கள் மகளை தூக்கினாள். கைபேசியிலிருந்து தலையை திருப்பி மனைவியிடம் பேசினான். "எண்ட College junior. வினோதினி." என்றான் இவளை காட்டி. சிறியதாய் இருந்த சிரிப்பும் வாடிவிட்டது மனைவியின் முகத்தில். தன் கையில் இருக்கும் பிள்ளையையும் கணவனையும் மாறி மாறி பார்த்தாள். அடுத்த நிமிடம் உள்ளே சென்றுவிட்டாள்.
இது எதுவுமே தெரியாமல் அவன் முகத்தை மட்டும் பார்த்தவாறு காணொளியில் இருந்த இவளுக்கு அவன் முகஜாடைகள் மூலம் புரிந்தது, இவளை பற்றிய அறிமுகம் அங்கே கொடுத்திருந்த தாக்கத்தை.
பெயருக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு good night என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
Earphone இல் வெள்ளை புறா பாடல் விட்ட இடத்திலிருந்து தொடங்கியது .
மற்றும் ஒரு நினைவு. இவளது மூன்றாம் ஆண்டின் இறுதி தேர்வின் போது, தேர்வு அறையை தேடி அலைந்து வியர்த்து விருவிருத்து உள்ளே சென்றாள். தாமதமாக வந்ததற்கு திட்டிகொண்டே தேர்வு வினா தாள் கொடுத்தார் ஒரு Professor. அதே தேர்வு அறையில் தூரத்தில் அமர்ந்திருந்த அவன் "பொறுமையா எழுது" என்று வழக்கம் போல கண்களால் இவளை களவு கொண்டான்.
தேர்வு முடிந்ததும் இவளது நண்பர்களுக்கும் அவனது நண்பர்களுக்கும் தெரியாமல் பேச நேரம் தேடினார்கள். ஒரு சிறிய இடைவேளையில் அவன் சட்டென அருகே வந்து " இதுக்கு தான் பெயர் A ல ஆரம்பிக்கிற மாதிரி வெச்சுகணும். Exam hall தெடுறது easy." என்றான் சிரித்துகொண்டே. இவள் புன்சிரிப்புடன் பதில் கூறுவதற்குள் அவனை அவன் நண்பர்கள் அழைத்ததும் சென்றுவிட்டான். இரண்டு மணி நேரம் கழித்து, அவர்கள் ஊரின் பேருந்து நிலையத்தில் இறங்கி இவள் நடந்து கொண்டிருக்கும் போது மறுபடி திடீரென அவன் குரல். "என்ன பெயர் யோசிச்சிருக்க" என்றான். அவனை திரும்பி கூட பார்க்காமல் முன்னே பார்த்து நடந்தாலும் முகம் பூத்த புன்சிரிப்புடன் கேட்டாள் "யாருக்கு" என்று. உடனே அவள் கைகளை பிடித்து நிறுத்தி "நம்ம பசங்களுக்கு" என்றான் பார்வையை அவளை விட்டு அகற்றாமல். ஒரு வருடமாக ரகசிய நட்பாகவே இருந்தவர்கள், அன்று பேருந்து நிலையத்தில் அவள் கையை அவன் பிடித்ததும் வந்த வெட்கத்துடன் அந்த கேள்வியினால்
வந்த அடக்க முடியாத பேரண்புடன் "அமுதா" என்றாள்.
"பையனுக்கு??"
"அனந்தன்" என்றாள்.
அன்றும் இன்றை போலவே மழை சாரல். இருவரும் முதல் முறை கரம் கோர்த்து நடந்தார்கள்.
இன்று ஒன்பது வருடம் கழித்து அவன் கையில் அமுதமாக ஒரு பெண் குழந்தை. மனைவி மகள் என்று அவன் சந்தோஷமாக வாழ்கிறான் என்று நண்பர்கள் மூலம் கேள்வி பட்டு பெற்ற சந்தோஷம் எல்லாம் இந்த காணொளி அழைப்பால் கவலையாக மாறிவிட்டது.
தமிழே தெரியாத அவனது மலையாள மனைவியிடம் அமுதினி என்ற தமிழ் பெயரை என்ன சொல்லி ஒப்பு கொள்ள வைத்திருப்பான். வினோதினி என்ற தன்னுடைய பெயரை இன்று கேட்டதும் அவன் மனைவி, அந்த பேரழகி, என்ன நினைத்திருப்பாளோ. என்றெல்லாம் எண்ணி வருந்தினாள்.
அந்நேரம் அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி
"கல்யாணம் பண்ணி தான் பாரேன். வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும். எனக்கும் உன்னோட குட்டி அனந்தன பார்க்கணும் ன்னு ஆசை இருக்காதா." என்று.
மழை துளிகளையும் தோற்கடித்து கொட்டியது அவளது கண்ணீர் துளிகள் . "ஒருவேளை எனக்கு கல்யாணமே ஆனாலும் என் மகனுக்கு அனந்தன் ன்னு பெயர் வெக்கிற நிலை வந்துட கூடாது" என்று வேண்டிகொண்டாள் இறைவனிடம்.
மாலை மழையும் மெல்லிசையும் கிளறிவிட்ட ஒரு நினைவின் தூண்டுதலால், புன்சிரிப்புடன் நெஞ்சை குத்தி கிழிக்கும், காலத்துக்கும் அழியாத மற்றுமொரு நினைவு வந்து சேர்ந்து விட்டது அந்த வெள்ளை புறாவின் மனதில்.
நினைவுகள் என்றுமே முடியாத தொடர்கதைகள் தான்…
Comments
Post a Comment