போய் சேர்க்க முடியாத கடிதங்கள்!
1999 ஆம் ஆண்டு முதல் 2016 வரை பல தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் காதலின் தாக்கமும் கவிதைகள் மீது நாட்டமும் வர காரணமாக இருந்து, கண் பேசும் வார்த்தைகள் பலவற்ற ரசிக்க வைத்த கவிஞர் அவர்களுக்கு,
என் பருவ வயது மனதில், முதன் முதலில் தோன்றிய பட்டாம்பூச்சிகளுக்கு உங்கள் வரிகள் மூலம் விடை கண்டு கொண்ட கடைக்கோடி ரசிகை எழுதுவது. 2011 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வார தொடராக வந்து, பின் புத்தகமாக வெளியிடப்பட்ட உங்களின் “அணிலாடும் முன்றில்” எனும் அற்புதமான படைப்பை நான்கு நாட்கள் முன்பு படித்து முடித்தேன். நீங்கள் இந்த புத்தகத்தை எழுதும் போது எதை நினைத்து எழுதுனீர்களோ, உங்களுடைய மறைவுக்கு பின்னர் படிக்கும் போது நீங்கள் எதிர்பார்த்த உணர்வுகளை மிஞ்சி கொண்டு வந்து நிற்கிறது உங்களுக்காக சில கண்ணீர் துளிகள். என்னளவில் பல கண்ணீர் துளிகள். நான்கு நாட்களாக உங்கள் பாடல்கள், நீங்கள் அளித்த பேட்டிகள், உங்களை பற்றி பேசிய பேட்டிகள் ஆகிவற்றை தேடித் தேடி பார்த்துக் கொண்டு நீங்கள் இல்லாமல் போய் ஐந்து வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்ற உண்மையை ஏற்க முடியாத மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நான்கு நாட்களாக உங்களுக்கு இரங்கல் கூட்டம் ஒன்றை, நானும், உங்கள் வரிகளுடன் எனக்குள் வரும் உணர்வுகளும் சேர்ந்து நடித்திக் கொண்டிருக்கிறோம். இன்னமும் மனம் தெளியவில்லை என்பதனால் உங்களிடம் பேசிவிடலாம் என்று வந்துவிட்டேன். இந்த கடிதத்தின் மூலம். உங்களிடம் கொண்டு போய் சேர்க்கவே முடியாத கடிதத்தின் மூலம்.
உங்களையும் உங்கள் தந்தையை போலவும் புத்தகங்களில் தொலைந்து போகும் நபர் நான் இல்லை. இருபத்தி ஒன்பது வருட வாழ்க்கையில் பாடப்புத்தகங்களை தவிர மொத்தமாகவே நூறு புத்தகங்கள் தான் படித்திருப்பேன். படித்த பல கதைகளில் என்னையே தொலைத்திருக்கிறேன். சில நாட்கள் அந்த கதைக்களத்திலேயே சுற்றி திரிவேன். பெரும்பாலும் காலம் சென்ற ஆசிரியர்களின் படைப்புகள் தான் அவை. அடடே அவர் உயிருடன் இருந்தபோது நாம் பிறந்திருந்தால் படித்துவிட்டு அவரிடம் இதை பற்றியெல்லாம் பேசியிருக்கலாமே என்று சிந்திப்பேன். அத்தனை பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் என் வாக்கியத்தை கேட்க முனைத்திருப்பார்கள் என்ற கற்பனையில். சமீபத்தில் நான் படித்த ஒரு புது ஆசிரியரின் புத்தகமும் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த ஆசிரியரின் முகநூல் பக்கத்தை கண்டறிந்து என் மன அமைதிக்காக பெரிய வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பினேன். உடனே பதில் வந்ததும் ஆச்சரியப்பட்டேன். உங்கள் புத்தகம் தந்த விலை மதிக்க முடியாத அனுபவத்தால் உங்களிடம் பேச வந்துள்ளேன். நீங்கள் இருக்கும் போது இந்த புத்தகத்தை படித்து இதே போல் ஒரு கடிதம் எழுதியிருந்தாலும் அது உங்களிடம் வந்து சேர்ந்திருக்குமா, நீங்கள் படித்திருப்பீர்களா என்று தெரியாது எனக்கு.
புத்தகத்தை படிக்கும் முன்பே அதை பற்றிய பலரின் கருத்துக்களை மேலோட்டமாக பார்த்தேன். அனைவரும் கூறியிருந்த பொதுவான கருத்து இது உறவுகளை பற்றிய புத்தகம். ஒவ்வொரு உறவின் ஆழத்தையும் இன்பத்தையும் கவிஞர் செதுக்கியிருக்கிறார் என்று எழுதி இருந்தார்கள். நானும் அதை எதிர்பார்த்து தான் தொடங்கினேன். ஆனால் முதல் கட்டுரையில் உங்களுடைய அம்மாவை பற்றி எழுதியதை படித்துவிட்டு, பிரசித்தி பெற்ற பாடலில் மனமுடைந்த காதலன் காதலியிடம் பாடுவதை போன்ற உங்கள் வரிகளில்
“தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்”
“தாயாக நீதான் தலை கோத வந்தால் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்”
என்று நீங்க எழுதியது நினைவில் வந்தது. அம்மா என்ற உறவு நீங்கள் நீங்களாக வளர்ந்து நிற்க என்ன செய்தது என்று புரிந்துகொண்டேன்.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே”
என்ற பாடலை பலரும் பல இடங்களில், உங்களுக்கு உங்களுடைய தந்தையின் பிரிவு தந்த வலியில் வந்த வார்த்தைகள் தான் என்பதை சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்பாவை பற்றி நீங்கள் எழுதிய பக்கங்களில் அந்த மனிதர் அந்த திரைப்பட பாடல் மட்டுமல்ல உங்களை வளர்த்து ஆளாக்கியதற்கு பல காவியங்களுக்கு தகுதி பெற்றுவிட்டார் என்று தோன்றியது.
தாய் மாமன்கள், அத்தைகள், பாட்டிகள், தாதாக்கள், மாமன் மகன்கள், அத்தை மாமாக்கள் என உங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்து அனைவரையும் சந்தித்து உங்கள் மூலமாகவே அவர்களை அறிமுகம் பெற்று தெரிந்துகொண்டதை போல உணர்ந்தேன் நான். உங்கள் வாழ்வில் நேரடியாக இல்லை என்றாலும் பக்கத்துவீட்டு அக்கா, மாமன் மகள்கள், மைத்துனன் என்று பொதுவாக நீங்க எழுதிய வாகை படிக்க படிக்க இல்லாத உறவுகள் கூட இவர் வார்த்தைகள் மூலம் இன்பத்தை தருகிறதே என்று வியந்தேன்.
புத்தகத்தை படித்த மற்றவர்கள் கூறியதை போல உறவுகளின் மகிமையை தெரிந்துகொள்ள வந்தவள் நான். ஆனால், முத்தான பல ஆயிரம் வரிகளுடன் வலம் வந்த ஒரு கவிதை களஞ்சியம், அவர் வாழ்க்கையை பற்றி என்னிடம் தனிமையில் அமர்ந்து பல நெகிழ்வான சம்பவங்களும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதை போல உணர்ந்தேன். ஒரு தோழி என்னிடம் அரைமணி நேரம் மனம்விட்டு பேசினாலே நான் சில மணி நேரங்கள் அதை பற்றி சிந்தித்து அடுத்த இரண்டே நாளில் அவளிடம் மறுபடி தொடர்பு கொண்டு பேசுவேன். அப்படியிருக்க, என் மனதில் கவிதை கனவுகளை வாரி இறைத்து விட்டு சென்ற ஒரு உன்னதமான மனிதன், இதுவரை அவரது பொது வாழ்க்கையை தவிர அவரை பற்றி எதுவுமே தெரியாத என்னிடம், இது தான் என் வாழ்க்கை என்று கடிதங்கள் மூலம் பேசியதை எப்படி என்னால் எளிதில் கடந்து போக இயலும். நம்முடைய மனதில் மதிப்பிற்குரிய இடம் பெற்ற பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் எழுதிய சுயசரிதையை படித்தால் இப்படி தோன்றுவது சாதாரணம் தானோ என்னமோ. நான் படித்த சில சுயசரிதைகள் என்னுள் இத்தனை தாக்கத்தை தந்து இல்லை.
பங்காளிகள் பற்றிய பகுதியில் ஒரு தொலைபேசி உரையாடலை பற்றி கூறியிருந்தீர்கள். உங்கள் பங்காளி பேசிய போது நீங்கள் நினைத்தவற்றை எழுதி இருந்தீர்கள். “அந்த உரையாடல் முடித்த பிறகு மறுபடி அறைக்குள் சென்றேன். யுவன் ஷங்கர் ராஜா tune ready என்றார். நான் மெட்டை கேட்டேன். இந்த வரிகளை எழுதினேன்” என்று எழுதி இருந்தீர்கள்.
“கடவுளே. காலத்தை பின் நோக்கி தள்ளும் ஒரு இயந்திரமும், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில், சுற்றியுள்ள யாருக்கும் தெரிந்திடாத வண்ணம் மறைவாக நின்றுகொண்டு, அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்களை படிக்கும் சக்தியையும் எனக்கு குடு.” என்று அடிக்கடி நான் வேண்டிக்கொள்வேன். உங்களின் அந்த வரிகளை படித்ததும் என்னுடைய இந்த வேண்டுகோள் நிறைவேறாதா என்று கடவுளிடம் கெஞ்சினேன். கீழ்கண்ட வரிகளை நீங்கள் எழுதிய போது எங்கே இருந்தீர்கள், என்ன நினைத்தீர்கள், ஏன் இந்த வரிகள் இப்படி வந்து உங்கள் பேனாவில் விழுந்தது என்றெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கடவுள் எனக்கு வரமளித்தால் நிச்சம் உங்கள் பேனா மை காகிதத்தில் சிந்தும் நொடிகளில் நான் அங்கே இருப்பேன்.
வெறும் காதல் வரிகளை மட்டும் காட்டி கேட்கிறேனே என்று நினைக்க வேண்டாம். என்னை கவர்ந்தது மட்டுமில்லாமல் உணரவைக்கவும் செய்த வரிகளில் ஒரு பங்கு இவை. “தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ” என்ற பாடலில் தொடங்கி வருடாவருடம் எழுதிய ஜாலி பாடல்களில் உங்கள் வேடிக்கையான வரிகளையும் துடிப்பான சிந்தனையையும் ரகசியமாக ரசித்தவளும் என்னுள் இருக்கிறாள். இப்போது ஏனோ ஜாலி என்ற பக்கம் மூளை திரும்ப மறுக்கிறது.
“நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்”
"உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்"
“நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே”
“காதல் இல்லை
இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை”
“உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்”
“உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம் செல்ல பெயர் வைத்தால் காதல்
உன்னை போல யாரும் என்னை தாண்டி போனால்,
உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்”
“என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட உள்ள இருந்த என் உசுர வெளிய மிதக்க விட்ட
பறவையின் சிறகுகள் விரிந்தால் தான் வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்”
“நிஜமுள்ள பொய் இது
நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தின் வால் இது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அகிம்சையில் கொல்லுவது”
“மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன்”
“உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததின்
அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்”
“ காதலே ஒரு வகை ஞாபக மறதி, கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வெளவாலைப் போல் உலகம் மாறி தலைகீழாக தொங்கிடுமே”
“கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே
தினசரி புது புது அனுபவம் எதிரிலே
உலகமே உன்னால் இன்று புதியதாய் உணர்கிறேன்
என் வானத்தில் சில மாற்றங்கள்
வெண்மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்”
“ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் பழுதான தேரடி”
“சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை
சொல்லப்போகும் வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே
ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுப்போலத் தானே
ஒன்னத்தேடி நாளும் பறக்குமே”
“கடவுளை பார்த்ததில்லை. இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே”
“ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா ..
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட…. ”
“என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே”
“உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி ”
“ ஆச வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா”
யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் இசையும், ராம், செல்வராகவன் போன்றோரின் கதையும் இயக்கமும், எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்றைக்கு அவர்கள் legends என்ற உயரத்தில் ஏறியதற்கு உங்கள் கவிதைகள் எத்தனை படிகளை கட்டி கொடுத்திருக்கிறது. அதே போல் அவர்கள் என்ன பாவம் செய்தார்களோ உங்கள் வரிகள் என்ற வரத்தை ஆண்டவன் பாதியிலே பிடிங்கிவிட்டான்.
இன்னோரு பிறவி இருந்தால் இது வேண்டும் என்று பொதுவாக கேட்பது வழக்கம். அதை விடுத்து நான் இப்படி கேட்க நினைக்கிறன். இதே பிறவி மீண்டும் வேண்டும், இதே 2000 -2014 வேண்டும். அதே இளமை பருவம் வேண்டும். அதே மாயாஜால இசைக்கு உங்கள் மந்திர வரிகள் வேண்டும். அதை கண்முன்னே கொண்டுவர அதே இயக்குனர்களும் நடிகர்களும் வேண்டும். இவற்றை ரசித்ததோடு நில்லாமல் நான் அதே கண்ணம்மாவாக அதே வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ஆத்மார்த்தமாக உள்வாங்கி அனுபவித்து வாழ வேண்டும். ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் அனுமதிக்க விழைகிறேன். இளமை பருவத்தில் தொடங்கிய உங்கள் வரிகளின் மீதுள்ள மோகம், தீனி பெற்று கொண்டே இருக்க வேண்டும். இன்னொரு நூறு ஆண்டுகளுக்காவது உங்கள் வரிகள் வந்துகொண்டே இருக்க, அதை நாங்கள் ரசித்துக்கொண்டே காலத்தை கழிக்க வேண்டும். ஆகஸ்ட் 14 2016 என்ற நாள் நடக்காமலே இருக்க, நீங்களும் உங்கள் பேனாவும் பல கோடி தமிழ் ரசிகர்களுக்கு வரமாக வாழ்ந்துகொண்டு இருக்க வேண்டும்.
பெறுநர் என்ற மனிதரை கண்டு கொள்ளவே முடியாத, கொண்டு போய் சேர்க்கவே முடியாத மடல்கள் எல்லாம் இப்படி நடக்கவே முடியாத வரிகளை தான் பெற்றிருக்கும் போல. என்னுடைய அநியாய ஆசைகளையும் கற்பனைகளையும் கைவிட்டுவிட்டு நிஜ உலகில் இருக்கும் உங்களின் உயிர்களுக்காக சில வரிகள் கூற விரும்புகிறேன்.
எங்கள் கண்களில் காதலின் கனவுகளை நிரப்பிய மனிதரின் ஜீவனை வாழ்விக்க வந்த ஜீவ லட்சுமியே… அத்தனை காதல் வரிகளுக்கும் கருப்பொருளானவளே… நீ அவரை விட சிறந்த கவிஞர் என்று அவரே கூறியதால் மட்டும் நான் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதை அவர் கூறிய காரணத்தை படித்த போது நானும், நீங்கள் அவரையே மிஞ்சிவிடீர்கள் என்று தான் எண்ணினேன். எழுநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி அதற்கு பல விருதுகளை பெற்ற மனிதர், தான் எழுதிய சிறந்த கவிதை உனக்காக எழுதியது தான் என்று எழுதியிருந்ததை படித்த நொடி, என் மனதில் ஒன்று தோன்றியது. இப்பேற்பட்ட காதல் மீது பொறாமை கொண்ட இறைவன் செய்த சதி தான் அவர் உங்களை விட்டு பிரிந்தது. அவரை ஒரு கவிஞராக, கலைஞராக, நண்பனாக, வழிகாட்டியாக, தமிழ் சினிமாவின் நம்பிக்கையாக பார்த்த எங்களுக்கே பிரிவின் வலி இப்படி துரத்துகிறது என்றால், நீங்கள் எந்த நிலையில் இப்போது இருக்கிறீர்கள் என்பதை நினைக்கவும் தயங்குகிறேன். அவர் எழுத்தினால் காதல் உணர்ச்சிகள் கரைபுரண்டு ஓடும் ஒவ்வொரு தருவாயிலும் அனைத்து மனங்களும் நன்றி கடன் பட்டிருப்பது உங்களுக்கு தான்.
அந்த புத்தகத்தின் இறுதி பகுதியாக, கவிஞர் உலகின் மூன்றாவது அறிவாளியாக உதித்த ஆதவனே… உண்மையில் தெய்வங்கள் தோற்று போகும் அன்பை தான் உன் தந்தை காட்டியிருக்கிறார். அவரது ஆசையை போலவே புத்தகங்களில் தொலைந்து போ, இசையெனும் கடலில் மூழ்கி போ. உன் வாழ்க்கையில் நீ காண போகும் வெற்றிகள் ஒவ்வொன்றும், உன் தந்தைக்கு நாங்கள் பட்ட நன்றிக்கடனின் நினைவு தான். அதை மனமலர்ந்த மகிழ்ச்சியுடன் காண காத்திருக்கிறோம்.
மகள்களை பெற்ற அப்பாக்கள் அனைவரையும் நெகிழவைத்த ஒரு தந்தை, மேடைகளில் “எனக்கு பெண் குழந்தை இல்லை, ஆனாலும் இவற்றை ஆசையுடன் எழுதினேன்” என்று கூறிக்கொண்டிருக்கையில், அவருக்கு யோகமாக வந்த யோக லட்சுமியே… என்னை பொறுத்தவரையில் நீ அவர் வாழ்க்கையை முழுமையாக்கிய வரம் தான். பெண் குழந்தை இல்லாதபோதே அத்தனை அழகான வரிகளை எழுதியவர், நீ தவழ்ந்து, எழுந்து, நடந்து, பூத்து, மணமுடித்து, தாய்மை அடைவதை எல்லாம் அவர் நின்று பார்த்திருந்தால் எத்தனை அற்புதமான வரிகளை எழுதியிருப்பார். விதி வலியது. தந்தை முகம் கூட நினைவில் இல்லாத வயதில் உன்னை விட்டுவிட்டு அவர் சென்றாலும், உலகத்தில் உள்ள அப்பாக்கள் அனைவரும் தங்கள் மகள்களுக்கு கொடுக்கும், காமத்தில் சேராத, அந்த முத்தங்கள் அனைத்திலும் உன் தந்தை உனக்காக தந்திருக்க கூடிய முத்தங்கள் கலந்திருக்கும்.
ஆங்கில வழி கல்வியில் தமிழை தொலைத்த என்னை போன்ற பலருக்கு கவர்ச்சியான வரிகள் மூலம் தமிழ் அள்ளி தெளித்த வள்ளலே. என்னுடைய எழுத்து ஏதாவது ஒரு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதில் நிச்சயம் உன் பங்கு உண்டு. ஆரம்ப காலங்களில் நான் எழுதிய ஒரு நான்கு வரி கவிதையை படித்துவிட்டு என் தந்தை இது நீங்கள் எழுதிய பாடல் வரியா என்று கேட்டார். உங்கள் பேனா மையின் சாயல் என்னை போன்ற பலரின் எழுத்துக்களில் எப்போதும் இருக்கும். எங்கள் மனதில் நீங்கள் மீட்டிய ஆனந்த யாழின் இசை நின்று போனாலும் அதன் சுவடுகளும், மீட்டிய போது அது தந்த சுகங்களும் என்றும் மறையாது.
பூவுலகிலிருந்து உன் பிறவி முடிந்தாலும், தமிழ் உள்ளவரை உன் வரிகள் வாழும். மெட்டுக்கு பாட்டெழுதும் தமிழ் கவிஞர்கள் இருக்கும் வரை, உன்னால் வந்த, கவிதை மீது கொண்ட நாட்டம் வாழும். பருவ வயது பட்டாம்பூச்சி முதல் தள்ளாத வயது தாங்கி பிடித்து ஆறுதல் கூறும் அன்பு வரை, அந்த நெஞ்சங்களில் தமிழ் திரையிசை பாடல் வரிகள் ஏற்படுத்தும் தாக்கத்தில் உன் பேனா மையின் சாகசங்கள் வாழும். பாடல் இசையில் தொலைந்து வரிகளில் முக்தி பெரும் என்னை போன்ற கடைக்கோடி ரசிகர்கள் உள்ளவரை நீ வாழ்ந்து கொண்டே இருப்பாய்.
Comments
Post a Comment