தி கருவேப்பிலை தியரி ஆப் நேஷனல் எகானமி!

 நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில்  நான் என்னுடைய மிதிவண்டியில் ஏறி, சன்பிளவர் ஆயிலை (சூரியகாந்தி பூ எண்ணெய் ) தேடி புனித பயணம் ஒன்றை மேற்கொண்டேன். அதனால் எனக்குள் ஏற்பட்ட தெளிவுரைகள் வாசகர்களின் கனிவான கவனத்திற்கு…

ஜெர்மனி நாட்டில் சூரியகாந்தி பூ எண்ணெய் பெரும்பாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து தான் இறக்குமதி செய்ய படுகின்றனவாம். அந்நாடுகளின் தற்போதைய நிலையினால் ஐரோப்பாவின் பல நாடுகளில் பல பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டுள்ளது. அதில் குறிப்பாக சூரியகாந்தி பூ எண்ணெய்க்கு ஏற்பட்டிருக்கும் மவுசு, சில மாதங்கள் முன்பு இந்தியாவில் வெங்காயம் என்று காகிதத்தில் எழுதி பிரியாணியில் போட்டு சமைத்த மவுசை போன்றதாகும். 2016 ஆம் ஆண்டு நான் முதன்முதலில் ஜெர்மனி வந்தபோது பல சரக்கு அங்காடிகளில் சூரியகாந்தி பூ எண்ணெய்  மற்றும் ரேப்சீடு எண்ணெயின் விலைகளை பார்த்து ஆச்சரிய பட்டேன். ஒரு லிட்டர் 0.75 சென்ட்ஸ். இந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வின் காரணமாக அவை 1 யூரோ வை தாண்டி விட்டன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னுடைய அகக்கண்களை பல்வேறு விதமாக திறந்துவிட்டது. 

“2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடுகள் வாரக்கணக்காக போர் செய்துகொண்டு இருக்கும் போது, உனக்கு என்ன எண்ணெய் பற்றி கவலை” என்று வாசகர்கள் எண்ணலாம். அந்த போர் தொடங்கிய தினம், அந்நாட்டு மக்களின் நிலையை எண்ணி வருந்த தான் செய்தேன். என் மனதில் வந்த அடுத்த கவலை, ஜெர்மனியும் போரில் சேர்ந்துகொண்டால் நான் எப்படி இந்தியா செல்வது என்று தான். இப்படி ஒரு இரக்கமில்லாத ஒருவளா நான் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. பதில்… நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். என்ன செய்வது. பல ஆண்டுகளாக நான் பிறந்த மண்ணில் 500 கிலோமீட்டர் தொலைவில் கடலை தாண்டி என் இனமே சாரி சாரியாக கொல்ல பட்டுக்கொண்டிருக்கும் போது, என் ஊரில் தலைவர் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து fdfs கொண்டாடும் மக்கள் கூட்டத்தை சேர்ந்தவள் ஆயிற்றே நான். அன்று தொடங்கிய அந்த போரும் சரி, சென்ற மாதத்தில் தொடங்கிய இந்த போரும் சரி, முதல் சில நாட்கள் தான் பதட்டம், கவலை, கருணை எல்லாம். நாட்கள் செல்ல செல்ல அது வெறும் செய்தி தான். நாமே பாதிக்க பட்டாலொழிய நான்கு நாட்களுக்கு மேல் எந்த தொடர் செய்தியும் வலிப்பதில்லை. சுருக்கமாக, நமக்கு வந்தால் மட்டும் தான் ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி.

சூரியகாந்தி பூ எண்ணெய் பஞ்சாயத்திற்கு வருவோம். மூன்று வாரங்கள் முன்பு இந்த எண்ணெயின்  திடீர் விலை உயர்வு எனக்கு புரியவில்லை. அந்த கடையில் ஸ்டாக் தீர்ந்துவிட்டது என்று நினைத்து கண்டுகொள்ளாமல் வந்துவிட்டேன். அதே வாரம் என்னுடைய தோழி வீட்டிற்கு சென்றபோது தான் எண்ணெய் பற்றாக்குறை பற்றி அறிந்தேன். அவளும் அவள் கணவரும் மேற்கொண்ட சூரியகாந்தி பூ எண்ணெய்  தேடுதல் வேட்டையை பற்றி அறிந்தேன். அந்த ஊரில் வாழும் இந்தியர்கள் எல்லாம் இருக்கும் whatsapp group ஒன்றில் எந்த கடையிலாவது சூரியகாந்தி பூ எண்ணெய் அடுக்கி வைத்திருப்பது தெரிந்தால் உடனே புகைப்படம் எடுத்து போடுகிறார்கள். மக்கள் அந்த கடைக்கு விரைந்து சென்று வாங்கி வருகிறார்கள். இது என்னடா புது பிரச்சனை என்று நினைத்துக்கொண்டே நான்கு நாட்கள் கழித்து நான் வசிக்கும்  ஊரில் இருக்கும் அங்காடிகள் மூன்றை சுற்றி பார்த்தேன். இரண்டே வாரங்களில் சூரியகாந்தி பூ எண்ணெய் 1.28 யூரோவிலிருந்து 4.99 யூரோ ஆகிவிட்டது. அடடே ஆச்சரிய குறி!!!!

என் ஒருத்திக்கு மட்டும் சமைப்பதால் பொதுவாக எண்ணெய் சட்டியில் பொரிக்கும் எந்த பண்டமும் செய்வதில்லை நான். வடை வடகம் ஆகியவற்றை கூட யாரவது நண்பர்கள் வந்தால் தான் செய்ய முற்படுவேன். காரணம், அந்த சுட்டெண்ணெய்  சுமார் இரண்டு மாத காலம் நான் உபயோகிக்கும் எண்ணெய் அளவு. ஒரு வாரம் ஆனாலே அம்மா காணொளி அழைப்பில் சுட்டெண்ணெயை பார்த்து கூறுவாள் “அன்னைக்கு போட்ட வடை எண்ணெய் யா இது? இந்நேரம் கெட்டுப் போயிருக்கும். அத சமைக்காத.” என்று. அதை வீண் செய்யவும் மனமில்லாமல் சமைக்கவும் மனமில்லாமல் தவிப்பேன். அதனால் எண்ணெயில் பொரிக்கும் வழக்கம் அறவே நின்றுவிட்டது. (கடைசியாக நான் பூரி சாப்பிட்டது உளுந்தூர்ப்பேட்டையில்  veg restaurant ஒன்றில். மார்ச் 20 2021!!! வடை சமோசா வடகம் ஆகியவற்றை நினைக்கவும் வருந்துகிறேன்.) எண்ணெயில் பொரித்தெடுத்த  பொருள் ஆரோக்கியமில்லை என்று ஆறுதல் கூறிக்கொண்டு காலத்தை ஓட்டுகிறேன்.

நேற்று தேடி பிடித்து ஒரு அங்காடியிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெய் 3.99 யூரோவிற்கு வாங்கி வந்து சேமித்துக்கொண்டேன். ஏற்கனவே அரை லிட்டர் இருக்கிறது. சூரியகாந்தி பூ எண்ணெயின் இந்த திடீர் மவுசால் கை நமநமவென்கிறது. இந்த வாரம் வடை போடுவோமா, வடகம் வருப்போமா, இல்லை பூரி விரதத்தை முடித்துக்கொள்வோமா என்ற ஆழ்ந்த சிந்தனையில் நான் இருந்த போது தான் உதயமானது இந்த “தி கருவேப்பிலை தியரி ஆப் நேஷனல் எகானமி!”

மெட்ராஸில் எங்கள் அபார்ட்மெண்ட் கீழே, கட்டிடத்தை சுற்றி உள்ள இடத்தில் என் அம்மா, வெற்றிலை கொடி மற்றும் செம்பருத்தி செடி வளர்கிறாள். நட்டு வைத்தது அவள். தண்ணீர் ஊற்றி பேணி காப்பது watchman. ஆனாலும் அம்மா வளர்க்கும் செடி. (மாற்றிச் சொன்னால் அப்பாவுக்கு சட்னியில் உப்பு கூடிவிடும்!) இந்த செடிகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது நேற்று நான் சொன்னேன். “இந்த முறை விடுமுறையில் நான் வந்து தக்காளி, கத்திரிக்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய செடிகளை நட்டு வைக்கிறேன். சமையலுக்கு உதவும்” என்றேன். உடனே அம்மா “நம்ம வீட்டு கருவேப்பிலை செடியே இப்போ நல்லா மரம் மாதிரி இருக்கு” என்றாள்.  “அப்போ சமையலுக்கு நம்ம வீட்டு கருவேப்பிலை தானா.. சூப்பர்” என்று நான் கூறியதற்கு. “இல்ல. காய்கறி கடையில எனக்கு free யா கருவேப்பிலை கொத்தமல்லி கொடுக்கிறான். அத தான் சமைப்பேன்.” என்றாள் அம்மா. உடனே நான் “அதான் வீட்ல இருக்கே, அவன் குடுத்தா ஏன் வாங்குற?” என்றேன். உடனே அம்மாவின் மெலிதான ஆவேசம் “ காய்கறி எல்லாம் என்ன விலை விக்குது. 200 ரூபாய்க்கு வாங்கினேன். கருவேப்பிலை கொத்தமல்லி கூட free யா தராம எப்படி” என்று.

விட்டுக்கொடுக்காமல் அம்மாவிடம் ஐந்து நிமிடம் வாதாடினேன். வீட்டிலே காய்க்கும் கருவேப்பிலையை விட்டுவிட்டு, இலவசமாக தருகிறான் என்று வாங்கிவந்து உபயோகிப்பது சரியில்லை என்று என் தரப்பு வாதம். இன்றும் இலவச கருவேப்பிலை தான் சாம்பாரை அடைந்திருக்கும். எங்கள் வீட்டு கருவேப்பிலை என்னுடைய blog பக்கத்தை வந்தடைந்திருக்கிறது.

இலவசமாக அம்மாவுக்கு தரப்பட்ட கருவேப்பிலை இல்லாமல் போனால் அவளுக்கு பறித்துக்கொள்ள ஒரு மரமே வீட்டில் இருக்கிறது. அந்த வாய்ப்பு இல்லாத ஒரு வீட்டிற்கு இலவசமாகவோ காசுக்கோ கருவேப்பிலை கிடைக்கவில்லை என்றால், தவறு என் அம்மாவுடையது தானே. நம் பசி தீர்ந்த பிறகு நாம் சாப்பிடும் ஒவ்வொரு இட்லி மற்றொருவருடையது என்ற பிரபல வாசகம் நினைவில் வந்தது. ஏறக்குறைய ஒரே கருப்பொருள் தான். 

எண்ணெயில் பொரித்தெடுக்கும் வழக்கமே இல்லாமல் இருக்கும் நான், ஏற்கனவே இருக்கும் அரை லிட்டர் எண்ணெய்க்கு மேலே விலைவாசி உயர்வையும் பொருட்படுத்தாமல் இன்னொரு லிட்டர் வாங்கி வைத்ததோடு நில்லாமல், எண்ணெய் சட்டி வைத்து பொரிக்கும் பண்டங்களை இந்த வாரம் வரிசையாக செய்ய போகிறேன். அதே அங்காடியில் என் எதிரே நின்று bill போட்ட பெண்மணி நான்கு லிட்டர் எண்ணெய் வாங்கிக்கொண்டு சென்றாள். நாற்பது வயதிருக்கும் அந்த பெண், நான் இருபது வயதில் இருந்ததை விட அதிக துடிப்பாக இளமையாக, முக்கியமாக, கொடியிடையுடன் இருந்தாள். இப்படி உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் எத்தனை நாட்கள் எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடுவார்கள். எதற்கு நான்கு லிட்டர் எண்ணெய் தேவை. தெரியவில்லை.

கொரோனா தாக்க தொடங்கிய சமயம், முதல் முறை lockdown அறிவிப்பு வந்தபோது, ஜெர்மனியின் அங்காடிகளில் toilet paper கள்  தங்கத்தை போல விற்கப்பட்டன. தட்டுப்பாட்டின் காரணமாக ஒரு வீட்டிற்கு ஒரு பை தான் என்று விற்றார்கள். இப்போது அதே போல் சூரியகாந்தி பூ எண்ணெய் மற்றும் மைதா மாவு விற்கப்படுகிறது. எதிர்காலத்தில் அரிசி பருப்பு என்று மாறிக்கொண்டே இருக்கும் போல இந்த தட்டுப்பாடு. ஏற்கனவே காய்கறிகள் பழங்கள் இங்கே அதீத விலைவாசி உயர்வை பார்க்கின்றன. கிவி என்ற பழம் நியூ ஸிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த பழத்தின் விலை இரண்டு மடங்கு ஏறிவிட்டது. ரஷ்யா உக்ரைனை தாக்குகிறது. இதில் நியூ ஸிலாந்து கிவிக்கு என்ன வேலை? தெரியவில்லை. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், நெல் ஆகியவை இனி கிடைக்காததால் விலைவாசி ஏறி ஐரோப்பாவின் பொருளாதாரம் வீழ்கின்றன நிலையில், பாவம் நியூ ஸிலாந்து கிவி, தென் அமெரிக்க மாங்காய் ஆகியவை பழி ஏற்றுக்கொள்கின்றன.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் உலகத்தில் எவனும் ரஷ்யாவிடமிருந்து எதுவும் வேண்டாம் என்று கூறிக்கொண்டிருக்கையில் ஒரு நாடு மட்டும் மிக குறைந்த விலைக்கு பல டன் எண்ணெயை வாங்கிக்கொள்கிறது. போர் நடத்த அவனுக்கு காசு வேண்டாமா பாவம். யாராவது போனி செய்தால் தானே அவன் குண்டு போட்டு சுட்டு கொல்ல உதவியாக இருக்கும். அதையும் விட்டுவிடலாம். அவனிடம் குறைந்த விலையில் வாங்கினாலும் மக்களுக்கு முன்பு விற்றதோடு உயர்வான விலைக்கு தான் விற்கிறார்கள் அந்த நாட்டில். "வாங்குவதும் விற்பதும் அரசாங்கம் இல்லை. தனியார் தான். " என்று கூறிகிறார்களாம் நாட்டை ஆளும் புண்ணியவான்கள். அரசாங்த்தின் ஆணிவேர்கள் ஒவ்வொன்றாய் கூறுபோட்டு தனியாரிடம் விற்றுவிட்டு, விலைவாசிக்கு நாங்கள் காரணம் இல்லை தனியார் தான் என்கிறதாம் அந்த நாட்டின் அரசாங்கம். 

இன்னோரு நாட்டில் என்ன கதை தெரியுமா? நோய் தொற்றுக்கு காரணமான கிருமியும் அங்கே இருந்து வந்தது தான், அந்த நோய் தடுப்புக்காக அணியப்படும் முகக்கவசங்கள் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி தயாரித்து ஏற்றுமதி செய்வதும் அந்த நாடு தான், நோயை கண்டறியும் test kit வருவதும் அதே நாட்டிலிருந்து தான், மருந்து தயாரிப்பதும் அவர்கள் தான். இரண்டு வருடங்கள் உலகமே lock down இல் இருக்கும் போது வீட்டிற்கு தேவையான பல பொருட்களை home delivery செய்யும் பெரிய பெரிய online வியாபாரிகளின் தயாரிப்பு கூடங்கள் இருப்பதும் அதே நாட்டில் தான்.

தேவையே இல்லை என்றாலும் வாங்கி சேர்த்து வைத்துக் கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள், நம்மிடம் இருந்தாலும் இலவசமாக தருகிறானே என்பதற்காக வாங்கி கொள்பவர்கள்,  கருவேப்பிலை கொத்தமல்லி இலவசமாக கொடுத்தால் போதும் நூறு ரூபாய் காய்கறிகளை இருநூறு ரூபாய்க்கு விற்கலாம் என்று எண்ணுபவர்கள், சோப்பிற்கு காதணி, காபி தூளிற்கு எண்ணெய் கிண்ணி, தேங்காய் எண்ணெய்க்கு பிஸ்கட் டப்பா, போல, சம்பந்தம் இல்லாத, தேவை இல்லாத இலவச பொருட்கள் மூலம் தங்கள் பொருட்களை விற்க நினைக்கும் வியாபாரிகள், குளிர்பான மூடியில் இருக்கும் எண்ணிற்கு குலுக்கல் முறையில் இருசக்கர வாகனம் தரப்படும் என்ற விளைபரத்தை நம்பி குளிர்பான கடலில் மிதப்பவர்கள், ஆணி மாதம் விலை ஏற்றப்பட்டது தெரியாமலே ஆடி மாதம் தள்ளுபடியில் அள்ளி குவிப்பவர்கள், அரசியல் பேசுகிறேன் என்ற பெயரில் “உங்க தலைவர் ஏன் டா இந்த தப்பு பண்ணாரு” என்ற கேள்விக்கு “போன ஆட்சில அவன் அப்படி பண்ணப்போ நீ கேட்கல. இப்போ ஏன் கேக்குற” என்று தன் தவறுக்கு பதில் கூறாமல் பிறர் செய்த தவறை சுட்டிக்காட்டி விட்டு ஓடிவிடும் தலைவர்கள் தொண்டர்கள். இப்படி பட்ட மக்களாக நாம் இருக்கும் வரை, எண்ணெய்க்காக நடக்கும் போர்களுக்கும், எல்லைக்காக நடக்கும் போர்களுக்கும், ஆயுதமே இல்லாமல் கண்ணுக்கு புலப்படாத கிருமியால் நடத்தப்பட்ட போர்களுக்கும் நாம் தான் மூலதனம். அந்த போர்களில் சிந்தப்படும் குருதி நம் கையில் தான்.


Comments

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!