மரியாதைக்குரியவரு(ளு)க்கு...

 மனித வாழ்க்கையின் அடிப்படையாக திகழும் முக்கியமானவற்றில் ஒன்று - உறவுகள். அணு அளவே ஆனாலும் ஆதியில் உயிர் கொடுத்தவன், தொப்புள் கொடி வழியே ஊண் கொடுத்தவள் முதல் அந்தத்தில் கொள்ளி போடும் கைகள் வரை எத்தனை உறவுகள். உறவுகள் என்று பன்மையில் கூறினாலும் உறவு என்பது இருவரை மட்டும் தான் குறிக்கும் என்பது என் கருத்து. மூன்று மகள்கள் இரண்டு மகன்களை பெற்றெடுத்த தாயாக இருந்தாலும், ஒவ்வொரு பிள்ளையுடனும் இருப்பது ஒரு தனி உறவு தான். அதே போல் பள்ளி கல்லூரி பருவத்தில் ஐந்து பேர் கொண்ட குழுவாக சுற்றி திரிந்தாலும், அந்த ஐவரில் ஒருவருக்கு ஒருவர் ஒரு தனி புரிதல் இருக்க தான் செய்யும். எனக்கே எனக்கு என்று உயிரில் கலந்து வாழும் உறவாகினும், ஐந்து தங்கைகளில் மூன்றாமவளுடன் கொண்ட உறவாகினும், துணைவனின் சிற்றன்னை என்ற உறவாகினும், பத்து ஆண்டுகளாய் ஒரே வகுப்பறையில் காலம் தள்ளிய உறவாகினும், ஞாயிறு அன்று மட்டும் தெரு முனையில் சந்தித்து பேசும் உறவாயினும், அதற்கு கருவாக இருப்பது இரண்டு மனித உயிர்கள் தான். அந்த உறவுக்கு காரணமாகவும் கருத்தாகவும் இருக்க கூடிய பொருட்களில் முக்கியமானது பரஸ்பர மரியாதை.

மரியாதை என்று கூறியவுடன் , ஒருவர் வந்தால் மற்றொருவர் எழுந்து நிற்பதும், வாங்க போங்க என்று அழைப்பதும் பொருள் இல்லை. இது பரஸ்பர மரியாதை. Mutual Respect என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுவது. ரத்த பந்தங்களை தவிர மற்ற உறவுகள் அனைத்திற்கும் பொதுவான வழக்கம் முதல் சந்திப்பு, அறிமுகம், ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து கொள்ளுதல், கருத்து பரிமாற்றம், புரிதல், விட்டுக்கொடுத்தல், சகித்துக் கொள்ளுதல் என படிப்படியாக முன்னேறி வருவது. ரத்த சொந்தங்களுக்கு முதல் இரண்டு நிலைகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மற்றவைகள் நிச்சயம் பொருந்தும். பின் வருபவற்றை படிக்கும் போது ஏதோ ஒரு உறவை மனதில் வைத்துக் கொண்டு படித்து பாருங்கள். கணவன், மனைவி, தம்பி, தங்கை, மைத்துனன், மதனி, அக்கா, அத்திம்பேர், தாய் மாமன், முறை மாமன், பங்காளி, கல்லூரியில் கிடைத்த மச்சான்- மச்சி, நண்பேன்டா, முகப்புத்தகம் வழியே மட்டும் தெரிந்த முகம், முகமே தேவை இல்லாமல் குரல் மட்டுமே கொடுக்கும் கைபேசி உறவு, வெறுப்பில் தொடங்கி விருப்பத்தில் நிற்கும் உறவு, பார்த்தவுடன் தீப்பொறியாக ஈர்புகொண்டு தற்போது வெறுமையின் உச்சத்தில் நிற்கும் உறவு, தொலைந்து விட்டதாக நினைத்துக் கொள்ளும் உறவு, கிடைத்தும் அனுபவிக்க முடியாத உறவு. ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு படித்து பாருங்கள்.

சந்தித்து அறிமுகம் பெற்ற பின் ஒரு ஆர்வம் பூக்கும். இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான் அந்த உறவு கொள்ளப் போகும் முக்கியத்துவத்திற்கான வித்து.  யாராக இருந்தாலும் முதன் முறை பேசி பழக தொடங்கும் போது தங்களுடைய சுய ரூபத்தை காண்பிப்பதில்லை. அனைவரும் பொய் வேடம் போடுகிறோம் என்று சொல்லவில்லை. இருப்பினும் புதிதாக இருக்கும் அந்த நபரிடம் தன்னுடைய சுபாவத்தில் இனிமைக்கு முரணாக இருக்கும் பக்கங்களை காட்ட விரும்புவதில்லை. சுருக்கமாக சொன்னால் நாம் ஆர்வம் கொண்ட நபருக்கு பிடிக்கும்படியாக நம்மை காட்டிக்கொள்ள முயற்சி செய்வோம். பெரும்பாலான நேரங்களில் அந்த நபரும் அதையே செய்வார். ஒருவருக்கு ஒருவர் தங்களை இனிமையின் உருவமாக காட்டியபின் நிச்சயம் அந்த உறவு அடுத்து ஒரு சுவாத்திய நிலையை அடையும். இருவரும் மற்றவர் மீது உரிமை கொண்டாட தொடங்கும் நேரம். படிப்படியாக, தாங்கள் இனிமையின் உருவமாக இருக்க முயற்சி செய்வதை குறைத்துக்கொள்ள தொடங்கிவிடுவர். மற்றவர் மீது கொண்ட உரிமையில் தன்னுடைய உரிமையை நிலைநாட்ட நினைக்கும் போது, தொடக்கத்தில் கொடுத்த பிம்பம் நிரந்தரம் இல்லை என்று தெரியவரும். “ஆசை அறுபது நாள்” என்ற பழமொழி உண்மையாவது இந்த இடத்தில் தான்.

சில உறவுகள் இந்த இடத்தில் அறுபட்டுவிடும். பல உறவுகள் இங்கேயே நின்றுவிடும். அவள்(ர்) அப்படித்தான் என்ற உண்மை, புரிதலாக மாறி இதற்கு மேல் நெருங்க வேண்டாம், தயிர் சாதத்திற்கு ஊறுகாயை போல இருந்து கொள்ளலாம் என்று முடிவாகிவிடும். இதை தாண்டி செல்வது மிக சில உறவுகள் தான். முக்கியமாக தம்பதிகளாக கடக்க வேண்டிய முள் பாதை இங்கிருந்து தான் ஆரம்பம். கூட்டு குடும்பங்களில் ஓரகத்தி, நாத்தனார், மைத்துனர், அண்ணி, மச்சினிச்சி, மைத்துனி, மாமன், பங்காளி , சகலை என ஒன்றுகூடி வாழ்ந்த காலங்களில் ஒவ்வொரு உறவும் இந்த படியை தாண்டி முன்னேற தான் வேண்டியிருந்தது. எதிர்பார்ப்புகள் மற்றும் வரையறைகள் இல்லை என்ற ஒரே சுதந்திரத்தால் நட்பு என்ற ஒரே உறவு மட்டும் இந்த நிலையை எளிதில் கடந்துவிடுகிறது.

ஒருவர் உண்மையில் என்ன சுபாவம் கொண்டவர், எது எது அவருக்கு பிடிக்கும், விருப்பம் இல்லாத விஷயங்களை எப்படி எதிர்கொள்வார், அவருடைய விருப்பும் வெறுப்பும் என்னிடம் எப்படி பாய்கிறது என்பது போன்ற குறிப்புகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டே போகும். உறவின் அடிப்படையான புரிதல் இந்த கேள்விகளின் விடைகளில் தான் வந்து சேரும். புரிதல் இரண்டு பக்கங்களிலும் இருக்க வேண்டும். இல்லை என்றால், புரிந்து கொண்ட ஒரு ஜீவன் மற்றொன்றை சகித்துக் கொள்ள பழகிக் கொள்ளும். இருவரில் ஒருவர் மட்டுமே அனைத்தையும் சகித்துக் கொள்ளும் நிலை என்றால் அந்த உறவு வலிகளுக்கு மட்டும் தான் வழி. சில விஷயத்தில் நான் சகித்துக் கொள்கிறேன் சில விஷயத்தில் நீ சகித்துக் கொள் என்பதும் ஒரு புரிதல் தான். இருவது ஆண்டுகளை கடந்த  தம்பதிகள் பலர் இப்படி தான் தங்கள் உறவின் உயிரை பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். இந்த புரிதல் வருவதற்குள் பற்பல குருக்ஷேத்திர போர்கள் நடப்பதை யாரும் தடுக்க முடியாது. பல இடங்களில் சில போர்கள் உறவையே முறித்து விடுகிறது. 

பரஸ்பரம் என்ற வார்த்தை, உறவுக்கு மற்றொரு சொல் என வைத்துக்கொள்ளலாம். பரஸ்பர மரியாதை, மேலே கூறிய படிகளை தாண்ட துணை. முன்னுக்கு பின் முரணாக ஒருவர் நடந்து கொள்ள, உறவில் மாற்றங்கள் தெரிய தொடங்கியவுடன் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று எண்ணி குரோதம் கொள்வதற்கு பதில், ‘அது தான் அவளு(ரு)டைய இயல்பு என்று புரிந்து அதற்கு மரியாதை அளிக்க வேண்டும். 'ஆர்வம் இருந்ததால் தான் ஈர்ப்பு வந்தது. என் மீது கொண்ட ஈர்ப்பால் தன் இயல்பை மறைத்து எனக்கு பிடித்தபடி காட்டியவள்(ர்), இப்போது என்னிடம் இருக்கும் உரிமையினால் அவளு(ரு)டைய இயல்புக்கு போக நினைக்கிறாள்(ர்).’ இவற்றை உணரும் போது மரியாதை தானே பிறந்துவிடும். அந்த புரிதலோ மரியாதையோ, ஏதோ ஒன்றின் காரணமாக விட்டுக்கொடுத்து போகவும் முடியும். 

“விட்டுக் கொடுப்பார் கெட்டுப் போவதில்லை” என்பது உண்மைதான். ஆனால் இருவரில் ஒருவர் மட்டும் எப்போதும் விட்டுக் கொடுத்து கொண்டே இருப்பதும் கொடுமை தான்.  ‘அவள்(ர்) விட்டுக்கொடுக்கிறாள்(ர்)’ என்பதை கண்டு கொண்டு அதற்கான மரியாதை கொடுக்க வேண்டும். ‘தனக்காக என்ன என்ன செய்கிறாள்(ர்). எப்படி எப்படி மாறி இருக்கிறாள்(ர்)’ என்பதை உணரவில்லை என்றால் அத்தகைய அன்புக்கு தகுதியற்றவர் ஆகிவிடுகிறார்கள். விட்டுக் கொடுத்தோ சகித்துக் கொண்டோ போக முடியவில்லை என்றால் அதை தனக்காக செய்கிறவருக்கு அங்கீகாரம் கொடுப்பதும் பரஸ்பர மரியாதையின் அடையாளம்.

‘எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் உறவு’ என்ற பெயர் தாய்மைக்கு கூட கிடைப்பதில்லை. நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பதும் சாத்தியமில்லை. நமக்கு எதிர்பார்ப்பு இருப்பதை அறிந்து அதற்கான முயற்சி செய்து அதை பூர்த்தி செய்யும் போது எத்தனை மகிழ்ச்சி அடைகிறோம் என்பதை, அதே நபர் எதிர்பார்த்தது போல் நடக்காமல் போனால் கோபம் கொள்ளும் நேரத்தில் நினைத்துக்கொள்ள வேண்டும். ‘அன்று செய்தவளா(ரா)ல் இன்று இயலவில்லை. அது பரவாயில்லை’ என்று ஒப்புக் கொள்ளுதல் பரஸ்பர மரியாதையின் ஒரு பிரதிபலிப்பு.

நம் உணர்வுகள் அடிபட்டு மனம் வேதனை கொள்ளும் நிலையிலும் ‘ஏதோ ஒரு காரணத்திற்காக மறைக்கிறாள்(ர்). கொஞ்சம் பொறுத்து பேசி கொள்ளலாம்’,  ‘காரணமில்லாமல் கடிந்து கொள்ள மாட்டாள்(ர்)’, ‘இப்படி செய்ய கூடிய ஆள் இல்லையே இவள்(ர்)’ என்பதை போன்ற நம்பிக்கைகள் வர அந்த நபரின் மீது அளவற்ற அன்பு வேண்டும். அந்த அன்பிற்கு மரியாதை என்ற அங்கீகாரம் வேண்டும். 

இதுவரை ஏதோ ஒரு உறவை மனதில் வைத்து படித்திருந்தால் மேல் கூறியவற்றில் சில பொருள்கள் விளங்கி இருக்கும். தொடர்பு படுத்தி பார்க்க முடிந்திருந்தால் நீங்கள் நினைத்த உறவு சாதாரண மனித வாழ்க்கையின் சூழலில் இருக்கும் உறவு தான். இத்தனை நேரம், அந்த உறவில் உங்களுக்கு மரியாதை கிடைத்ததா, உங்களை புரிந்து கொண்டார்களா, உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் ஆசைகளுக்கும் நியாயம் வழங்கினார்களா என்று எண்ணிய நீங்கள், மறுபடி அதே வரிகளை, நீங்கள் நினைத்தவரின் இடத்தில் நின்று படித்து பாருங்கள். அவரு(ளு)டைய எத்தனை எதிர்பார்ப்பு, ஆசைகளை அறிந்திருக்கிறீர்கள், அவற்றில் எத்தனையை பூர்த்தி செய்தீர்கள், எத்தனை முறை  சண்டைக்கு பிறகு புரிதலுடன் ஆறுதலாக இருந்திருக்கிறீர்கள், எத்தனை முறை அவரி(ளி)ன் கருத்துகள்  உங்களுக்கு முரண்பாடாக இருந்த போதும் மனமார மரியாதை கொடுத்து அதை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதையும் நினைத்து பாருங்கள்.

‘முன்னாடி அப்படி இருந்த.. இப்போ ரொம்ப மாறிட்ட’ என்ற குறை கிட்டத்தட்ட எல்லா உறவிலும் வருவது. அது சாதாரணம் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதை அனுபவிக்கும் போது வலி இல்லாமல் இல்லை. ‘மாறிவிட்டாய் மாறிவிட்டாய்’ என குறை கூறுவதை விட்டுவிட்டு மாற்றத்திற்கு என்ன காரணம் என்று அறிந்தால் மண்டை வலி குறைய வாய்ப்பு உண்டு. சலிப்பு தட்டியதால் மாறிவிட்டார்கள் என்றால் உறவை உயிர்ப்பிக்க முயற்சி செய்யலாம்.  இல்லை மாறுவதற்கு நீங்களே காரணமாக இருக்கிறீர்களா என்று அறிய வேண்டும். சமநிலையில் நின்று சரி செய்ய பார்க்கலாம். இவற்றை எல்லாம் ஒருவர் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் ஒருவர் தான் செய்கிறார் என்றால் மற்றொருவர் அதற்கான மரியாதையை நிச்சயம் அளிக்க வேண்டும். 

 ‘எனக்கு வந்தா ரத்தம். உனக்கு வந்தா தக்காளி சட்னி’ என்ற சுபாவம் கொண்டவராக நீங்கள் இருந்தால் தயவு செய்து புது உறவுகள் தேட வேண்டாம். இருக்கும் உறவுகளையும் விட்டு தள்ளியே இருங்கள். உலகம் இன்று இருக்கும் நிலையில் உங்களை போன்ற சுயநலவாதிகளுடன் போராட மனதிடம் மற்றவர்களிடம் இல்லை. அன்பு கொண்ட உறவுக்கு தேவை நம்பிக்கை, பாதுகாப்பு, புரிதல், அங்கீகாரம், உரிமை. ஒருவருக்கு ஒருவர் தங்களின் கருத்துகளுக்கும் தேவைகளுக்கும் இடம் கொடுத்து மரியாதை அளிக்க வேண்டும். அவளி(ரி)ன் கேள்விக்கு பதிலாக நீ இல்லாத வரை உன்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காது.  


Comments

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

செயற்கை நுண்ணறிவின் கடவுள்

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!