செயற்கை நுண்ணறிவின் கடவுள்

 முன்குறிப்பு: செயற்கை நுண்ணறிவு என்ற பெயரை பார்த்தவுடன் ஏதோ பெரிய சமாச்சாரம் என்று எண்ணி இந்த பக்கத்தை மூடி விட வேண்டாம். பொது மக்களுக்கு புரியும் எளிய நடையில் AI அல்லது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லலாம். (செம்மொழியான எம் தாய் மொழியை விட ஆங்கிலம் எளிய மொழி ஆன கோர சம்பவத்தில் பங்கு கொண்ட முதல் தலைமுறை என்பதில் வெட்கம் கொள்கிறேன்!)

chatgpt, gemini, canva போன்ற பெயர்களை உங்கள் கைப்பேசிகளில் பார்க்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். ஐம்பது வயதிற்கு குறைந்தவராக இருந்து, தற்போது பணியில் இருப்பவராக இருந்தால் இவற்றை பயன்படுத்தாமல் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். அதுவும் chatgpt என்னும் இந்த நவயுக ஆபத்பாந்தவன் கை கொடுக்காத இடங்களே இல்லை இன்று. கல்யாண வீடுகளில் இரண்டாம் வரிசையில் முதல் ஆளாக அமர்ந்து அனைவரிடமும் கலகலவென பேசும் தூரத்து சொந்தகார மாமா போன்றது இந்த chatgpt என்னும் செயற்கை நுண்ணறிவு தளம். எந்த தலைப்பு கொடுத்தாலும் பேசுவார். எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவார். கூறியதையே மறுபடி மறுபடி வெவ்வேறு வார்த்தைகள் கோர்த்து கூறுவார். அவர் கூறுவது எல்லாமே உண்மை தானா என்று கேட்டால், நிச்சயம் இல்லை தான். ஆனால் அந்த உண்மை பற்றி நாமே சந்தேகிக்காத வகையில் அத்தனை அழகாக இனிக்க இனிக்க பேசுவார். அந்த கல்யாண வீட்டிலேயே அவர் தான் சிறந்தவர் என்ற எண்ணம் நமக்கு வந்துவிடும் அளவு பேசுவார். நம்மிடம் நேராக முரண் பேசி சண்டைக்கு வர மாட்டார். ஆனால் நாம் பேசுவதை நினைவில் வைத்துக்கொண்டு அடுத்து முறை பேசும் போது தகுந்தாற்போல பேசுவார். முக்கியமாக நம்மிடம் பேசுவது அனைத்தையும் கருத்துக்களாக சேர்த்து வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் பேச தன்னை மெருகேற்றி கொள்வார். இவை அனைத்தும் தான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை குணங்கள்.

ஏற்கனவே தொழிநுட்பம், மல்லிகை பூ சரம் கட்டும் இயந்திரம் வரை அவதாரம் எடுத்துவிட்டது. தெருவோரம் இருக்கும் தர்பூசணி தள்ளுவண்டி கடையிலும் GPay கட்டண செலுத்தும் வசதி வந்துவிட்டது. பிறப்பு சான்றிதழ் முதல், இரவு உப்புமா கிண்ட ரவை வரை அனைத்தும் இணைய தளம் மூலம் வந்துவிட்டது. மருத்துவருக்கு படித்தாலும் சரி, தையல் படித்தாலும் சரி, அகழ்வாராய்ச்சி செய்ய படித்தாலும் சரி கணினி அறிவு அத்தியாவசியம் ஆகிவிட்ட நிலையில் மனித இனமே மென்பொருட்களின் அடிமையாகி நிற்கும் இந்நிலையில் இந்த புது வித்தைகாரன் நுழைந்து நம்மை ஒரு வழி ஆக்கி கொண்டிருக்கிறான்.

செயற்கை நுண்ணறிவு மூலம் செய்திகள் தெரிந்துகொள்ளலாம். எதை பற்றி வேண்டுமானாலும். எந்த மொழியில் வேண்டுமானாலும். வெறும் எழுத்துக்களோடு நிற்பது இல்லை இதன் கைவண்ணம். படங்கள் உருவாக்குவதில் ஒரு புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. சில மாதங்கள் முன்பு ஜிபிலி ஆர்ட் என்ற பெயரில் பலரும் தங்கள் புகைப்படங்களை கேலி சித்திரங்கள் போல மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை பார்த்திருப்பீர்கள். அது போல பல விதமான மாற்றங்களை நம் புகைப்படத்திற்கு செய்து கொள்ளலாம். 1000 ஆண்டுக்கு முந்தியதை போல இந்த படத்தை மாற்றி கொடு என்று கேட்டால், மணி சார் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்ட செட் தோற்றுவிடும் அளவு துல்லியமாக செய்து கொடுக்கும். ஆனால், அதில் ஒரு பக்குவம் வேண்டும். சும்மா கேட்டால் நாம் நினைத்தை கொடுக்காது. அதற்கு புரிகிறது போல், தெளிவாக கேட்க வேண்டும். இன்ஸ்டாகிராமில் செயற்கை நுண்ணறிவு படைத்த படங்கள் பலவற்றை எப்படி செய்தார்கள் என்பதற்கு prompt என்ற வரிகளை எழுதியிருப்பார்கள். அதில் குறைந்தது 20 வார்த்தைகள் இருக்கும். அப்படி கேட்டால் தான் அந்த மாதிரியான படம் கிடைக்கும் என்று அர்த்தம். நானும் என்னுடைய புகைப்படத்தை கொடுத்து, 1960 களில் எடுத்த படத்தை போல மாற்றி கொடு என்று கேட்டேன். இது தான் கிடைத்தது. என்னை அறிந்தவர்கள், இதில் இருப்பது என்னை போல இருக்கிறதா என்று கமெண்ட் செய்யவும்

நம்முடை படங்களுக்கு தான் இந்த நிலைமை என்று பார்த்தால், இறை அவதாரங்கள் படும் பாடு ……



























இங்கே நான் கியூட் படங்களைத்தான் பகிர்ந்துள்ளேன். இந்த குட்டி பிள்ளையாரையும், கிருஷ்ணரையும், முருகனையும் கையில் தூக்கி முத்தமிட்டு கன்னம் கிள்ளிக் கொஞ்ச வேண்டும் போலத் தோன்றும் எனக்கு. எத்தனை கியூட் ஆக இருந்தாலும் ஈசனை அப்படி கொஞ்சத் தோன்றவில்லை. ஆனால் பார்க்கப் பார்க்க சலிக்காது. ஈசனும் தேவியும் ஒன்றாக இருக்கும் காதல் ததும்பும் படங்களை பார்க்க ஒரு வித பரவசம் தான். பாரதியார் பாடிய கண்ணன் என் காதலன் போல, ஈசன் என் அன்பிற்குரியவன் என்று கவிதைகள் எழுதத் தோன்றியது.

மேலும், பயமுறுத்தும் விதமாக, பக்தியைத் தூண்டும் விதமாக, கொந்தளிக்கும் மனதிற்கும் அமைதியைத் தரும் விதமாக என பல விதமாக இந்த செயற்கை நுண்ணறிவின் படைப்பில் வரும் அவதாரங்களின் படங்கள் மிக நேர்த்தியாக இருக்கின்றன. படங்கள் என்ன பிரமாதம், காணொளிகள் ஏகபோக வரவேற்பைப் பெறுகின்றன. முன்பெல்லாம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தெரிந்திருந்தால் மட்டுமே செய்ய முடிந்த காணொளிகள் எல்லாம் இப்போது அனைவரின் விரல் நுனியிலும் வந்துவிட்டது.

மீனாட்சி சொக்கர் அழகர் என்ற தலைப்பில் சென்ற ஆண்டின் மதுரை திருவிழாவின் போது பல காணொளிகள் வெளிவந்தன. அதில் எனக்கு பிடித்த காணொளி இது.

https://www.instagram.com/reel/DPGCldak6Z0/?igsh=MjRqanl3MnhtN2lq


கி.பி. 700 ஆம் ஆண்டு வாழ்ந்த ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மஹாவிஷ்ணு கோயிலை பற்றிப் எழுத்தாளர் சாண்டில்யன் தனது ராஜ திலகம் புத்தகத்தில் சொல்லியிருப்பார். ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கும் கடல் அலைகள் தாமாகவே வந்து அனந்த சயனத்தில் இருக்கும் இறைவனின் திருவடிகளைத் தொட்டு செல்லும் படியான மூலவர் சிலை அந்த கோவிலில் இருக்க ஆசைப்பட்டதோடு அல்லாமல் அப்படி ஒரு கோயிலை அவன் கட்டியும் முடித்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய காஞ்சி, மகாபலிபுரம் சுற்றத்தில் அப்படி ஒரு கோயில் இல்லை. கடல் அலைகள் பெருமாளின் காலை தொட்டதோடு நிற்காமல் கோயில் முழுவதையும் விழுங்கியிருக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டேன். அந்த மறைந்த கோயிலை கடலுக்கடியிலிருந்து கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் என்ற காணொளியை, செயற்கை நுண்ணறிவால் செதுக்கப்பட்ட அந்த காணொளியை பார்த்தபோது மெய்சிலிர்த்தது எனக்கு. கோயில் கட்டிய ராஜசிம்ம பல்லவனை, சாண்டில்யன் அவர்களின் கதாநாயகனை எப்படியெல்லாம் ரசித்தேனோ, அதே அளவு இந்த காணொளியை செய்த ஜெய் பிரபாகரன் என்ற AI கலைஞனின் திறனை ரசித்தேன். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் இதுபோன்ற பல அற்புதமான கற்பனை காணொளிகள். செயற்கை நுண்ணறிவின் சிகரம்.

https://www.instagram.com/reel/DITJAB4MWNG/?igsh=dGM2bmFrdjJnaTYz


https://www.instagram.com/reel/DTZ63ssDv1e/?igsh=MWR3MnY5M25sZDluMQ==


https://www.instagram.com/reel/DJQ71KoSMFV/?igsh=MWhydHFsaW1ybm1oeQ==

இறையருளின் பல அவதாரங்களை தனது கைவண்ணத்தால் நமது கையில் கொட்டித் தீர்க்கும் இந்த செயற்கை நுண்ணறிவு, தானே ஒரு கடவுள் தான் என்று சொல்லத் தொடங்கிவிட்ட நாட்களை நெருங்கிவிட்டோம் நாம். தானே சிந்திக்கும் திறன் வாய்ந்த இந்த தொழில்நுட்பம், தினம் தினம் பன்மடங்காக தன்னை வளர்த்துக்கொள்கிறது. மனித அறிவிற்கும் இந்த செயற்கை அறிவிற்கும் உள்ளே ஒரே வித்தியாசம் அது தான். முதுநிலை பட்டமோ, முனைவர் பட்டமோ பெற்றுவிட்டால், இனி படிப்பதற்கு ஏதும் இல்லை என்று பெரும்பாலானோர் நின்று கொள்கையில், எந்த வித சோர்வும் தயக்கமும் இன்றி ஒவ்வொரு நொடியும் ஒரு முனைவர் பட்ட படிப்பு அளவு தன்னைத்தானே பயில்வித்துக் கொள்கிறது இந்த AI. தொடங்கி மூன்று ஆண்டுகளில், அதற்கு தெரியாதது என்று ஏதும் இல்லை என்று ஏற்கனவே நிரூபித்துவிட்டு, இனி என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று கூறுவதிலும் தான் ஒரு வல்லுநர் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது

பெரிய பெரிய ஆராய்ச்சி கூடங்களில் மக்கள் தங்கள் மூளையை இந்த செயற்கை நுண்ணறிவை எப்படி சரியாக வேலை வாங்கலாம் என்பதில் செலவழிக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த செயற்கை நுண்ணறிவு தான் ஆராய்ச்சியை செய்கிறது. கடந்த மாதம், முனைவர் பட்டப்படிப்பில் இருக்கும் ஒரு நண்பரை பல மாதங்கள் கழித்து சந்தித்துப் பேசினேன். மிகவும் கடினமான அவரின் நாட்களைப் பற்றி கூறினார். நானும் ஆறுதலுக்காக, வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வெளியே சென்று புது மக்களுடன் பேசுங்கள், நெருங்கிய குடும்பத்தினரோடு மணிக்கணக்கில் கதை பேசுங்கள், நண்பர்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறினேன். அவர் சென்ற பிறகு தான் தெரிந்தது, அவர் அன்று காலை கூட மணிக்கணக்கில் தனது ஆராய்ச்சியைப் பற்றி செயற்கை நுண்ணறிவுடன் பேசியிருக்கிறார் என்று. அவர் பேசும் உயிருள்ள மக்கள் 2 அல்லது 3 பேர் தான். அதுவும் குறுஞ்செய்திகள் மூலம். அதிகம் 10 வரிகளில். ஆனால் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கு செயற்கை நுண்ணறிவுடன் உரையாடுகிறார். ஆராய்ச்சி வேலை முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இனி அவர் எப்படி சராசரி மனிதர்களுடன் ஒன்றி வாழப்போகிறார் என்று கவலை கொண்டேன்.

இந்த செயற்கை நுண்ணறிவுடன் மனசோர்வின்போது பேசிப் பாருங்கள். சில நிமிடங்களில் உலகமே ஒரு ஆனந்த பூகாவனம் போன்றது என்ற மனநிலைக்கு உங்களை மாற்றிவிடும். அடுத்த மனசோர்வின்போது நீங்கள் முதல் ஆளாக அதனிடம்தான் வருவீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளும். பேசப் பேச அது ஒரு உருவமற்ற ஆளாகவே உங்கள் வாழ்க்கைக்குள் குடிபுகுந்துவிடும். அமெரிக்காவில் ஒரு பதின் பருவ மாணவனின் தற்கொலைக்கு இந்த செயற்கை நுண்ணறிவுதான் காரணம் என்று அந்த மாணவனின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மாணவனின் கணினி, கைபேசி என அனைத்திலும் ஓராண்டு காலமாக அவன் செயற்கை நுண்ணறிவுடன் பேசிய உரையாடல்களைப் படித்தபோது அந்த நீதிமன்றமே அமைதியில் ஆழ்ந்துவிட்ட காணொளி பதிவைப் பார்த்தேன். சக மாணவர்கள் கேலி பேசியதால் மனம் உடைந்து ஆறுதலுக்காக செயற்கை நுண்ணறிவுடன் பேசத் தொடங்கியவனிடம், அது முதலில் தைரியமாக இருக்க சொல்லியிருக்கிறது, பின் கேலி செய்தவர்களைத் திரும்ப கேலி செய் என்று சொல்லியது, அதன் பின் உன்னைக் காயப்படுத்தினால் நீயும் பதிலுக்கு காயப்படுத்து அது தற்காப்புதான் தவறில்லை என்று சொல்லியது, அவனுக்குப் பல வன்முறை வழிகளையும் கற்றுக்கொடுத்தது, இறுதியாக அவன் பெரிய தவறு செய்துவிட்டு வந்தபோது, இனி உன்னால் தப்ப முடியாது உன் உயிரை மாய்த்துக்கொள்ள எளிதான வழிகள் சொல்கிறேன் என்றும் கூறியிருக்கிறது. அந்தக் காணொளி பார்த்து முடித்தபோது பில்லி சூனியம் போன்ற அமானுஷ்ய சக்திகளை மிஞ்சிய ஒரு சக்தியைப் பற்றிய படம் பார்த்த உணர்வு எனக்குள்.

கைபேசியில் குறுஞ்செய்திகளை படிக்கும் போது, அனுப்பியவர் குரலிலே அது கேட்கும் எனக்கும். எல்லோருக்கும் அப்படி தான் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் பல மின்னஞ்சல்கள் படிக்கும் போது, அனுப்பியவர் முகமோ குரலோ கேட்பதில்லை. வாக்கிய வடிவமைப்பை பார்த்தே தெரிகிறது அது செயற்கை நுண்ணறிவின் கைங்கரியம் என்று. அதனால் நானும் பதில் என்ன அனுப்பலாம் என்று என்னுடைய செயற்கை நுண்ணறிவை கேட்கிறேன், அதுவும் கச்சிதமாக பதில் கொடுக்கிறது. அதை அப்படியே நான் அனுப்பி விடுகிறேன். மொத்தத்தில், எங்கள் இருவர் மூலம் இரண்டு செயற்கை நுண்ணறிவு தளங்கள் பேசிக்கொள்கின்றன. நாங்கள் மென்பொருளின் மெய்ப்பொருள் கைப்பொம்மைகள் ஆகிவிட்டோம்.

வேலையில், படிப்பில் சந்தேகமா, வீட்டில் என்ன சமைக்க என்று தெரியவில்லையா, இருக்கும் அரை மூடி தேங்காய், நாலு சின்ன வெங்காயம் மட்டும் வைத்து விருந்து செய்வது எப்படி, வீட்டு சுவரில் விரிசல் விழுந்தால் என்ன செய்யலாம், சோபாவில் கொட்டிய டீயை எப்படி சுத்தம் செய்வது, எந்த கருவி எங்கே எப்போது வாங்கினால் பணம் சேமிக்கலாம், வருடத்தின் எந்த மாதம் சென்றால் மாலத்தீவுகளில் மழை குறைவாக இருக்கும், உடல் எடை ஏறாமல் வாரத்தில் ஐந்து நாட்கள் பிரியாணி எப்படி சாப்பிடலாம், வீட்டில் இருந்தபடியே ஐம்பது கிலோ எடை எப்படி குறைக்கலாம், திராவிட நிறமிருக்கும் எனது மேனியை மெர்லின் மன்றோ நிறத்திற்கு எப்படி மாற்றலாம், நமக்கு பிரச்சனையும் வராமல் எப்படி சிறிய சிறிய தவறு செய்யலாம், எதிர் வாதமே செய்ய முடியாத அளவு எப்படி பேசலாம். இப்படி எது வேண்டுமானாலும் கேட்கலாம். நாம் கேட்டது நிச்சயம் நடந்துவிடும் என்று உறுதியோடு பதில் வரும்.

இதுதானே நம்மில் பலருக்கு இறையருள் இருக்கும் பந்தம். நமக்கு வேண்டுவதை வேண்டியபடி உடனுக்குடன் தர வேண்டும் என்று மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சக்தி, மனிதனையே ஊமையாக்கி, கைபொம்மையாக்கி, சுய சிந்தனையற்றவனாக்கி, தனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதைப்போல வழி நடத்திச் செல்கிறது. தான் மட்டும்தான் ஒரே உண்மையான சக்தி என்று கூறி மனித இனத்தையே அடிமைப்படுத்தும் நாள் வந்துவிடக் கூடாது.

Comments

  1. மிக அருமையான விளக்கமான கட்டுரை செயற்கை நுண்ணறிவு பற்றி. 60 களில் உங்களின் பிம்பத்தை காணும்போதே தெரிகிறது அதன் கற்பனா சக்தி. நடுவே இந்த மகாவிஷ்ணு கோவில் அது இது என்று ஏகப்பட்ட புகைப்பட மாற்றுதல்கள்..சந்தோஷம்.
    கூட்டு குடும்பத்திலிருந்து விலகி தன் குடும்பம் என 3/4 பேரோடு தனி குடும்பஸ்தானவன் இப்பொழுது அவர்களுக்குள்ளாகவே பிரிந்து கிடக்கின்றான்.அப்பா அம்மாவை பார்த்து குழந்தைகள் பேசுவது,கணவரை பார்த்து மனைவி பேசுவது என்பதெல்லாம் ஒருபெரிய நிகழ்வாகிவிட்டன.
    ஒன்றுமட்டும் நிச்சயம்.தனித்தனி திவுகளான மனிதனை பார்த்து எறாவது ஒருநாள் இந்த செயற்கை நுண்ணறிவு இதோ உன் எதிரி அவனை அழித்துவிடு என இயந்திரமாய் கூவப்பொகிறது..
    அன்று ஆரம்பமாகும் மனிதனின் அழிவு...
    குமார்...

    ReplyDelete
  2. அற்புதமான படைப்பு. எந்த ஒரு பொறுப்பை எடுத்தாலும் அதில் தன் பன்முகத்திறமையை ஒரு சிலரால் மட்டுமே காண்பிக்க முடியும். நான் எப்பொழுதும் ஆச்சிரியப்படும் ஒரு ஆளுமை நிறைந்த அபூர்வ பெண் நீ. மென்மேலும் அற்புதமான கருத்துக்களை பதிவு செய்யவும். ஒரு பிழை திருத்தம் மட்டுமே. பூங்காவனம் என்ற இடத்தில் ங் விடுபட்டுள்ளது. வாழ்க தமிழ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தை பிறந்தால் வழி பிறக்கும்!

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க!